பேரம்பேசுவதற்கு எஞ்சியிருக்கும் வாய்ப்பு

 November 28, 2023


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாக இருக்கின்ற காரணத்தினால் இவ்வாறான கூட்டணிகள் தொடர்பில் ஏராளமான பேரம் பேசல்கள் இடம்பெறவே வாய்ப்புண்டு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதான வேட்பாளராக அடையாளம் காணப்பட்டாலும் கூட, நிலைமைகள் எவ்வாறு மாற்றமுறும் என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை.
நாடு அரசியல் ரீதியில் ஏதோவொரு வகையில் நெருக்கடி நிலைக்குள் இருக்கின்றது.
ஒரு ஸ்திரமான அரசியல் சூழலை ஏற்படுத்துவது அவ்வளவு சுலபமாகவும் இல்லை.
இந்த நிலையில் இவ்வாறான கூட்டணிகள் அடுத்து வரவுள்ள ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, பெரியளவில் தாக்கம் செலுத்தும் என்பதில் ஜயமில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில் நோக்கினால் தமிழ் மக்களின் வாக்குள் பிரதான பங்கை வகிக்கும்.
ஒரு வேளை, ஜனாதிபதியை தீர்மானிப்பதில் தீர்க்கமான பங்கையும் வகிக்கலாம்.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மூன்று ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் வாக்குகளாக இருந்த 2015 தேர்தலின்போது மட்டும்தான்.
2010 இல், தமிழ் மக்களின் வாக்குகள் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டது.
இறுதி யுத்தத்தின் போது, கோட்டாபயவுக்கு நிகரான பங்களிப்பை கொண்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் வாக்களித்தனர்.
மூன்று தேர்தல்களின் போதும், ராஜபக்ஷக்களை வீழ்த்துதல் என்னும் ஒரேயோர் இலக்கு மட்டுமே தமிழ் மக்களுக்கு முன்னால் இருந்தது.
2015இல், ராஜபக்ஷவை தோற்கடிக்கும் வியூகத்திற்காக, மைத்திரியை தமிழ் மக்கள் ஆதரித்தனர்.
2020இல், கோட்டபாயவை வீழ்த்துவதற்காக தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தனர்.
கடந்த மூன்று தேர்தல்களின் போதும், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றவர்களில் மைத்திரிபால சிறிசேன ஒருவரே வெற்றிபெற்றார்.
ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில் கூட, தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்களில் ஆகக் குறைந்தது, சிறியளவில் கூட முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான்.
அடுத்த ஆண்டு இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தங்களின் வாக்குகளை பிரயோகிக்கப் போகின்றனர்.
யாருக்கு வாக்களிப்பது – எந்த அடிப்படையில் வாக்களிப்பது – எந்த இலக்கில் வாக்களிப்பது? இது வரையில் ராஜபக்ஷக்களை இலக்காகக் கொண்டு மட்டுமே தமிழ் வாக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஒரு வேளை ரணில் விக்கிரமசிங்க போட்டியிடலாம் அல்லது பிறிதொருவர் போட்டியிடலாம் – இந்த நிலையில், கடந்த காலத்தைப் போன்று – எவ்வித இலக்கும் அற்று வாக்களிப்பதா – அல்லது, தமிழ் வாக்குளை, தமிழரின் பேரம் பேசுதலுக்கான கருவியாக கையாள்வதா? தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட எவருமே ஆகக் குறைந்தது தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.
மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் சில விடயங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வம் வெளிப்பட்ட பின்னரும் கூட, அந்த விடயங்கள் இறுதியில் தோல்வியடைந்தன.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால், அடுத்த ஜனாதிபதி தேர்தலையாவது, தமிழ் மக்களால் புத்திசாலித்தனமாக பயன்படுத்த முடியுமா? அதற்கான ஆளுமை தமிழ் கட்சிகளிடம் இருக்கின்றதா?

நன்றி ஈழநாடு 


No comments: