எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) - அங்கம் 87 ஆற்றல்களை இனம் காண்போம் ! ஆளுமைகளிடம் கற்பதும் பெறுவதும் !! முருகபூபதி


ஒருவருடைய ஆற்றல்களை இனம் கண்டு பாராட்டும் இயல்பு எமது தமிழ் சமூகத்தில் அரிதாகவே காணப்படுகிறது.

ஏனைய சமூகங்களில் நிலைமை எவ்வாறென்பது தெரியவில்லை. எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் இதுவரையில் எனது மனைவி மாலதியைப்பற்றி ஏதும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், சொல்லநேர்ந்தமைக்கு கடந்த 02 ஆம் திகதி மெய்நிகரில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் காரணமாக அமைந்துவிட்டது.  அதுபற்றி பின்னர் சொல்கின்றேன்.

இலங்கையில் வடமராட்சியைச்சேர்ந்த மாலதியின்  தந்தையார் பஞ்சநாதன்,  மருத்துவராக பணியாற்றியமையால், ஏனைய


பிரதேசங்களுக்கும் குறிப்பாக மாத்தளை, ஆண்டி அம்பலம், நைனா மடம், நீர்கொழும்பு நகரங்களுக்கும் அவர்  தமது  மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி ஊர் விட்டு ஊர் இடம்பெயர நேர்ந்தது.

இறுதியாக இவர்களது குடும்பம் நீர்கொழும்பினையே வதிவிடமாக்கிக்கொண்டமையால், மாலதியும், நான் முன்னர் கல்வி கற்ற அல்கிலால் மகா வித்தியாலயத்திலேயே உயர்தரம் கற்றுவிட்டு, பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பி. ஏ.                     ( சிறப்பு ) பட்டத்தினை வெளிவாரியாக கற்றுப்பெற்றுக்கொண்டு  ஆசிரியையாக வவுனியா, நீர்கொழும்பு பிரதேசங்களில் பணியாற்றினார்.

இவருடைய தம்பி விக்னேஸ்வரன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கற்றவர். கவிஞர். கவியரசு கண்ணதாசனின் குடும்பத்தினருடன் நெருங்கிய நட்புறவுகொண்டவர்.


தென்றல்விடு தூது ( கவிதை ) , பலரது பார்வையில் கண்ணதாசன் ( தொகுப்பு ) ஆகிய நூல்களையும் எழுதியிருப்பதுடன், காவியன் முத்துதாசன் என்ற புனைபெயரில் பாடல்களும் புனைந்திருப்பவர்.  அவை மனமொட்டுக்கள் என்ற பெயரில் இறுவட்டாகவும் வெளிவந்துள்ளது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம், திப்பு  உட்பட பல பாடகர்கள் இதில் பாடியிருக்கிறார்கள்.

திரைப்பட இயக்குநர் கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய சில திரைப்படங்களில் நடித்திருப்பதுடன், அவற்றில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர்.

மாலதியின் மூத்த அக்கா பத்மினியும் கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர். இவர் எழுதிய உணவு சம்பந்தமான ஒரு நூலை கண்ணதாசன் பதிப்பகம் முன்னர் வெளியிட்டிருக்கிறது. 

தாயார் நீர்கொழும்பிலும், தந்தையார் பிலிப்பைன்ஸிலும், அக்கா பத்மினி சிங்கப்பூரிலும் மறைந்துவிட்டார்கள்.

மற்றும் ஒரு அக்கா நந்தினியும் ஆசிரியராக பணியாற்றியவர். இவர் மூன்று பிள்ளைகளின் தாய்.  எதிர்பாராதவகையில் 1987 ஆம் ஆண்டு வடமராட்சியில் நடந்த ஒபரேஷன் லிபரேஷன் தாக்குதலின் போது விமானக்குண்டுவீச்சில் சிக்கி கொல்லப்பட்டவர். அவரது  மூன்று பெண் பிள்ளைகளும்  தற்போது திருமணமாகி பிள்ளைகளுக்கும் தாய்மார் ஆகிவிட்டனர்.

மாலதியின் தங்கை சூரியகுமாரி யாழ்.பல்கலைக்கழக பட்டதாரியாவார்.  இவர் சிறிது காலம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், வீரகேசரி நாளிதழில் உதவி ஆசிரியராகவும் மித்திரன் வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.  இலக்கிய விமர்சனங்களும் எழுதுபவர்.

இத்தகைய பின்புலத்திலிருந்து வந்திருக்கும் மாலதி, தனது ஆசிரியப்பணிக்காலத்தில் நடந்த தமிழ்த்தினப்போட்டிகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்.

மாலதி உயர்தர வகுப்பு  படிக்கும் காலத்தில் எனது முதலாவது கதைத் தொகுதி 1975 ஆம் ஆண்டே வெளியாகிவிட்டது.

2002 ஆம் ஆண்டு நான் மாலதியை திருமணம் செய்தபோது, என்னை நீண்டகாலமாக நன்கு தெரிந்த  எங்கள் ஊர் தமிழ் ஆசிரியை  ஒருவர்  “ இனி, பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறப்போகிறது  “ என்று சொன்னார்.

அனைக்கேட்ட மாலதி,  “ சரி… இதில் பூ எது..? நார் எது..?  “ எனக்கேட்டார்.

அதற்குப்  பதில் கிடைக்கவில்லை !

மாலதியையும் என்னையும் நன்கு தெரிந்த ஒருவர்,  “ தமிழும் தமிழும் சேர்ந்திருக்கிறது  “ என்றார்.

   எந்தத் தமிழ்.  வடமராட்சித் தமிழும், நீர்கொழும்புத் தமிழுமா..?  “ என்று நான் திருப்பிக்கேட்டேன்.

2003 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த மூன்றாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் மாலதி, எழுத்தாளர் மெல்பன் மணி எழுதிய கலியுகத்தின் பக்கங்கள் என்ற நூலைப்பற்றிய விமர்சன உரையை நிகழ்த்தினார்.

அதனைக்கேட்டுக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் மாலதியிடம் வந்து,  “ முருகபூபதி அண்ணனா உங்களுக்கு எழுதிக்கொடுத்தார்..?  “ எனக்கேட்டபோது,  மாலதியின் மனம் என்னவாகியிருக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்.

மாலதி அமைதியாக,  “ ஏன்.. தன்னால் எழுத முடியாதா..?  “ எனக்கேட்டுச் சிரித்தார்.

 “ மாலதி எழுதிய மூலப்பிரதியை நீங்கள் பார்க்க வேண்டுமா..?  இதோ பாருங்கள்  “ என்று மாலதியின் கையெழுத்துப்பிரதியை நான் காண்பித்தேன்.

பின்னர் எமது சங்கம் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட பூமராங் சிறப்பு மலரிலும் மாலதி அவுஸ்திரேலியா பற்றிய ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

விக்ரோரியா மாநிலத்தில்  வாராந்த தமிழ்ப்பாடசாலைகளிலும் ஆசிரியராக பணியாற்றினார்.

ஒருவருடைய ஆற்றல்களை இனம் காண்பது தொடர்பாக எமது சமூகத்தில் சிலர்  எப்படிச் சிந்திக்கிறார்கள் ?  என்பதற்காகத்தான் இந்தச் செய்திகளைச்  சொல்கின்றேன்.

கடந்த 02 ஆம் திகதி கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர்  ஊடாக  எழுத்தாளர் அகணி சுரேஷ் தலைமையில் 16 ஆவது எழுத்தாளர் அரங்கத்தை நடத்தியபோது, அங்குவதியும் எழுத்தாளரும் இசை ஆய்வாளருமான கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியம் அவர்கள் தனது வாழ்க்கைப்பயணத்தை மிகவும் நேர்த்தியாகச் சொன்னார்.

பேராசிரியர் சுப்பிரமணியம் – கௌசல்யா தம்பதியரை, சில வருடங்களுக்கு முன்னர் அவர்களது மெல்பன் வருகையின்போதும் லக்‌ஷ்மண அய்யர் – பாலம் அம்மையார் தம்பதியரின் புதல்வி திருமதி மங்களம் ஶ்ரீநிவாசனின் இல்லத்திலும் சந்தித்திருக்கின்றேன்.

அவ்வப்போது மெய்நிகர் அரங்குகளில் பார்த்து உரையாடியுமிருக்கின்றேன்.

இறுதியாக கடந்த ஜூன் மாதம் 04 ஆம் திகதி கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவிலும் சந்தித்தேன்.

கலாநிதி கொளசல்யா அவர்கள்  குடும்பத்தலைவியாக இயங்கியவாறே தமிழ் இசைத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டவாறு கலாநிதிப்பட்டமும் பெற்றவர்.

ஐம்பது வயதிற்குப்பின்னரும் தொடர்ந்து கற்றார்.  நூல்கள் எழுதினார்.  ஆய்வுகளில் ஈடுபட்டார்.  மேலும் கற்றுக்கொண்டிருக்கிறார். தொடர்ந்தும் எழுதிவருகிறார்.  அத்துடன் சிறந்த பேச்சாளருமாவார்.

அவரது ஆளுமைச்சிறப்புகளைக்கண்டு வியந்தோம்.

நிகழ்ச்சியின் இறுதியில்  அவரது அன்புக் கணவர் தகைமைசார் பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்கள், தனது கருத்துக்களைச்  சொன்னபோது, பல பயனுள்ள செய்திகளையும் கூறினார்.

கற்பதற்கு வயது எல்லை இல்லை எனவும்,  எமது பல மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம் பெற்றவுடன், தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபடுவதில்லை என்பதையும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.

அவரது அன்புத்துணைவியார் கலாநிதி கௌசல்யா, பிள்ளைகளுக்கு தாயாகவும் இயங்கியவாறு,  அவர்களையும் படிக்கவைத்து திருமணமும் செய்துவைத்து நல்ல நிலைக்கு உயர்த்தியவாறே,   தானும் தொடர்ந்தும் கற்று ஆய்வுகளில் ஈடுபட்டு கலாநிதிப்பட்டமும் பெற்றிருக்கிறார் என்ற தகவலை நாம் இந்த மெய்நிகர் அரங்கிலே தெரிந்துகொண்டோம்.

எனினும் அவர் எழுதும் ஆய்வுகளை பார்த்திருக்கும் சில                      “ பெரிய மனிதர்கள்    அவரது கணவர் பேராசிரியர் அவர்களே எழுதிக்கொடுத்திருப்பார் . “ எனச்  சொல்லியிருக்கிறார்கள்.

அதனால், பேராசிரியர் சுப்பிரமணியம் அய்யா மிகவும் மன வருத்தப்பட்டுமிருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

இதிலிருந்து எமது தமிழ்ச் சமூகம் எப்படி இருக்கிறது ? என்பதை பதச்சோறாக நாம் புரிந்துகொள்கின்றோம்.

அதற்காக நாம் வருந்தவேண்டியதில்லை. 

கவிப்பேரரசு வைரமுத்து சிறந்த கவிஞர். அத்துடன் சிறந்த பாடலாசிரியர். பல விருதுகள் பெற்றிருப்பவர். இவரது துணைவியார் பொன்மணியும் ஒரு தமிழ்ப்பேராசிரியர்தான்.     “ கவிஞர் வைரமுத்துவுக்கு அவரது மனைவிதான் பாடல்கள் எழுதிக்கொடுக்கிறார்.  “ என்று எமது தமிழ் சமூகத்தில் பேசியவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வாறு  வாய்க்கு வந்தவாறு பிதற்றுபவர்களை இனம் காணத்தான் முடியுமே தவிர, திருத்தவே முடியாது !

ஆற்றல் மிக்கவர்களை இனம் காண்பதற்கு தயாராவோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அத்தகையோர் எம்மத்தியில் இருக்கிறார்கள்.  

பலரதும் ஆற்றல்கள், கண்டு பிடிப்புகளினால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

( தொடரும் )

No comments: