அனைத்துலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு……..! தற்கொலை வீதம் தமிழ் சமூகத்தில் அதிகரிப்பதற்கான காரணிகள் ! ? தீர்வுகள் எம்மிடமே இருக்கின்றன ! முருகபூபதி

“ வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்  “  என்ற


பாடல் வரிகளை மறந்திருக்கமாட்டோம்.

வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்ற தொனிப்பொருளில்தான் இந்த வரிகள் அமைந்துள்ளன. 

ஏமாற்றம், துரோகம், வறுமை, அவமானம், தோல்வி, மன அழுத்தம், விரக்தி, இழப்பு, தனிமை , குடும்ப வன்முறை  முதலான காரணங்களினால், எமது சமூகத்தில் தற்கொலைகள் நிகழுகின்றன.

பெண்விடுதலை, பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் பேசுபொருளாகியிருக்கின்றன. ஆனால், ஆண்கள் சார்ந்த


பிரச்சினைகளை  “ ஆணாதிக்கம்  “ என்ற வரையறைக்குள் அடக்கிவிடும் தன்மைதான் அதிகரித்திருக்கிறது.

அதனால்,  எமது சமூகத்தின் மத்தியில் இதுதொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது.  இம்முறை அனைத்துலக ஆண்கள் தினத்தில் ஆண்களின் தற்கொலைகளை பேசுபொருளாக்கியிருக்கும் சூழலில் எமது கருத்துக்களை முன்வைக்கின்றோம்.

பெரும்பாலான   வாழ்வியல் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து, அதற்கேற்ப உரிய தீர்வை கண்டுபிடிக்காமல், பலரும் விபரீதமான முடிவுகளையே கண்டடைகின்றனர்.

உலக அரங்கிலும் பல புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகளும் கூட தற்கொலை செய்துகொண்டவர்கள்தான்.

அதற்கு நாம் அடல்ஃப் ஹிட்லர்  முதல்கொண்டு பலரை உதாரணம் காண்பிக்க முடியும்.


ஒருவர் தன்மீதான நம்பிக்கையை இழக்கும்போது, விரக்தியை நோக்கி நகருகின்றார். அந்த விரக்தி தொடருமானால், மன அழுத்தம்தான் பெருகும். இறுதியில், தனக்கான முடிவை நோக்கி நகருகின்றார். இறுதியில் அனைத்து துயரங்களிலுமிருந்து விடுதலையாவதற்கு  ஒரே வழி தற்கொலைதான் என்ற தீர்வுக்கு வருகிறார்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட பாடல் வரிகளைப்போன்றே மற்றும் ஒரு பாடல் வரியும் இருக்கின்றது.

“  உனக்கும் கீழே வாழ்பவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு “  

ஆனால்,  தற்கொலைசெய்துகொள்ளவேண்டும் என எண்ணுபவர்கள்,  தன்னை, தன்னைச்சூழவிருக்கும் குடும்பத்தினரை, உறவினர்கள், நண்பர்களை, பசுமை நிறைந்த நினைவுகளை அந்தக்கணத்தில் முற்றாக மறந்துவிடுகிறார்கள்.

இவர்களைப்போன்றவர்களுக்காகவே விஞ்ஞான உலகில் மருத்துவர்கள், உலநள சிகிச்சையாளர்கள், சீர்மியத் தொண்டர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

எமது தமிழ் சமூகத்தில் குறிப்பாக இலங்கையிலும் இலங்கைத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும், தற்கொலை மரண அவலம் தொடருகின்றது.

அதேசமயம், உளவள சிகிச்சை நிலையங்களும் பெருகியிருக்கின்றன. 

நகரீகம் வளர்ச்சியடைந்த மேல்நாடுகளில்,  இயங்கும் மருத்துவமனைகளில் உளவள சிகிச்சைக்காகவே தனியான பிரிவுகளும் இயங்குகின்றன.

அத்தகைய நாடுகளிலும் தற்கொலை மரண வீதம் அதிகரித்து காணப்படுகிறது.  பலர் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் தற்கொலை செய்துகொள்கின்றனர். அல்லது முயற்சிக்கின்றனர்.

கணினி தொழில் நுட்பம் எமக்கு வேறும் சில ஆபத்துக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

எளிதாக,  உடலை வருத்தாமல் எவ்வாறு தற்கொலை செய்துகொள்வது..?  முதலான ஆலோசனைகளைக்கூட கணினியில் தரவிறக்கம் செய்து படிக்கமுடியுமென்ற நிலைக்கு இந்த நவீன உலகம் எம்மைத் தள்ளியிருக்கிறது.

பின்விளைகளைப்பற்றி சற்றேனும் சிந்திக்காமல், தவறான செயல்களை செய்துவிட்டு, சமூகத்தில் அம்பலமாகும்போது, அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றிய செய்திகளை படித்திருக்கின்றோம்.

பேராசை பெருந்தரித்திரம் என்பதை புரிந்துகொள்ளாமல், தவறான


வழிகளில் பொருளீட்டி, திடீர் செல்வந்தர்களாகிவிட்டு.  ஏதேனும் சட்டச்சிக்கலில் மாட்டும்போது, அவமானத்தை தாங்கமுடியாமல் தற்கொலைசெய்துகொண்டவர்கள் பற்றியும் அறிந்திருக்கின்றோம்.

தற்கொலை என்பது ஒருவகையில் தன்னிலை சார்ந்த விடுதலை மாத்திரமே. எதிர்நோக்கப்படும் பிரச்சினையிலிருந்து தப்பிச்செல்வதற்கான உபாயமாக பெரும்பாலானவர்கள், தற்கொலையை தேர்ந்தெடுக்கின்றனர்.

அவர்கள் உயிரை அவ்வாறு விட்டுவிட்டாலும்,  அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை அந்தச்செயல் எவ்வளவு தூரம் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது பற்றியும் சிந்திப்பதில்லை.

ஆங்கிலத்தில், “Every action has its reaction “ எனச்சொல்வார்கள். நாம் எமது சமூகத்திற்கு எதனைச் செய்கின்றோமோ, அதுவே எமக்கு மீண்டும் கிடைக்கும்.  விஞ்ஞானி ஐசாக் நியூடனும் இது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.

எமது முன்னோர்கள்,  “ வினை விதைத்தவன், வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்  “ எனச்சொன்னதன் உறைபொருளும், மறைபொருளும் அதுதான்.

எதற்கும் ஒரு பின்விளைவு இருக்கும்.  அது வாழ்வியலின் அடிப்படை.


எந்தவொரு செயலிலும் இறங்குவதற்கு முன்னர், அதன் பின்விளைவு எவ்வாறு இருக்கும் என ஒரு கணம் சிந்திக்கும் பட்சத்தில் எவரும் எதிர்காலத்தில் வரக்கூடிய சிக்கல்களை முற்கூட்டியே தவிர்த்துக்கொள்ள முடியும்.

உளச்சிக்கல்களுக்கு நிவாரணியாக மருந்துகள், மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும்,  அவற்றை  தொடர்ச்சியாக உட்கொள்வதனால், வேறு பக்கவிளைவுகளும் தோன்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

நடைப்பயற்சி, தியானம், உடற்பயிற்சி, வாசிப்பு,  விளையாட்டு, பயணங்கள் என்பன பக்க விளைவுகள் அற்ற மருந்துகளாகும்.

மனவிரக்தியடைபவர்கள்,  இந்த விடயங்களையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

இதற்கும் அப்பால், சமூக சேவைகளில் ஒருவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலமும் , துயரங்களிலிருந்து விடுபட முடியும்.

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த  பாரதியார் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

 “ தேடிச் சோறுநிதந் தின்று

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவ மெய்தி

கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?  “

தமிழ்நாடு திருநெல்வேலி எட்டயபுரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சுப்பிரமணியன், எவ்வாறு உலக மகா கவியானார் என்பதை சீர்தூக்கிப்பாருங்கள்.

 அவர் வறுமையில் வாடியவர். எனினும் விரக்தியின் விளிம்புக்குச்செல்லாமல், இறுதிவரையில் சிறந்த கவிதைகளையும் சீரிய சிந்தனைகளையும் எமக்கு விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

 அந்த விதைகளிலிருந்து விருட்சங்களை உருவாக்குவோம்.

 சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் மாதம் 19ம் திகதியில் உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 24 வருடங்களாக இது வழமையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆண்கள் சமூகம் எதிர்நோக்கும் முக்கிய விடயத்தை கருப்பொருளாக அறிவித்து அது பற்றிய விழிப்புணர்வை உலக மட்டத்தில் ஏற்படுத்தும் முகமாக செயற்பட்டு வருகின்றது. இந்த வருடக் கருப்பொருள் ‘ஆண் தற்கொலையை பூஜ்ஜியமாக்குதல்’. இதன் பொருட்டாகவே இந்தக் கட்டுரை எமது தமிழ் சமூகத்தில் ஆண்களின் தற்கொலைகள் பற்றிய விழிப்புணர்வை கொண்டுவரும் முக்கிய நோக்கத்தில் எழுதப்பட்டது.

( ஆண்களின் குரல் 360 – Voice of Men 360 தளத்திற்காக எழுதப்பட்டது )

 letchumananm@gmail.com

----0--- 


No comments: