தமிழரசு கட்சியின் தலைமை?

 December 3, 2023


இலங்கை தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் யார் என்னும் போட்டி ஆரம்பித்துள்ளது.
இதுவரையில் ஊடகங்களில் பேசப்பட்ட விடயம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் வேட்பு மனுவை கட்சியின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கை தமிழரசு கட்சி 1949இல் உருவாக்கப்பட்டது.
ஒரு பிரதான கட்சியில் ஏற்படும் உடைவிலிருந்து அல்லது ஒரு கட்சியிலிருந்து ஆளுமையுள்ள ஒருவர் வெளியேறும் போதே, புதிய கட்சிகள் உருவாக்கின்றன.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிய கட்சிகளின் உருவாக்கம் பெரும்பாலும் இவ்வாறுதான் நிகழ்ந்திருக்கின்றது.
ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம், தவறான அரசியல் பாதையில் பொன்னம்பலம் பயணிக்கின்றார் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்தே, இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கினார்.
1970களுக்கு பின்னரான அரசியல் சூழலில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு, தமிழரசு கட்சியின் போதாமையை உணர்ந்த செல்வநாயகம், புதிய அரசியல் கூட்டணி ஒன்றைப் பற்றி சிந்தித்தார்.
இதன் விளைவாகவே, ஜக்கிய விடுதலைக் கூட்டணி – பின்னர் தமிழர் ஜக்கிய விடுதலைக் கூட்டணி உருவாகியது.
எனினும் பின்னர் ஏற்பட்ட புதிய அரசியல் நெருக்கடிகளை தமிழர் விடுதலைக் கூட்டணியினாலும் எதிர்கொள்ள முடியாத போது, தமிழ் தேசிய அரசியல் செல்நெறி முற்றிலுமாக, இளைஞர்களின் – ஆயுத இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
மீண்டும் தமிழரசு கட்சி எவ்வாறு தமிழ் தேசிய அரசியல் அரங்கிற்குள் நுழைந்தது? விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது, அன்றைய சூழலை கையாளுவதற்கான ஒரு துருப்புச் சீட்டாகவே மிதவாத கட்சியொன்றின் கீழ், அனைவரையும் ஒன்றுபடுத்தும் யோசனையை புலிகளின் தலைமை ஆதரித்தது.
ஒரு வேளை ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படாதிருந்திருந்தால், வீட்டுச் சின்னம் மீண்டும் தமிழ் சமூகத்திற்குள் நுழையும் சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கும்.
அவ்வாறு நிகழ்ந்திருந்தால், இன்று வேறுவிதமான தலைமைத்துவ போட்டியே இடம்பெற்றிருக்கும்.
2009இற்கு பின்னரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலத்தில், ஆரம்பத்திலிருந்தே ஏதோவொரு வகையில் உள் முரண்பாடுகள் இருந்த வண்ணமேயிருந்தது.
இதற்கு காரணம் தமிழரசு கட்சியின் மேலாதிக்கம்.
இதனை சரிசெய்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு தேசிய ஜனநாயக இயக்கமாக கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் – அதற்கான ஆற்றலிருந்தும், இரா. சம்பந்தன் அதனை செய்யவில்லை.
சரியான தலைமைத்தும் ஒன்றை வழங்கும் வரலாற்றுப் பொறுப்பை அவர் தவறவிட்டார்.
இவ்வாறானதொரு பின்புலத்தில் அடுத்த தலைவர் யார் என்னும் போட்டி, தமிழரசு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்றது.
தற்போது தலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவின் தலைமைத்துவம் ஏற்கனவே கேள்விக்குள்ளாகிவிட்டது.
அவர் பெயரளவில்தான் தலைவராக இருக்கின்றார்.
இந்த நிலையில் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடிய அந்த ஒருவர் யாரென்னும் கேள்வி எழுந்திருக்கின்றது.
அதனை போட்டியின் மூலம் தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதானது, கட்சிக்குள் நிலவும் உள் முரண்பாடுகளையே எடுத்துக் காட்டுகின்றது.
ஒரு வேளை இந்த போட்டியில் ஆளுமையுள்ள ஒருவர் தோற்கடிக்கப்படும் பட்சத்தில் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.   நன்றி ஈழநாடு 


No comments: