பட்டிக்காட்டு பொன்னையா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 1973ம் வருடம் எம் ஜி ஆர் சொந்தமாக தயாரித்து, இரட்டை


வேடங்களில் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்டது. அந்த வெற்றிக்கு திருஷ்டி பரிகாரமாக இன்னுமொரு படம் வெளிவந்து ரசிகர்களை ஏமாற்றியது. அந்த படம்தான் பட்டிக்காட்டு பொன்னையா. இந்தப் படத்திலும் எம் ஜி ஆர் இரட்டை வேடங்களில்தான் நடித்திருந்தார். ஆனால் இரண்டுமே உப்பு சப்பில்லாத வேடங்கள் !


இவ்வளவுக்கும் படத்தை தயாரித்து இயக்கிவர் பிரபலமான

ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பி எஸ் ரங்கா. இவர் தன்னுடைய விக்ரம் ப்ரொடெக்ஷன்ஸ் சார்பில் சிவாஜி கணேசன் நடிப்பில் தயாரித்து இயக்கிய தெனாலிராமன், நிச்சய தாம்பூலம் படங்கள் வெற்றி படங்களாக வரவேற்கப்பட்டன. ஆனாலும் எனோ சிவாஜியை விட்டு விலகி எம் ஜி ஆரிடம் சென்ற ரங்கா பட்டிக்காட்டு பொன்னையா படத்தை தயாரித்தார். வழக்கமாக தன்னுடைய படங்களுக்கு இசையமைக்கும் எம் எஸ் விஸ்வநாதனை ஒதுக்கி விட்டு இந்தப் படத்துக்கு கே வி மகாதேவனை இசையமைப்பாளராக்கினார்.

கிராமத்தில் விவசாயம் செய்து குடும்பத்துடன் வாழும் பொன்னையா , தன் தம்பி முத்தையாவின் உயர் கல்விக்காக கடன் வாங்கி செலவு செய்கிறான். பட்டணத்தில் கல்வி கற்கும் முத்தையாவுக்கும் உடன் படிக்கும் மேகலாவுக்கு எதிபாராராத விதமாக காதல் மலர்ந்து , அதன் விளைவாக திருமணத்துக்கு முன்னாரே தாம்பத்திய உறவு ஏற்பட்டு விடுகிறது. இதனால் பெற்றோர்களின் அனுமதி இன்றி முத்தையா மேகலாவை திருமணம் செய்கிறான். ஆனால் மேகலாவின் தாயாரினால் நித்தம் அவமானப்படுத்தப் படுகிறான் முத்தையா. அங்கே கிராமத்தில் தந்தை, தாய் , தங்கையுடன் வாழும் பொன்னையா கடன் சுமை தாங்காமல் , தொழில் தேடி நகரத்துக்கு வந்து குத்து சண்டை வீரனாக உருவெடுக்கிறான். கிராமத்தில் பொன்னையாவை காதலித்த கண்ணம்மா , அவனைத் தேடி பட்டணத்துக்கு வருகிறாள்.

வழக்கமான எம் ஜி ஆர் பட பாணியில் அமையாமல் படத்தின் கதை ஏட கூடமாக அமைத்திருந்தது. இதனால் எம் ஜி ஆரின் இமேஜுக்கு பங்கம் விளையும் வண்ணம் காட்சிகள் அமைந்தன. போதாக் குறைக்கு சண்டைக்காட்சிகளில் எம் ஜி ஆருக்கு பதில் டூப் நடிகரே சண்டை போடுகிறார். என்ன கொடுமை!


இரண்டு எம் ஜி ஆர் , ஆகவே இரண்டு கதாநாயகிகள். எம் ஜி ஆருடன் பல படங்களில் ஜோடி சேர்ந்த ஜெயலலிதா , எம் ஜி ஆருடன் சேர்ந்து நடித்த கடைசிப் படம் இதுதான். இன்னொரு கதாநாயகி ராஜஸ்ரீ. பழைய துடிப்பை காண முடியவில்லை.

நீண்ட காலத்துக்கு பிறகு இந்தப் படத்தில் வி நாகையா எம் ஜி ஆரின் தந்தையாக நடித்து கவனத்தை கவர்ந்தார். தாயாக எஸ் என் லக்ஷ்மி நடித்தார். வில்லன் நம்பியார் அடிக்கடி அசடு வழிகிறார். அவருடன் கூட வரும் நாகேஷ் அதற்கு உதவுகிறார். அசோகன் குத்துச் சண்டை குருவாக வந்து அளவுடன் பேசி நடிக்கிறார். இவர்களுடன் எஸ் ராம ராவ், தேங்காய் சீனிவாசன், சுந்தரிபாய் , வி கே ராமசாமி, காந்திமதி, ஏ வீரப்பன் ஆகியோரும் நடித்திருந்தனர். ஸ்டண்ட் மாஸ்டர் சியாம்சுந்தரும் சில காட்சிகளில் தோன்றுகிறார்.

கண்ணதாசன் எழுதிய ஒரு வருஷம் காத்திருந்தா கையில் ஒரு

பாப்பா , இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை இரண்டும் சில இடங்களில் விரசமாக ஒலித்தது. அதற்கு சவால் விடுவது போல் அமைந்தது புலமைப்பித்தன் இரட்டை அர்த்தத்தில் எழுதிய டீ டீ டீ சாத்துக்குடி பாடல். அதற்கு கவர்ச்சியாக நடனமாடி உசுப்பேத்தினார் ஹிந்தி நடிகை ஷப்னம். என்றாலும் கே வி மகாதேவனின் இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்தன.


படத்துக்கு வசனம் சொர்ணம். எம் ஜி ஆர் தி மு காவில் இருந்து விலக்கப்பட்டதை குறிக்கும் விதமாக சில இடங்களில் வசனங்களை எழுதியிருந்தார். ஒளிப்பதிவு ஹரிதாஸ். நீண்ட காலத்துக்கு பிறகு தமிழ் படம் தயாரித்த ரங்கா , படத்தின் ஆரம்ப எழுத்தில் புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்று எம் ஜி ஆருக்கு பட்டம் கொடுக்காமல் வெறுமனே எம் ஜி ஆர் இரட்டை வேடங்களில் என்று காட்டியிருந்தார். எம் ஜி ஆருடன் என்ன கோபமோ! எப்படியோ எதிர்பார்த்த வெற்றியை பட்டிக்காட்டு பொன்னையா அடையவில்லை.!

No comments: