மேய்ப்பர் இல்லாத ஆடுகள்

 November 29, 2023

தமிழ்த் தேசிய அரசியல் தொடர்ந்தும் குழப்ப நிலையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.
2009இற்கு பின்னரான அரசியலில், தடியெடுத்தவர் எல்லாம் தண்டல்காரர்கள் – என்பது போல், அனைவருமே அரசியலை தீர்மனிப்பவர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்கின்றனர்.
இது தொடர்பில் ‘ஈழநாடு’ ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியிருக்கின்றது – அதாவது, ஒரு சமூகம் தலைமையற்று இருக்கின்றபோது அந்த சமூகத்தின் அரசியல் பரிகசிப்புக்குரியதாகவே காட்சியளிக்கும்.
ஈழத் தமிழர் அரசியல் அரங்கில் அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.
2009இற்கு பின்னரான அரசியல் சீரழிவுகள் அனைத்துமே விடுதலை புலிகளின் பெயராலேயே முன்னெடுக்கப்படுவதுதான் துரதிர்ஷ்டவசமானது.
ஈழத் தமிழர் அரசியலுக்கு புலம்பெயர் சமூகம் பலம் சேர்க்கும் – அவர்கள் ஈழத் தமிழர்களுக்கான சர்வதேச முகமாக இருப்பார்கள் என்றவாறான எதிர்பார்ப்பே ஆரம்பத்தில் அனைவரிடமும் இருந்தது.
ஆனால், இன்று நிலைமைகளை ஆழமாக நோக்கினால், தமிழ் புலம்பெயர் சமூகம் எதிர்மறையான தாக்கத்தை செலுத்துகின்றதா என்றே கேட்க வேண்டியிருக்கின்றது.
புலம்பெயர் சூழலிலிருந்து அவ்வப்போது இறக்குமதி செய்யப்படும் விடயங்கள் ஈழ அரசியலை மேலும் சிதைக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.
வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு என்று ஒரு வலுவான தலைமைத்துவம் இல்லைமையே அனைத்து பிரச்னைகளுக்குமான அடிப்படையான காரணமாகும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் களநிலைமைகளுக்கு ஏற்ப சிந்திப்பதை விடுத்து புலம்பெயர் குழுக்களின் தாளங்களுக்கு ஏற்ப நடனமாடுபவர்களாக இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே தமிழ் நாட்டிலிருந்தும் புலம்பெயர் சூழலிலிருந்தும் ஈழ அரசியலை தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கையாள முடிகின்றது.
எதையும் பேசுவோம் – ஆனால், எங்களை எவரும் தடுக்க முடியாது என்னும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
வடக்கு கிழக்கு மக்களை பிரதிநித்துவம் செய்யும் அரசியல் தலைவர்கள் என்போர் இவ்வாறான விடயங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதை விடுத்து அதனை மௌனமாக ஆமோதிப்பவர்களாகவே இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே, குழப்பங்களை மேற்கொள்ள விரும்புவர்கள் தொடர்ந்தும் உற்சாகம் பெறுகின்றனர்.
ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வசதியுள்ளவர்கள் தமிழ் தேசிய கதைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை.
அவர்களைப் பொறுத்தவரையில் வசதியான இடங்களை நோக்கிச் செல்வதைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர்.
உண்மையில், ஏழை மக்களுக்குத்தான் அரசியல் தீர்வு தேவை.
தங்களின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றிக் கொள்வதற்காகத்தானே ஒரு மக்கள் கூட்டத்துக்கு அதிகாரம் தேவைப்படுகின்றது.
ஆனால், அதிகாரத்தை பெறுவதற்கான போராட்டங்கள் இறுதியில் அந்த மக்களை பழங்குடியாக்கிவிடும் என்றால் அந்த அதிகாரத்துக்கான அரசியல் நகர்வுகள் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பதுதானே பொருள்.
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரையில் பிரதான அரசியல் பிரச்னை ஒன்றே ஒன்றுதான் – அதாவது, அவர்கள் மேய்ப்பர் இல்லாத ஆடுகளாக இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே அவர்களை எவர் வேண்டுமனாலும் மேய்த்து விடலாம் என்னும் ஆபத்தான அரசியல் சூழலொன்று உருவாக்கியிருக்கின்றது.
இந்த நிலைமை தொடர அனுமதித்தால் வடக்கு – கிழக்கில் வாழும் ஏழை தமிழ் மக்களுக்கு எதுவுமே எஞ்சப் போவதில்லை.
ஆண்டுகள் தோறும் மாண்டவர்களை நினைத்து அழுதுவிட்டுப் போவது மட்டுமே மிஞ்சலாம்.
அழுது புலம்புவதற்கு அதிகாரம் எதற்கு?

நன்றி ஈழநாடு 


No comments: