உலகச் செய்திகள்

அமெரிக்காவுடனான முறுகலுக்கு மத்தியிலும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்

காசாவில் தொடரும் தாக்குல் இடையே இஸ்ரேல் தனிப்படும் நிலை அதிகரிப்பு

ஜோ பைடன் – வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையில் சந்திப்பு

இஸ்ரேலின் பயங்கர தாக்குதலிடையே காசாவில் பட்டினி பாதிப்பும் அதிகரிப்பு

5,000 இஸ்ரேலிய படையினர் காயம், பலர் ஊனம்; இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை

போர் நிறுத்தத்தை கொண்டுவர குட்டரஸ் முயற்சி

அமெரிக்காவின் ‘வீட்டோ’வை அடுத்து தெற்கு காசாவில் தாக்குதல்கள் தீவிரம்


அமெரிக்காவுடனான முறுகலுக்கு மத்தியிலும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்

December 15, 2023 6:05 am 

மழையால் பலஸ்தீனர்களுக்கு மேலும் நெருக்கடி

காசா போரில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்படி அமெரிக்கா தனது கூட்டாளியான இஸ்ரேலை வலியுறுத்தி வரும் சூழலில் இரு தரப்புக்கும் இடையில் முறுகல் அதிகரித்து வருகின்றபோதும் காசா மீதான இஸ்ரேலின் உக்கிரத் தாக்குதல்கள் நேற்றைய (14) தினத்திலும் நீடித்தது. அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் ஜெரூசலத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையிலேயே விரிசல் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் தற்போது மூன்றாவது வாரமாக நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலின் முழு முற்றுகையில் உள்ள காசாவின் பெரும் பகுதி வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக நடைபெறும் தாக்குதல்களில்் அழிவை சந்தித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 18,600ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகமாக உள்ளனர்.

காசா எங்கும் நேற்றுக் காலை இடம்பெற்ற வான் தாக்குதல்களில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதியின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதில் கடந்த புதன்கிழமை இரவு தெற்கு காசாவின் ரபாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் இரு வீடுகளை தாக்கி தரைமட்டமாக்கியுள்ளன. அப்போது அந்த வீடுகளுக்குள் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் என பெரும் எண்ணிக்கையானோர் இருந்துள்ளனர்.

இதனால் 27 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் சிறுவர்கள் உட்பட நால்வர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை இரவும் காசா பகுதியில் கடும் மழை மற்றும் காற்று வீசியதால் ஏற்கனவே இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் மக்கள் மேலும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்கள் சீரற்ற காலநிலையால் கிழிந்தும், கூடாரங்களுக்கு நீர் தேங்கியும் உள்ளது. மக்கள் குளிரினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடும்மழையும் புயல்காற்றும் சில இடங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தின.

ஜபாலியா அகதிகள் முகாம் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியதாக அங்கு வசிப்போர் கூறினர். ரபாவிலும் மழையால் பல பிரச்சினைகள் நிலவுகின்றன.

வடக்கு காசாவைத் தொடர்ந்து தெற்கு காசவின் பிரதான நகரான கான் யூனிஸை மையப்படுத்தி இஸ்ரேல் போர் நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் பெரும்பாலானவர்கள் தற்போது மேலும் தெற்காக எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதியில் அடைக்கலம் பெற்று வருகின்றனர்.

காசா பகுதியின் சுமார் 85 வீதமானவர்களான 1.9 மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் ரபா பகுதியில் தற்போது ஒரு மில்லின் பேர் வரை அடைக்கலம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

62 சதுர கிலோமீற்றர் பகுதியைக் கொண்ட ரபாவில் தற்போது ஒரு சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் சுமார் 16,000 பேர் சிக்கி உள்ளனர். இது நியூயோர்க் (11,313), டோக்கியோ (6,158) மற்றும் லண்டன் (5,598) நகரங்களை விடவும் சனநெரிசல் மிக்க பகுதியாக மாறியுள்ளது. எனினும் இவ்வாறு அடைக்கலம் பெற்ற மக்கள் ஏற்கனவே பட்டினியால் தவித்து வரும் நிலையில் குளிராலும் வாடி வருகின்றனர்.

“நாங்கள் ஐந்து நாட்களை வெட்ட வெளியில் கழித்தோம். இப்போது கூடாரங்களில் நீர் நிரம்பியுள்ளது” என்று இடம்பெயர்்ந்த குடியிருப்பாளர் ஒருவரான பிலால் அல் கசாஸ் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

கடுமையான காற்று பலவீனமான கூடாரங்களை தூக்கி எறியும் நிலையில் அவைகளை பலப்படுத்துவதற்கு மேலும் பிளாஸ்டிக் போர்வைகளை பயன்படுத்தி வருகின்றனர். “எங்கே நாம் புலம்பெயர்வது? எமது கெளரவம் போய்விட்டது. பெண்கள் எங்கே ஆறுதல் அடைவார்கள்? எந்த குளியலறையும் இங்கே இல்லை” என்று 41 வயது கசாஸ் கூறினார்.

இந்நிலையில் மூளைக்காச்சல், மஞ்சள் காமாலை மற்றும் மேல் சுவாசக்குழாய் தொற்று போன்ற நோய்கள் தீவிரம் அடையும் அச்சுறுத்தல் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

காசாவில் மருத்துவ கட்டமைப்பு முழுமையாக சீர்குலைந்துள்ளது. சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது ஹமாஸ் நிர்வாகம், அது பேரழிவு மிக்க சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

“தொற்றுநோய்ச் சூறாவளி ஆரம்பித்துள்ளது,” என்று யுனிசெப் அமைப்புக்கான தலைமைப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 29 முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்குச் சம்பவங்கள் 66 வீதம் கூடி 59,895ஆகப் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் எஞ்சிய மக்களிடையே வயிற்றுப்போக்குச் சம்பவங்கள் 55 வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

காஸாவில் போர் காரணமாக அனைத்து கட்டமைப்புகளும் சேவைகளும் முடங்கிவிட்டதால் இந்த எண்ணிக்கை முழுமையாகக் கணக்கிடப்படவில்லை என்று அந்த ஐநா அமைப்பு கூறியது.

வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான் வைத்தியசாலையின் வார்டுகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கிச் சூடு நடத்துவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

போர் வெடிப்பதற்கு தூண்டுதலான இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து மேற்குக் கரையிலும் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இதில் ஜெனின் நகர் மீது இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று நடத்திய சுற்றிவளைப்புகளில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

பாதுகாப்பு படைகளை இலக்கு வைத்து வீதியில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே படையினர் இந்தத் தேடுதல்களில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு பல பில்லியன் டொலர் இராணுவ உதவிகளை வழங்கி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதுவரை இல்லாத வகையில் இஸ்ரேலுக்கு கடும் வார்த்தை பிரயோகங்களை கடந்த புதனன்று (13) பயன்படுத்தி இருந்தார். காசாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசுவதாகவும் அதற்கான சர்வதேச ஆதரவு பலவீனம் அடைந்திருப்பதாகவும் பைடன் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் “நாம் முடிவு வரையும், வெற்றிவரையும் செல்வோம். அதற்கு குறைவாக எதுவும் இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.

சர்வதேச ஆதரவுடனோ அல்லது இல்லாமலோ ஹமாஸுக்கு எதிரான போர் தொடர்ந்து நடத்தப்படும் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் எலி கொஹேன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜென் சுலிவன் நெதன்யாகு மற்றும் அவரது போர் அமைச்சரவையுடன் பேசுவதற்காக நேற்று ஜெரூசலத்தை சென்றடைந்தார்.

இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னர் வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைக்கு உரையாற்றிய சுலிவன், இந்த விஜயத்தில் போரை முடிப்பதற்கான கால எல்லை பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக குறிப்பிட்டார். சுலிவன் இஸ்ரேலில் “கடுமையான தீவிர பேச்சுவார்த்தையில்” ஈடுபடுவார் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சின் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்தார்.

போருக்குப் பின்னர் காசாவை நிர்வகிப்பது தொடர்பிலும் அமெரிக்க அரசுடன் நெதன்யாகு முரண்பட்டு வருகிறார்.

எனினும் ஹமாஸ் அல்லது போராட்ட தரப்புகள் இன்றி காசா அல்லது பலஸ்தீனம் தொடர்பான எந்த ஒரு ஏற்பாடும் மாயமானது என்று ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்துள்ளார்.

ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்தீன நாட்டை பெறும் பலஸ்தீன மக்களின் உரிமையை எட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கு ஹமாஸ் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

கொள்கை மற்றும் புள்ளிவிபர ஆராய்ச்சிகான பலஸ்தீன மையத்தினால் புதன்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில், பலஸ்தீன பகுதிகளின் 78 வீதமான மக்கள் ஹனியேவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். இதுவே போருக்கு முன்னர் 58 வீத ஆதரவே இருந்துள்ளது.

காசா பொதுமக்களின் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தமும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க உளவுப் பிரிவை மேற்கோள்காட்டி சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசாவில் இஸ்ரேல் பயன்படுத்திய வானில் இருந்து தரையை தாக்கும் வெடி பொருட்களில் கிட்டத்தட்ட பாதி அளவானவை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வழிகாட்டப்படாதவை என்று தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 

 




காசாவில் தொடரும் தாக்குல் இடையே இஸ்ரேல் தனிப்படும் நிலை அதிகரிப்பு

ஐ.நா. வாக்கு: பைடனும் விமர்சனம்

December 14, 2023 6:38 am 

காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் அவசர மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் கொடுத்திருக்கும் சூழலில் இராஜதந்திர ரீதியில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான குண்டு வீச்சுகளால் இஸ்ரேல் சர்வதேச அளவில் ஆதரவை இழந்து வருவதாக இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் தெற்கு காசாவில் சமகாலத்தில் உக்கிர போர் இடம்பெற்றுவரும் நிலையில் இஸ்ரேலியப் படை நேற்று இதுவரை இல்லாத அளவில் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. நேற்றைய உக்கிர மோதல்களில் மூத்த கேணல் ஒருவர் உட்பட பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் ஷெர்ஜையா பகுதியில் பலஸ்தீன போராளிகள் நடத்திய அதிரடி தாக்குதல் ஒன்றில் 44 வயது கேணல் இட்சக் பென் பாசத் கொல்லப்பட்டுள்ளார். கொலாணி படையணியின் தளபதியான இட்சாக் காசா மீதான தரைவழி தாக்குதலை ஆரம்பித்த பின்னர் இஸ்ரேலிய படைகளில் கொல்லப்பட்ட மூத்த உறுப்பினராக உள்ளார். இதே தாக்குதலில் மேலும் ஒன்பது இஸ்ரேலிய துருப்பினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவில் தொடர்ந்து குண்டு மழைபொழிந்து வருவதோடு மழையுடனான குளிர் காலம் ஆரம்பிப்பது காசாவில் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என்று உதவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் 85 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி அடிப்படை வசதிகள் இல்லாத தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் வரை கொல்லப்பட்டு 240 பேர் வரை பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நிலையில் சர்வதேச அனுதாபத்திற்கு மத்தியிலேயே காசா மீது இஸ்ரேல் போர் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் அது தொடக்கம் காசாவில் முழு முற்றுகையை செயற்படுத்திய இஸ்ரேல் அங்கு குடியிருப்புகள், மருத்துவமனைகள் என்று அனைத்து உட்கட்டமைப்புகள் மீது வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக சரமாரி தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் 18,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர். தவிர ஆயிரக்கணக்கானவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

டிசம்பர் ஆரம்பத்தில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தம் முறிந்ததை அடுத்து இஸ்ரேலியப் படை தனது தரைவழி தாக்குதலை வடக்கு காசாவில் இருந்து தெற்கை நோக்கி விரிவுபடுத்தியதோடு தெற்கின் பிரதான நகரான கான் யூனிஸ் கடும் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது.

வடக்கு காசாவில் தனது இலக்குகள் பெரும்பாலும் நிறைவேறி இருப்பதாக இஸ்ரேல் முன்னதாக குறிப்பிட்டபோதும் அங்கு இடிபாடுகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து உக்கிர மோதல்கள் நீடித்து வருகின்றன.

வடக்கு காசாவில் உள்ள காசா நகரில் ஏற்பட்ட மோதலிலேயே ஒரே தாக்குதலில் பத்து இஸ்ரேலிய துருப்பினர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் கடந்த ஒக்டோபர் பிற்பகுதியில் காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

“காசாவை அடிபணியச் செய்ய முடியாது”

இந்த சம்பவம் இஸ்ரேலால் காசாவை அடிபணியச் செய்ய முடியாது என்பதை காட்டுகிறது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

“உங்களது தோல்வியுற்ற தலைமை உங்களது வீரர்களின் உயிர்களை பொருட்படுத்தவில்லை என்பதை சியோனிஸ்ட்களுக்கு கூறிக்கொள்கிறோம். தொடர்ந்தும் நீங்கள் அங்கு இருந்தால், உங்கள் உயிர்களுக்கு விலைகொடுக்க வேண்டி இருக்கும் என்பதோடு பெரும் இழப்புகளை சந்திப்பீர்கள். இறைவன் நாடினால் ஏமாற்றம் மற்றும் இழப்பையே சந்திப்பீர்கள்” என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கில் ஜபலியா பகுதியில் உக்கிர மோதல் நீடிக்கிறது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றை இஸ்ரேலிய துருப்புகள் முற்றுகையிட்டிருப்பதாகவும் மருத்துவப்பணியாளர்களை மோசமாக நடத்துவதாகவும் காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கில் கான் யூனிஸை நோக்கி படையெடுத்திருக்கும் இஸ்ரேலிய துருப்புகள் அண்மைய நாட்களில் முன்னேற்றம் கண்டு அந்த நகரின் மையப் பகுதியை அடைந்துள்ளது. கடுமையான மோதல் நீடித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கூறியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய துருப்புகளால் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“மத்திய காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் மேலும் முன்னேறவில்லை. அவர்கள் கடும் எதிர்ப்பை சந்திப்பதோடு துப்பாக்கிச் சத்தங்கள், வெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளன” என்று மத்திய காசாவில் இருந்து 2 கிலோமீற்றருக்கு அப்பால் வசிக்கும் ஐந்து குழந்தைகளின் தந்தையான அபூ அப்தல்லா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய துருப்புகள் புல்டோசர்களையும் எடுத்துச் சென்றிருப்பதோடு ஹமாஸ் தலைவர் யஹ்யா அல் சின்வாரின் கான் யூனிஸ் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீதிகளை தகர்த்து வருகிறது. “அவர்கள் எங்கு சென்றாலும் எமது நிர்க்கதியான பொதுமக்களுக்கு இழப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகளையும் அழிவுகளையுமே தந்து வருகிறார்கள்” என்று அபூ அப்துல்லா கூறினார்.

வடக்கு காசாவில் உள்ள வைத்தியசாலைகள் பெரும்பாலும் செயலிழந்துள்ளன. தெற்கில் ஒருசில மருத்துவமனைகள் பகுதி அளவில் இயங்கி வரும் நிலையில் அங்கு காயமடைந்தவர்கள் நிரம்பி வழிகின்றனர்.

“நான் உட்பட்ட மருத்துவர்கள் சிறுவர்களின் உடல்களை மிதித்துக்கொண்டு சென்றே இறந்து வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்” என்று கான் யூனிஸில் உள்ள மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் கிறிஸ் ஹூக் தெரிவித்துள்ளார்.

காசாவுக்குக் கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை எகிப்து எல்லைக்கு அருகில் உள்ள ரபா பகுதியில் மாத்திரமே விநியோகிக்க முடியுமாக இருப்பதாக சர்வதேச நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தார்ப் பாய்களின் கீழ் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றிருப்பும் நிலையில் இந்த வாரமாகும்போது அங்கும் நிலைமை மோசமடைந்து வருகிறது.

ஐ.நா மனிதாபிமான அலுவலகத்திற்கான காசா குழுவின் தலைவரான கெம்மா கொனல் கூறியதாவது, “நேற்று இரவு கடும் மழை மற்றும் காற்று வீசியது. தற்காலிக முகாம்களில் இருக்கும் இந்த மக்கள் பரிதாபத்தை சந்தித்து வருகிறார்கள்” என்றார். இவர் தற்போது ரபாவை தளமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்.

எகிப்து எல்லை ஊடாக உதவிகளை அதிகரிப்பதற்கு எகிப்து ஆதரவளித்து வருகிறது. பொதுமக்கள் வருவதற்கு உதவியாக ரபாவில் நான்கு மணி நேர போர் நிறுத்தம் ஒன்றையும் அது அறிவித்துள்ளது. எனினும் பாதுகாப்பற்ற சூழலில் உதவிகள் செல்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஐ.நா வாக்கு

ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவசர போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தின் மீது அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய நிலையில், செயற்படுத்துவதற்கு எந்த கடப்பாடு ம் இல்லாத பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட அவசர மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழைப்புக்கு அதிகப் பெரும்பான்மை நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் முக்கால் பங்கு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததோடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து வெறுமனே எட்டு நாடுகளே எதிராக வாக்களித்தன.

இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பெரும்பாலான நாடுகள் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு ஆதரவாக உள்ளன என்று பைடன் தெரிவித்தார்.

“ஆனால் கண்மூடித்தனமான குண்டுவீச்சுகளை நடத்துவதால் இஸ்ரேல் ஆதரவை இழக்க ஆரம்பித்துள்ளது” என்று வொஷிங்டனில் நன்கொடையாளர் பிரசார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பைடன் தெரிவித்தார்.

உளவுத்தகவல்களை பகிரும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளிகளான கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், “ஹமாஸை தோற்கடிப்பதன் விலை அனைத்து பலஸ்தீனிய குடிமக்களின் தொடர்ச்சியான துன்பமாக இருக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது கடும்போக்கு அரசில் இருந்து மாறவேண்டும் என்றும் சுதந்திர பலஸ்தீன நாடு ஒன்றை மறுக்க முடியாது என்றும் பைடன் கூறியுள்ளார். இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான விரிசலை வெளிப்படையாகக் காட்டுவதாக உள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

போருக்குப் பின்னரான காசாவின் எதிர்காலம் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை நெதன்யாகு நிராகரித்திருப்பதோடு காசாவை மேற்குலக ஆதரவு பெற்ற பலஸ்தீன அதிகார சபை ஆட்சி புரிய வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பையும் அவர் எதிர்த்துள்ளார்.   நன்றி தினகரன் 






ஜோ பைடன் – வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையில் சந்திப்பு

- உக்ரைனுக்கு உதவிகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்து

December 13, 2023 1:03 pm

உக்ரைனுக்கு மேலதிக உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி Volodymyr Zelensky அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் தலைநகர் வொஷிங்டன் DC-இல் தலைவர்கள் பலரைச் சந்தித்துள்ளார்.

61 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதி முயற்சிகளை அவர் இந்த சந்திப்புகளின் போது மேற்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய தவறான செயற்பாடுகளை காரணங்காட்டி அமெரிக்க காங்கிரஸை சமரசப்படுத்தினாலேயே இந்த உதவித் தொகையைப் பெற முடியுமென ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.   நன்றி தினகரன் 





இஸ்ரேலின் பயங்கர தாக்குதலிடையே காசாவில் பட்டினி பாதிப்பும் அதிகரிப்பு

மேலும் ஒரு மருத்துவமனை சுற்றிவளைப்பு

December 13, 2023 6:00 am 

இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள் தெற்கு காசா மீது கடந்த திங்கள் இரவு மற்றும் நேற்று (12) காலையில் சரமாரி தாக்குதல்களை நடத்தியதோடு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராளிகளுக்கு இடையே இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் கடுமையான மோதல் காரணமாக உதவி விநியோகங்கள் பெரும்பாலும் ஸ்தம்பித்த சூழலில் காசா மக்களிடையே பட்டினி அதிகரித்திருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

எகிப்தின் எல்லையை ஒட்டிய தெற்கு காசா நகரான ரபாவில் வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவில் அவசர உதவிப் பணியாளர்கள் இடிபாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து தேடி வந்தனர்.

காசா மக்களுக்கு பாதுகாப்புக்காக ரபா பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள் இதுவரை இல்லாத அளவு தீவிரமடைந்திருந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“குண்டு வீச்சுகளால் எம்மால் இரவில் உறங்க முடியவில்லை. காலையில் குழந்தைகளுக்கு உணவு தேடி வீதியில் சுற்றியபோது எந்த உணவும் இருக்கவில்லை” என்று 40 வயதான ஆறு குழந்தைகளின் தந்தை அபூ கலீல் ரபாவில் இருந்து ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியில் விபரித்திருந்தார்.

“என்னால் ரொட்டியை பெற முடியவில்லை. விலைமகள் அதிகரித்துள்ளன. அரிசி, உப்பு மற்றும் அவரைகளின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

இது பட்டினி இருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது” என்று கூறிய அவர், “இஸ்ரேல் எம்மை குண்டு போட்டும் பட்டினியில் வைத்தும் இரு முறை கொல்கிறது” என்றார்.

தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸின் மையப் பகுதியை இலக்கு வைத்து ஷெல் குண்டு தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா அல் சின்வாரின் வீடு இருக்கும் வீதியில் நேற்று இஸ்ரேலிய டாங்கிகள் இயங்கியதாக ஒருவர் குறிப்பிட்டார். கான் யூனிஸில் இரவு நடந்த தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை (08) வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது தொடக்கம் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா மக்களிடை பட்டினி பாதிப்பு மோசமடைந்திருப்பதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. காசா மக்கள் தொகையில் பாதிப் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவுக்கான உதவி விநியோகங்கள் ரபா பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் எஞ்சிய பகுதிகளுக்கான உதவிகள் கடந்த சில நாட்களாக பெரும்பாலும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஐ.நா மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பது மற்றும் பிரதான வீதிகள் வழியாக பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதே உதவிகள் தடைப்படுவதற்குக் காரணமாகும்.

அதேபோன்று போதிய எரிபொருள் இன்மை, தொடர்பாடல்கள் முடக்கப்பட்டுள்ளது மற்றும் தாக்குதல் அதிகரித்திருப்பதால் எகிப்துடனான ரபா எல்லைக் கடவைக்கு ஓட்டுநர்களால் பயணிக்க முடியாத நிலை ஆகிய காசாவில் டிரக் வண்டிகளின் பற்றாக்குறையும் உதவிகள் தடைப்படக் காரணமாகியுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனைக்கு இஸ்ரேலிய படைகள் நேற்று (12) ஊடுருவியதை அடுத்து மருத்துவ பணியாளர்கள் உட்பட அங்குள்ள ஆண்களை மருத்துவமனை முற்றவெளியில் சுற்றிவளைத்ததாக காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக கடும் மோதல் நீடித்து வந்த ஜபலியா பகுதிக்கு அருகில் இருக்கும் இந்த மருத்துவமனையில் சுமார் 3,000 பேர் வரை அடைக்கலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா மருத்துவமனைகளில் மூன்றில் ஒன்று அல்லது அதற்குக் குறைவாக 11 மருத்துவமனைகள் மாத்திரமே பகுதி அளவில் இயங்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

“வெறும் 66 நாட்களுக்குள் சுகாதார அமைப்பு 36 மருத்துவமனைகளில் இருந்து 11 பகுதி அளவு இயங்கும் மருத்துவமனைகளாக குறைந்துள்ளன.

இதில் ஒன்று வடக்கிலும் 10 கிழக்கிலும் இயங்குகின்றன” என்று ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரிக் பீபர்கோன் காசாவில் இருந்து ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

பைடனின் அர்ப்பணிப்பு உறுதி

காசா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 18,205 ஆக அதிகரித்திருப்பதோடு சுமார் 50,000 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

காசாவில் தரைவழி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் பலஸ்தீன போராளிகளிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இந்த மோதல்களில் கடந்த திங்கட்கிழமை மேலும் ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும் மூவர் படுகாயம் அடைந்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. எனினும் இவ்வாறு கொல்லப்பட்ட வீரர்களில் 20 பேர் தமது துருப்புகளுக்கு இடையிலான தவறுதலான துப்பாக்கிச் சூடுகள் அல்லது விபத்துகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று வெளியிட்ட புதிய தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வான் தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள் மற்றும் துப்பாச்சூடுகள் ஆகிய சொந்தத் தாக்குதல்களில் 13 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இராணுவ வாகனங்கள் சொந்த வீரர்கள் மீது மோதிய சம்பவங்களில் மேலும் இரு வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருவதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த திங்கட்கிழமை யூதர்களின் பண்டிகை நாளான கன்னுகாவை வெள்ளை மாளிகையில் கொண்டாடினார். அதன்போது இஸ்ரேல் மீதான தனது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்று வலியுறுத்தினார். “இஸ்ரேல் இல்லை என்றால் உலகில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று கதை ஒன்று உள்ளது” என்று பைடன் குறிப்பிட்டார்.

இதேவேளை போருக்குப் பின்னர் காசா பகுதி இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பேசியபோதே நெதன்யாகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“அந்தப் பகுதி இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். போருக்குப் பின், சிவில் நிர்வாகம் ஒன்று காசாவில் செயற்படும் என்பதோடு வளைகுடா நாடுகளின் தலைமையின் கீழ் அந்தப் பகுதி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும். நாம் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டோம்” என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.

இதன்போது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆட்சியில் இருக்கும் பலஸ்தீன அதிகாரசபையுடனான போருக்கான சாத்தியத்தை நெதன்யாகு மறுக்கவில்லை.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரான ஜெனினில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஆளில்லா வான் தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்தக் காலப்பிரிவில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் இந்தப் பகுதிகளில் 270 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு அதுவே இந்த ஆண்டில் 487 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.

இந்தப் போர் பிராந்தியத்திலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. யெமன் கடற்கரைக்கு அப்பால் இஸ்ரேலை நோக்கி பயணித்த நோர்வே கொடியுடனான இரசாயன கப்பல் ஒன்றை இலக்கு வைத்து யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து சேதமடைந்துள்ளது. எனினும் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

தாக்குதலின் போது அமெரிக்க கப்பல்கள் எதுவும் அருகாமையில் இல்லை என்றும், ஆனால் அமெரிக்க கடற்படை நாசகார கப்பலான யுஎஸ்எஸ் மேசன் அங்கு இருந்து உதவி வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாப்- எல்-மண்டேப் ஜலசந்திக்கு வடக்கே சுமார் 60 கடல் மைல்கள் (111 கிலோமீற்றர்) தொலைவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தக் கப்பல் மலேசியாவில் தாவர எண்ணெய் மற்றும் உயிரி எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு எகிப்தில் உள்ள சுயஸ் கால்வாயை நோக்கி சென்று கொண்டிருந்ததாக கப்பல் கண்காணிப்பு நிறுவனமான மரைன்ட்ராஃபிக் தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என உறுதியளித்தனர். அவர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும் சரி, சர்வதேச கப்பல் நிறுவனங்களை இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு நுழைவதை எச்சரித்தனர்.

நன்றி தினகரன் 







5,000 இஸ்ரேலிய படையினர் காயம், பலர் ஊனம்; இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை

December 11, 2023 2:12 pm 

காசாவில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடக்கம் 5,000 இற்கும் அதிகமான இஸ்ரேலிய படையினர் காயமடைந்திருப்பதாகவும் மனநல நெருக்கடி நிலை ஒன்று அதிகரித்து வருவதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரித்திருப்பதாக இஸ்ரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஒவ்வொரு நாளும் காயமடைந்த சுமார் 60 படை வீரர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் புனர்வாழ்வு திணைக்களத்திற்கு வருவதாக அந்த அமைச்சின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் குறைந்தது 2,000 இஸ்ரேலிய படையினர் உடல் வலுவீனர்களாக அறிவிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நாயகம் லிமோர் லூரியா, ‘யேடியோத் அஹ்ரோனொத்’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். காயமடைந்துள்ள புதிய படையினரை அனுமதிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதை சுகாதார அதிகாரிகள் விரைவுபடுத்தி இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இதற்கு முன்னர் நாம் இப்பாடியான ஒரு நிலையை சந்தித்ததில்லை’ என்று கூறிய லூரியா, போர் ஆரம்பித்தது தொடக்கம் 5,000 படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் சுமார் 60 வீதத்தினர் கைகள் மற்றும் கால்களில் மோசமான காயத்தை சந்தித்திருப்பதாகவும் பலருது உடல் பாகங்களை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் லூரியோ குறிப்பிட்டார்.

சுமார் 12 வீத காயங்கள் மண்ணீரல், சிறுநீரகம் மற்றும் உள் உறுப்புகளின் சிதைவு போன்றவற்றால் ஏற்பட்டிருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடக்கம் குறைந்தது 420 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 







போர் நிறுத்தத்தை கொண்டுவர குட்டரஸ் முயற்சி

- ஐ.நா. தவறியதற்கு வருத்தம் தெரிவிப்பு

December 11, 2023 11:54 am 

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவர ஐ.நா பாதுகாப்புச் சபை தவறியதற்கு வருத்தத்தை தெரிவித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், பாதுகாப்புச் சபை முடங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாரில் நடைபெறும் டோஹா மாநாட்டில் உரையாற்றிய குட்டரஸ், பாதுகாப்புச் சபையின் அதிகாரம் மற்றும் திறன் குறைமதிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியதோடு, ‘நான் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன்’ என்றும் உறுதி அளித்தார். காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் மீதே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. அந்தத் தீர்மானம் அபாயகரமான மற்றும் யதார்த்தபூர்வமற்றது என்று அது கூறியது.

ஐ.நா சானத்தில் தனக்கு இருக்கும் விசேட அதிகாரத்தை பயன்படுத்தியே குட்டரஸ் போர் நிறுத்த தீர்மானத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டுவந்தார்.   நன்றி தினகரன் 








அமெரிக்காவின் ‘வீட்டோ’வை அடுத்து தெற்கு காசாவில் தாக்குதல்கள் தீவிரம்

- மனிதாபிமான ‘பேரழிவு’ பற்றி எச்சரிக்கை

December 11, 2023 8:44 am 

தெற்கு காசாவில் இஸ்ரேலியப் படை நேற்று (10) குண்டுத் தாக்குதல்களை தீவிரப்படுத்தி பலஸ்தீன போராளிகளுடன் கடும் மோதலில் ஈடுபட்ட நிலையில் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தாக்குதலில் இருந்து தப்புவதற்கு பாதுகாப்பான இடங்களை தேடி வெளியேறி வருகின்றனர்.

காசா பகுதியில் நோய் மற்றும் பட்டினி அதிகரித்து வரும் நிலையில் பேரழிவு கொண்ட மனிதாபிமான நெருக்கடி ஒன்று பற்றி உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.

இஸ்ரேலிய துருப்புகள் தெற்கு நகரான கான் யூனிஸ் மற்றும் அங்கிருந்து எகிப்துடனான எல்லையை ஒட்டிய ரபா செல்லும் பாதையை இலக்கு வைத்து கடும் தாக்குதல்களை நடத்துவதாக காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.கான் யூனிஸுக்கு அருகில் ஹமாஸ் மற்றும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் இஸ்ரேலிய படைகளுடன் நேற்று கடும் மோதலில் ஈடுபட்டு வந்ததாக அந்த போராட்டக் குழுக்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போரில் காசாவில் குறைந்தது 17,700 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் முன்னெப்போதும் இல்லாத அளவு பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தி சுமார் 1200 பேர் வரை கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப்போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

காசாவில் தொடர்ந்து 137 பணயக்கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

காசாவில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு பெறுவதற்கு சிறிய அளவான தேர்வுகளே இருக்கும் நிலையில் கணிசமானவர்கள் மருத்துவமனைகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதல்களால் கடும் சேதத்திற்கு உள்ளாகி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வடக்கில் உள்ள காசா நகரில் இருக்கும் அல் ஷிபா மருத்துவமனையில் அயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

அந்த மருத்துவமனையின் மூற்றவெளிகள் மற்றும் தோட்டங்களில் கட்டட இடிபாடுகளுக்கு மத்தியிலும் சாதாரண துணிகளால் அமைக்கப்பட்ட கூடாரங்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இஸ்ரேலிய விமானங்கள் மற்றும் டாங்கிகள் கடுமையாக குண்டு வீசி வருவதால் இங்கு வந்ததாக காசா நகரின் ஷஜையா பகுதியைச் சேர்ந்த 56 வயது சுஹைல் அபூ டல்பா தெரிவித்தார்.

‘அது பயங்கரமாக இருந்தது. ஷெல் குண்டு ஒன்று வீட்டில் விழுந்து எனது 20 வயது மகன் காயமடைந்தான்’ என்று அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். ‘நாம் பழைய நகருக்குச் சென்றோம் அங்கே எல்லாவற்றின் மீதும் தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டிருந்தன. எமக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார். ‘அவர்கள் (இஸ்ரேல்) மீண்டும் மருத்துவமனைக்குள் வருவார்களா என்பது எமக்குத் தெரியவில்லை’ என்றார். மத்திய காசாவின் அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு 24 மணி நேரத்திற்குள் 71 உடல்கள் வந்ததாக அந்தப் பகுதியின் சுகாதார நிர்வாகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

தெற்கு பகுதியின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு 62 சடலங்கள் வந்ததாக சுகாதார நிர்வாகம் கூறியது.

மருத்துவமனைக்குள் குழந்தைகள் உட்பட மற்றவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக தரையில் காத்திருக்கும் நிலையில் வெளியே இஸ்ரேலிய தாக்குதலால் எரிந்த கட்டடம் ஒன்றை அணைக்கு பணியில் தீயணைப்பாளர்கள் ஈடுபட்டு வந்ததாக அங்குள்ள ஏ.எப்.பி செய்தியாளர் விபரித்துள்ளார்.

‘நிலைமை பேரிடம் மாத்திரமல்ல பேரழிவு கொண்டது’ என்று ஒக்ஸ்பாம் அமைப்பின் புஷ்ரா காலிதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை காசா மக்களில் பாதிப்பேர் பட்டினியில் வாடுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.

உலக உணவுத்திட்டப் பிரிவின் துணை பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் காசாவுக்கு நேரடிப் பயணத்தை மேற்கொண்ட பின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிவித்தார். சற்றும் எதிர்பாராத பயம், குழப்பம், துயரத்தைப் பார்த்ததாக அவர் குறிப்பிட்டார். காசாவின் சில வட்டாரங்களில் 10இல் 9 பேர் தினசரி சாப்பாடு இல்லாமல் தவிப்பதாக ஸ்காவ் கூறினார்.

காசாவில் தற்போதிருக்கும் நிலைமையில் உணவை விநியோகம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்று அவர் கூறியதாக பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்தது.எகிப்து எல்லையோரம் இருக்கும் ரபா பாதையில்தான் தற்போது காசாவுக்கு உணவு செல்கிறது. அதேபோன்று இன்னொரு பாதையைத் திறக்க வேண்டும் என்று உலக உணவுத் திட்டப் பிரிவு கேட்கிறது.

சிறுவர்களுக்கான மரண தண்டனை
காசாவின் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் 1.9 மில்லயன் மக்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த குறுகலான நிலப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முடியாது முடக்கப்பட்டிருக்கும் நிலையில் எகிப்து எல்லைக்கு அருகாமையில் உள்ள ரபாவில் மக்கள் பாரிய அளவில் அடைக்கலம் பெற்று வருகின்றனர்.

இந்த மோதலால் சுமார் ஒரு மில்லியன் சிறுவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில் தெற்கு காசாவில் மோதல் தீவிரம் அடைந்திருப்பதால் சிறுவர்களுக்கான பாதுகாப்பான இடங்கள் அங்கு தீர்ந்து வருகின்றன. ‘அவர்கள் மேலும் மேலும் தெற்காக குடிநீர், உணவு அல்லது பாதுகாப்பு இல்லாத மக்கள் நிரம்பி இருக்கும் சிறிய பகுதிக்குள் சுருங்கியுள்ளனர். இதனால் சுவாசத் தொற்று மற்றும் நீர் மூலம் பரவக்கூடிய நோய்கள் அதிகரிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’ என்று யுனிசெப் நிறுவனத்தின் அதெல் கோதிர் தெரிவித்துள்ளார்.

‘காசா பகுதிக்கு செல்லும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் சவால்களும் குழந்தைகளுக்கான மற்றொரு மரண தண்டனையாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

காசாவில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி குறிப்பிட்டிருப்பது அங்கு மனிதாபிமான நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் காசாவில் இஸ்ரேலிய துருப்புகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. பணயக்கைதிகளை மீட்கும் முயற்சிகளும் தோல்வி அடைந்து வரும் நிலையில் இஸ்ரேலிய தாக்குதல்களால் 25 வயது சஹர் பீரி என்ற பணயக்கைதி கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவத்துள்ளது.

அமெரிக்காவின் வீட்டோவால் பதற்றம்
போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது. இந்தத் தீர்மானம், உண்மை சூழலில் இருந்து வேறுபட்டிருப்பதாகவும் காசாவில் ஹமாஸ் அதிகாரத்தில் நீடிப்பதற்கு உதவும் என்றும் அமெரிக்க தூதுவர் ரொபட் வூட் இதன்போது கூறியிருந்தார்.

அமெரிக்காவின் வீட்டோவை மனிதாபிமானமற்றது என ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினர் இஸாத் அல் ரெஷிக் விபரித்துள்ளார். 2007 இல் காசாவில் ஹமாஸிடம் அதிகாரத்தை இழந்த பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இந்த வீட்டோ மூலம் இஸ்ரேலின் போர் குற்றங்களுக்கு அமெரிக்கா உடந்தையாகியுள்ளது என்றார்.

மறுபுறம் அமெரிக்காவின் வீட்டோவை வரவேற்றிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஹமாஸை ஒழிக்கும் போரை இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுக்கும்’ என்றார்.

எனினும் வீட்டோ பயன்படுத்தப்பட்டிருப்பது பிராந்தியத்தில் கட்டுப்படுத்த முடியாத சூழலை ஏற்படுத்தும் என்று ஹமாஸ் அமைப்பு ஆதரவான ஈரான் எச்சரித்துள்ளது.

காசாவுக்கு உணவு மற்றும் மருந்துகள் அனுமதிக்கப்படும் வரையில் இஸ்ரேலிய துறைமுகங்களை நோக்கிச் செல்லும் அனைத்து கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் ஆதரவு யெமன் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் சனிக்கிழமை (09) எச்சரித்தனர்.

இதேவேளை செங்கடலில் இரண்டு ஆளில்லா விமானங்களை தமது போர் கப்பல்களில் ஒன்று சுட்டு வீழ்த்தியதாக பிரான்ஸ் இராணுவம் நேற்று கூறியது. அந்த ஆளில்லா விமானங்கள் யெமன் துறைமுகத்தில் இருந்து கப்பலை நோக்கி வந்ததாக அது கூறியது.

அதேபோன்று இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையில் தொடர்ந்து நீடிக்கும் மோதல்கள் பிராந்தியத்தில் பரந்த அளவில் மோதல் ஒன்றை தூண்டும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. லெபனானில் இருந்து இடம்பெற்ற தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்தாக இஸ்ரேல் இராணுவம் சனிக்கிழமை கூறியிருந்தது.

தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா அமைதிகாக்கும் நிலை ஒன்றின் மீதும் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.நா படை குறிப்பிட்டுள்ளது. எனினும் அந்தத் தாக்குதல் எங்கிருந்து வந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருவதாக அது கூறியது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்களில் மேலும் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் கூறியது.   நன்றி தினகரன் 








No comments: