மாண்புடை மார்கழி மனமதில் இருத்துவோம் !மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா மார்கழி என்பது மனநிறை மாதம் 
மாதவன் மலரடி போற்றிடும் மாதம் 
கோதையும் தமிழைக் கொட்டிய மாதம் 
குவலயம் குளிர்மையாய் ஆகிடும் மாதம் 

வாசகர் ஈசனைப் பாடிய மாதம் 
மகேசனை மங்கையர் போற்றிடும் மாதம் 
பூவெலாம் பனித்துகள் அமர்ந்திடு மாதம்
புவியினைத் தேவரும் விரும்பிடு மாதம் 

வைகறை யாவரும் விழித்திடும் காலம்
மனமெலாம் இறையினை இருத்திடு காலம் 
பொய்யெனும் மாயைப் போக்கிட இறையினை
மெய் யடியார்கள் வேண்டிய காலம் 

உணர்வுடன் இறையினை உளமதில் இருத்தியே
துயிலினைக் களைந்திட தொடக்குவார் மங்கைகள் 
பரமனைப் பாடியே தெருவெலாம் வருவதால்
பக்தியின் பேரொளி பரவிடும் காலமே 

ஆலயம் எங்கணும் தீபங்கள் ஒளிர்விடும்
அடியவர் அனைவரும் ஆலயம் ஏகுவார்
காலையில் கதிரவன் எழுந்திடு முன்னரே
கனிவுடன் இசைத்தமிழ் காற்றிலே கலந்திடும் 

மாதவன் கோவிலில் பாசுரம் ஒலிக்கும்
மகேசன் கோவிலில் வாசகம் ஒலிக்கும்
சைவம் வைணவம் சங்கமம் ஆகும்
சன்மார்க்க வழியை  மார்கழி வழங்கும் 

பீடை என்பது பொருத்தமே அல்ல
பீடுடை என்பதே பெரிதும் பொருத்தம் 
மார்கழி தேவர்க்கு உகந்த நல்மாதம்
மனமதில் இருத்தியே பரவுவோம் இறையினை  
No comments: