உலகச் செய்திகள்

போர் நிறுத்தம் காலாவதி; போர் வெடித்த உடன் இஸ்ரேலின் தாக்குதலில் 70 பலஸ்தீனர் பலி

உத்தரகண்ட் சுரங்க விபத்து; 41 பேரும் உயிருடன் மீட்பு

இஸ்ரேலிய கப்பலின் மீது ஆளில்லா வான் தாக்குதல்

சொந்த தயாரிப்பு யுத்த விமானத்தில் துணை விமானியாக பறந்த நரேந்திர மோடி

துருக்கி வரத் தவறிய ஈரான் ஜனாதிபதி ரைசி

யெமனுக்கு அருகில் மற்றொரு கப்பலை கடத்த முயற்சி


போர் நிறுத்தம் காலாவதி; போர் வெடித்த உடன் இஸ்ரேலின் தாக்குதலில் 70 பலஸ்தீனர் பலி 

December 2, 2023 8:26 am 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் ஒரு வாரமாக நீடித்த போர் நிறுத்தம் உடன்பாடு இன்றி முடிவடைந்ததை அடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் பயங்கர தாக்குதல்களை ஆரம்பித்ததோடு பலஸ்தீன போராளிகளின் ரொக்கெட் தாக்குதல்களினால் தெற்கு இஸ்ரேலில் சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.

போர் நிறுத்தம் நேற்று காலாவதியான விரைவிலேயே இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியில் வட்டமிட ஆரம்பித்ததோடு தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் ஊக்கிர தாக்குதல்கள் இடம்பெற்றன. இதனால் அங்குள்ள குடிமக்கள் வீதிகளுக்கு ஓட்டம்பிடித்ததோடு அடைக்கலம் தேடி தூர மேற்கு பகுதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

கடந்த பல வாரங்களாக பிரதான போர் வலயமாக இருந்து வரும் வடக்கு காசா வானில் பெரும் கரும்புகை வெளிவந்தது. அங்கு துப்பாக்கிச் சத்தங்கள், குண்டு வெடிப்புச் சத்தங்கள் இடைவிடாது கேட்க ஆரம்பித்தன.

போர் நிறுத்தம் காலாவதியான இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே 35 பேர் கொல்லப்பட்டு பல டஜன் பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய போர் விமானங்கள் குறைந்தது எட்டு வீடுகள் மீது வான் தாக்குதல்களை நடத்தியதாக அது கூறியது.

தொடர்ந்து இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்ட நிலையில் நேற்று பின்னேரம் வரை உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆக அதிகரித்திருந்தது. இதில் சுஜையா பகுதியில் உள்ள வீடுகள் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு காசா பகுதிகளான கான் யூனிஸ் மற்றும் ரபாவில் தாக்குதல்கள் தீவிரமாக இருந்தது என்று மருத்துவ வட்டாரங்கள் மற்றும் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். தவிர மத்திய மற்றும் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.

“எனது மகன் இனஸே! எனக்கு உன்னைத் தவிர வேறு யாருமில்லை!” என்று கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் நடைபாதை பகுதியில் தலை காயத்துடன் தூக்குப் படுக்கையில் இருக்கும் அனஸ் அன்வார் அல் மஸ்ரி என்ற பையனை பார்த்தபடி தாய் அழுது புலம்பினார். “அவன் எனது ஒரே மகன்!” என்று அவர் கூறினார்.

போர் நடவடிக்கையை ஆரம்பிப்பதாகவும் போர் விமானங்கள் காசா மீது தாக்குதல் நடத்துவதாகவும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்தது. முதலில் ரொக்கெட் தாக்குதல் நடத்தியும், தமது பிடியில் இருக்கும் அனைத்து பெண்களையும் விடிவிக்காமலும் ஹமாஸ் போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டதாகவும் அது குற்றம்சாட்டியது.

“எமது பணயக்கைதிகளை விடுவிப்பது, ஹமாஸை இல்லாதொழிப்பது மற்றும் இஸ்ரேலிய குடிமக்களுக்கு காசா ஒருபோதும் அச்சுறுத்தலாக அமையாது என்பதை உறுதி செய்யும் போர் இலக்குகளை அடைவதற்கு இஸ்ரேலிய அரசு கடமைப்பட்டுள்ளது” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்தது.

மேலும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நிபந்தனைகளை நிராகரித்தது மற்றும் அதனை நீடிக்க மருத்து போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று ஹமாஸ் கூறியுள்ளது.

“போர் நிறுத்தத்திற்கு முந்தைய ஐம்பது நாட்களில் இஸ்ரேல் சாதிக்காததை, போர் நிறுத்தத்திற்குப் பின்னரும் ஆக்கிரமிப்பைத் தொடர்வதால் சாதிக்க முடியாது” என்று ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினரான இஸ்ஸத் அல் ரஷ்க் அந்த அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

போர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை அறிவித்த ஹமாஸ் ஆயுதப் பிரிவு, போருக்குத் திரும்பும்படியும் காசாவை பாதுகாக்கும்படியும் தமது உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தது. இஸ்ரேலிய துருப்புகளுக்கும் பலஸ்தீன போராளிகளுக்கும் இடையே காசா நகரில் கடும் மோதல் நீடிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கான் யூனிஸில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று அரபு மொழியில் கோசமிட்டுக்கொண்டு குழு ஒன்று வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட உடலுடன் வீதியில் சென்றது.

“இருந்ததை விடவும் தீவிரமாக போர் திரும்பியுள்ளது” என்று தெற்கு காசா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 22 வயதான அனஸ் அபூ டக்கா என்ற இளைஞன் தெரிவித்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளில் ஏவுகணைகள் வருவதை எச்சரிக்கும் சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டன. இதனை அடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்ததோடு பாடசாலைகளும் மூடப்பட்டன.

தொடரும் பேச்சுவார்த்தைகள்

கடந்த நவம்பர் 24 ஆம் திகதி ஆரம்பமாகி இரு முறை நீடிக்கப்பட்ட ஏழு நாள் போர் நிறுத்த காலத்தில் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்ததோடு அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் விடுவித்து வந்தது. அதேபோன்று இஸ்ரேலின் தாக்குதல்களால் பேரழிவை சந்தித்திருக்கும் காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவும் வழிவகுக்கப்பட்டது.

இதன்போது எண்பது இஸ்ரேலிய பெண் மற்றும் சிறுவர்களாகிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு இஸ்ரேல் சிறையில் இருந்து 240 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு விடுவிக்கப்பட்ட அனைவரும் பெண்கள் மற்றும் பதின்ம வயதைச் சேர்ந்தவர்களாவர். தவிர பிரதானமாக தாய்லாந்து தொழிலாளர்கள் உட்பட 25 வெளிநாட்டு பணயக்கைதிகளும் தனியான உடன்படிக்கையின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் பணயக்கைதிகளை தொடர்ந்து விடுவிப்பதற்கான தீர்வொன்றை எட்டுவதில் மத்தியஸ்தர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். இதில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருப்பவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும் நிலையில் விடுவிக்கப்படுவோரில் ஆண் பணயக்கைதிகளை சேர்ப்பதிலேயே உடன்பாடு எட்டத் தவறியுள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்ற வருவதாக மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கட்டார் கூறியுள்ளது. எனினும் காசா மீது இஸ்ரேல் குண்டுவீச ஆரம்பித்திருப்பது நிலைமையை சிக்கிலாக்கி இருப்பதாக அது கூறியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,200 பேரை கொன்று சுமார் 240 பேரை பணயக்கைதிகளாக பிடித்த ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது. மறுபுறம் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் அழிவை தனது கொள்கையாகக் கொண்டுள்ளது.

இஸ்ரேலின் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தரைவழி தாக்குதல்கள் காசாவின் பெரும் பகுதியை அழிவுக்கு உட்படுத்தியுள்ளது. ஏற்கனவே போர் நிறுத்தத்திற்கு முன்னர் ஏழு வாரங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 15,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு பல்லாயிரம் பேர் காணாமல்போயுள்ளனர். பலஸ்தீன சுகாதார அமைச்சின் இந்த புள்ளி விபரத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உறுதி செய்துள்ளது.

2.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காசாவில் 80 வீதமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அந்த குறுகலான நிலத்தில் பெரும்பாலான மக்கள் தற்காலிக முகாம்களில் எந்த அடிப்படை வசதியும் இன்று அடைக்கலம் பெற்றுள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் முழு முற்றுகையை செயற்படுத்தியதோடு போர் நிறுத்த காலத்தில் அங்கு வந்த உதவிகள் அங்கே இருக்கும் தேவைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாக இருப்பதாக குடியிருப்பாளர்கள் மற்றும் மனிதாபிமான நிறுவனங்கள் தெரிவித்தன.

போர் வெடித்த பின் மூன்றாவது முறையாக பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலிய மற்றும் மேற்குக் கரையின் பலஸ்தீன அதிகாரிகளை சந்தித்திருந்தார். எனினும் போர் நிறுத்தம் முறிந்திருப்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு அமையவே காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் நிறைவேற்றுச் சபை தலைவர் அலி தமூஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

“ஆரம்பத்தில் இருந்தே இந்தப் போர் பலஸ்தீன மக்களுக்கு எதிரான அமெரிக்காவின் போராக இருந்து வருகிறது, மேலும் அனைத்து அமெரிக்க நிலைப்பாடுகளும் நிகழ்வுகளின் போக்கும் அமெரிக்கா ஒரு பங்காளி மட்டுமல்ல, இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக இருப்பதை காட்டுகிறது” என்று அவர் விடுத்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் இஸ்ரேல் தொடர்ந்து தனது சுற்றவளைப்புகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜெனின், ஹெப்ரோன், துல்கரம் மற்றும் ரமல்லா உட்பட பல இடங்களில் இடம்பெற்ற தேடுதல்களில் குறைந்தது 12 பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 




உத்தரகண்ட் சுரங்க விபத்து; 41 பேரும் உயிருடன் மீட்பு

- 17 நாட்களின் பின் மீண்டு சுதந்திரமாய் ஒரு பெருமூச்சு

November 29, 2023 9:24 am 

– உறவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கடந்த 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் நேற்று (28) இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு குழுவினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

உத்தரகண்டின் உத்தரகாசியில் இருந்து யமுனோத்ரி செல்ல 106 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிஉள்ளது. இதை 26 கி.மீ. ஆக குறைக்கும் விதமாக, சில்க்யாரா – பர்கோட் இடையே 4.5 கி.மீ.தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் 2 கி.மீ. வரை சுரங்கம் தோண்டப்பட்ட நிலையில், கடந்த 12 ஆம் திகதி தீபாவளியன்று அதிகாலை சுரங்கப் பாதையின் நுழைவுவாயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதையை மண் மூடியது. உள்பகுதியில் சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு மண்சரிவு ஏற்படாததால், அப்பகுதியில் தொழிலாளர்கள் பத்திரமாக இருந்தனர்.

உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்க முதலில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்சரிவை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேல் பகுதியில் இருந்து தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர், டெல்லி, குஜராத், ஒடிசா, உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ராட்சத துளையிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மண் குவியலின் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. கடினமான பாறைகளை துளையிட முடியாமல் பலவேறு இயந்திரங்கள் பழுதாகின.

அமெரிக்க தயாரிப்பான ஆகர் இயந்திரம் மட்டும் மண் குவியலின் பக்கவாட்டில் 47 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டு இரும்பு குழாய்களை பொருத்தியது. ஆனால், அதிவேகமாக இயக்கியதால் அமெரிக்க இயந்திரம் கடந்த 25 ஆம் திகதி உடைந்தது. அதை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில், சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த அந்த இயந்திரத்தின் 14 அடி நீள பிளேடு அறுக்கப்பட்டு முழுமையாக அகற்றப்பட்டது.

இதற்கிடையே, மாற்று திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டன. சமதளம், மலைப் பகுதியில் எலிவளைபோல குடைந்து சிறிய சுரங்கம் தோண்டுவதில் வல்லவர்களான ‘எலி வலை’ சுரங்கத் தொழிலாளர்கள் 24 பேர் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டனர். அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த 47 மீட்டர் இரும்பு குழாய் பாதையில் ‘எலி வலை’ சுரங்க தொழிலாளர்கள் 3 பேர் நேற்று முன்தினம் (27) இரவு நுழைந்தனர். ஒருவர் சிறியரக இயந்திரத்தால் சுரங்கத்தை தோண்ட, மற்றொருவர் மண் குவியலை அப்புறப்படுத்தினார். 3 ஆவது நபர் மண் குவியலை அள்ளி டிராலியில் நிரப்பினார். அந்த டிராலி நிரம்பியதும் வெளியே காத்திருந்த தொழிலாளர்கள், கயிறு மூலம் டிராலியை வெளியே இழுத்து மண்ணை அப்புறப்படுத்தினர். முதலில் அனுப்பப்பட்ட 3 ‘எலி வலை’ தொழிலாளர்கள் சோர்வடைந்ததும் அடுத்த மூவர் குழு சுரங்கப் பாதைக்குள் நுழைந்து பணியை தொடர்ந்தனர். இவ்வாறு 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டு வெற்றிகரமாக இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்டன. குழாயில்இருந்து தொழிலாளர்கள் சிக்கியிருந்த சுரங்கப் பாதை பகுதியில் ஏறி, இறங்குவதற்காக படிக்கட்டு அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 41 தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்கு அந்த குழாய் வழியாக தேசிய பேரிடர் மீட்பு படையின் 15 வீரர்கள் நேற்று இரவு ஊர்ந்து சென்றனர். மீட்பு படையை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் உள்ளே சென்றார். சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் சிக்கியிருந்த இடத்தை அவர்கள் சென்றடைந்தனர். பின்னர், அவர்களுக்கு உடல்நல பரிசோதனைகளை மருத்துவர் செய்தார்.

முழு ஆரோக்கியத்துடன் இருந்த தொழிலாளர்கள் குழாய் வழியாக ஊர்ந்து வெளியேறினர். இவ்வாறு, முதல் தொழிலாளி நேற்று இரவு 8 மணி அளவில் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து, ஒவ்வொரு தொழிலாளராக இரும்பு குழாய் வழியாக வெளியே வந்தனர். சோர்வாக இருந்த தொழிலாளர்கள் பிரத்யேக டிராலியில் படுக்க வைக்கப்பட்டு கயிறு மூலம் வெளியே இழுத்து மீட்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு,அனைவரும் உடனடியாக தனித்தனி ஆம்புலன்ஸில் சைனாலிசார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.

மத்திய அமைச்சர் வி.கே.சிங் கடந்த சில நாட்களாக சம்பவ இடத்திலேயே முகாமிட்டு மீட்பு பணிகளை கவனித்து வந்தார். உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி நேற்று சுரங்கப் பாதைக்குள் சென்று, மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் நலம் விசாரித்தார். ‘சில்க்யாரா சுரங்கப் பாதைமீட்பு பணியில் வெற்றி அடைந்துள்ளோம். தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்’ என்று எக்ஸ் வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் உறவினர்களும் சுரங்கப் பாதைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொழிலாளர்களை பார்த்ததும் அவர்கள் கண்ணீர் விட்டு கலங்கினர்.

தொழிலாளர்களை பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, எக்ஸ் சமூகவலைதள பதிவில், ‘தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களது துணிச்சல், பொறுமை அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது. சுரங்க மீட்பு பணியில் மனிதாபிமான முயற்சிகள், குழு முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக நிபுணர்களால் திருப்புமுனை: சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனம் ஈடுபட்டது. கடந்த 21ஆம் திகதி இந்த நிறுவனத்தின் நிபுணர்கள், பிஆர்டி-ஜிடி5 என்ற இயந்திரம் மூலம் மண் குவியலில் துளையிட்டு, 6 அங்குலம் விட்டம் கொண்ட குழாயை தொழிலாளர்கள் இருக்கும் இடம் வரை செலுத்தினர். மீட்பு பணியில் இது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை மிகச் சிறிய குழாய் வழியாக உலர் பழங்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தமிழக நிபுணர்கள் பொருத்திய குழாய் வழியாக, சமைத்த உணவுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) நவீனகேமராவும் குழாய் மூலம் செலுத்தப்பட்டு, தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது கண்காணிக்கப்பட்டது. மீட்பு பணியில் தாமதம் இருந்துவந்த நிலையில், தமிழக நிபுணர்கள் அமைத்த குழாய் மூலமாகவே தொழிலாளர்களின் உடல்நலம், மனநலம் பாதுகாக்கப்பட்டதாக மீட்பு பணி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

சில்க்யாரா சுரங்கப் பாதை மீட்புப் பணிகளை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரடியாக ஆய்வு செய்தார். தலைநகர் டேராடூன், சில்க்யாரா இடையிலான தொலைவு 140 கி.மீ. ஆகும். தலைநகரில் இருந்து மீட்புப் பணி நடைபெறும் இடத்துக்கு வந்து செல்ல காலதாமதம் ஆகும் என்பதால் சுரங்கப் பாதை அருகே உள்ள இந்திய – திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வளாகத்தில் முதல்வரின் கேம்ப் அலுவலகம் அமைக்கப்பட்டது.

கடந்த இரு வாரங்களாக சில்க்யாரா அருகேயுள்ள கேம்ப் அலுவலகத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தங்கியிருந்து அடிக்கடி சுரங்கப் பாதைக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அவர் நேற்று பல மணி நேரம் சுரங்கப் பாதையில் முகாமிட்டிருந்தார். மீட்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் ஆரத் தழுவி நலம் விசாரித்தார். அவர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் தாமி அறிவித்தார். உத்தரகண்ட் மட்டுமன்றி நாடு முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சுரங்கத்திலிருந்து மீட்கபட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா நாயக்கின் சகோதரர்கள் குணோதர் நாயக், ரவிந்திர நாயக் சுரங்கத்தினுள் சிக்கி இருந்தனர். இதனால், நேற்று மீட்பு இடத்துக்கு வந்திருந்த அவர், கூறுகையில், “என்னுடைய பெற்றோர்கள் மணிக்கு ஒருமுறை எனக்கு போன் செய்துகொண்டிருந்தார்கள். சகோதரர்கள் மீட்கப்பட்டுவிட்டார்களா என்று அவர்கள் அழுதபடி கேட்கிறார்கள். இந்த முறை நாங்கள் தீபாவளி கொண்டாடாமல் இருந்தோம். இப்போது அவர்கள் பத்திரமாக வெளியே வந்து விட்டதால், பட்டாசு வெடித்து எங்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறோம்” என்றார். ஆதித்யாவும் இந்த சுரங்கத்தில் வேலை செய்துவந்தார். சுரங்கம் சரிவதற்கு முன்பாக அவர் வெளியே வந்துவிட்டார். சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர் மன்ஜித்தின் தந்தை சவுத்ரி, சம்பவ இடத்துக்கு அருகிலேயே கூடாரம் அமைத்து 12 நாட்களாக தங்கிவந்தார். “என்னுடைய ஒரே மகன் அவன். என்னிடம் போன் இல்லை. இதனால், என் மனைவியிடம் இங்குள்ள விஷயங்களை பகிர முடியாது. பக்கத்து வீட்டில் டிவியைப் பார்த்து அவர் தெரிந்துகொள்வார்” என்றார்.   நன்றி தினகரன் 





இஸ்ரேலிய கப்பலின் மீது ஆளில்லா வான் தாக்குதல்

- ஏற்கனவே ஒரு கப்பல் ஈரான் ஆதரவு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடத்தல்

November 27, 2023 11:36 am 

இஸ்ரேலிய வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது இந்திய பெருங்கடலில் வைத்து ஆளில்லா வான் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தயாரிப்பு ஷஹித் 136 ஆளில்லா விமானம் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பெயரை வெளியிடாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மோல்டா கொடியுடன் பிரான்ஸில் இயக்கப்படும் கப்பல் மீதே சர்வதேச கடல் பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டபோதும் அதில் இருக்கும் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

எனினும் இது தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

ஏற்கனவே இஸ்ரேல் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கப்பல் ஒன்றை ஈரான் ஆதரவு யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





சொந்த தயாரிப்பு யுத்த விமானத்தில் துணை விமானியாக பறந்த நரேந்திர மோடி

November 27, 2023 11:28 am 



நன்றி தினகரன் 






துருக்கி வரத் தவறிய ஈரான் ஜனாதிபதி ரைசி

November 29, 2023 2:28 pm 

ரான் ஜாதிபதி இப்ராஹிம் ரைசியின் துருக்கி விஜயம் திட்டமிட்டபடி இடம்பெறவில்லை. நேற்று நவம்பர் 28 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி துருக்கி வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அவரது வருகை இடம்பெறவில்லை என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் கூறியுள்ளார். இந்த விஜயம் பற்றி எர்துவான் இந்த மாத ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். இரு தலைவர்களும் காசா போர் தொடர்பில் கூட்டு அறிவிப்பு ஒன்றை விடுக்கப்போதாகவும் அப்போது கூறப்பட்டது.

கடந்த நவம்பர் 11 ஆம் திகதி ரியாதில் இடம்பெற்ற பிராந்திய மாநாட்டுக்கு பங்கேற்கச் செல்லும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய எர்துவான், “ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இந்த மாதம் 28 ஆம் திகதி இங்கு வருவார்” என்றார்.

இந்நிலையில் எர்துவான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரைசியுடன் தொலைபேசியில் பேசியதாக துருக்கி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 






யெமனுக்கு அருகில் மற்றொரு கப்பலை கடத்த முயற்சி

November 28, 2023 12:37 pm 

ஏடன் வளைகுடாவில் வர்த்தகக் கப்பல் ஒன்றை கடத்தும் முயற்சியை அமெரிக்க போர் கப்பல் ஒன்று முறியடித்துள்ளது.

சென்ட்ரல் பார்க் என்ற பெயர் கொண்ட பாஸ்போரிக் அமிலத்தை எடுத்துச் சென்ற இந்த சரக்குக் கப்பலில் இருந்து கிடைத்த உதவிக்கான அழைப்பை அடுத்தே அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். மேசன் போர் கப்பல் அங்கு விரைந்துள்ளது.

இதன்போது அந்த இடத்தில் இருந்து ஐந்து தாக்குதல்தாரிகள் விரைவு படகு ஒன்றின் உதவியோடு தப்பிச் செல்ல முயன்றதாகவும் அவர்களை பின்னால் துரத்தியதை அடுத்து சரணைடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் யெமனில் ஹூத்திக்களின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து கப்பல் இருக்கும் பகுதியை நோக்கி இரு பலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த ஏவுகணைகள் கப்பலில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் வழுந்துள்ளன.

இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்தது தொடக்கம் மத்திய கிழக்கில் இடம்பெறும் வன்முறைகளின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட சரக்குக் கப்பல் ஒன்றை கைப்பற்றியதோடு அந்தக் குழு இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




No comments: