டயனா, சுஜித், ரோஹணவுக்கு ஒரு மாத பாராளுமன்ற தடை
வளிமண்டலத் தளம்பல்; நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிப்பு
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: நான்கு மாகாணங்களில் மழை
யாழில் மலையகத்தை உணர்வோம்
இந்திய உயர்தானிகர் யாழ். தீவக பகுதிகளுக்கு விஜயம்
டயனா, சுஜித், ரோஹணவுக்கு ஒரு மாத பாராளுமன்ற தடை
- ஒக்டோபர் 20 சம்பவம் தொடர்பில் சிறப்புரிமை குழு தீர்மானம்
பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹண பண்டார ஆகியோருக்கு ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்திற்கு வருவதை இடைநிறுத்த, பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவருக்கொருவர் தாக்குதல் மேற்கொண்டதாகவும், தாக்கு முற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற சிறப்புரிமை குழு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை இன்று (01) பாராளுமன்றத்தில், பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் தலைவரான சமல் ராஜபக்ஷ அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
வளிமண்டலத் தளம்பல்; நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிப்பு
- வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (01) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். நன்றி தினகரன்
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: நான்கு மாகாணங்களில் மழை
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலவியல் தளம்பல் நிலை காணப்படுவதால், நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
வானிலை குறித்து அவர் மேலும் கூறும் போது,
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தென்அந்தமான் மற்றும் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதிகளுடன் இணைந்த கடல் பிராந்தியத்திற்கு மேலாக நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது மேற்கு முதல் வடமேற்குத் திசையை நோக்கி நகர்கிறது. இன்றையளவில் மேலும் இது,தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்கிழக்குத் திசையில் தாழ் அமுக்கமாக மாற்றமடையும். இந்த தாழ் அமுக்கமானது மேலும் விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையக்கூடும்.
ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடப்படுகின்ற எதிர்கால வானிலை எதிர்வு கூறல்களை கவனித்திற்கொண்டு செயற்பாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நன்றி தினகரன்
யாழில் மலையகத்தை உணர்வோம்
- மலையக வாழ்வியலை உணர்த்தும் நிகழ்வுகள் ஆரம்பம்
“யாழில் மலையகத்தை உணர்வோம்” என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று (30) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (3) வரை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் சிவில் அமைப்புகள், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ், யாழ் மாவட்ட முன்னாள் செயலர் நா.வேதநாயகன், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
“யாழில் மலையகத்தை உணர்வோம்” நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தில் மலையக மக்களின் கடந்தகால மற்றும் தற்போதய வாழ்வியலை உணர்த்தும் கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன்
இந்திய உயர்தானிகர் யாழ். தீவக பகுதிகளுக்கு விஜயம்
யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்று (30) யாழ்ப்பாணம் தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
நயினாதீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நாகபூசணி அம்மன் ஆலயம், மற்றும் நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடுகளிலும் கலந்துக் கொண்டுள்ளார்.
அதன்போது, உயர்ஸ்தானிகருக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நாக விகாரை விகாராதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நயினாதீவில் மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களை அமுல் செய்வது குறித்தும் அதன் அவசியம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.
யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment