பொன்னூஞ்சல் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


 ஆகாயப் பந்தலிலே ஊர் கோலம் போகுதம்மா என்ற பாடலை 50 வருடங்களுக்கு முன் படம் வெளிவந்த போது கேட்டு ரசிக்காத திரைப் பட ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் எனலாம். இலங்கை வானொலியில் தினம் தோறும் ஒலித்த இந்த பாடல் தமிழகத்திலும், இலங்கையிலும் அந்தளவு பிரபலமடைந்து இன்றும் திரைப் பிரியர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அந்தளவுக்கு பிரபலமான இந்த பாடல் இடம் பெற்ற படம்தான் பொன்னூஞ்சல்.


கோமதிசங்கர் பிக்சர்ஸ் சார்பில் நெல்லை மாவட்டம் சங்கரன்

கோயிலை சேர்ந்த பெரும் தொழிலதிபரான கே எஸ் குத்தாலிங்கம் படத்தை தயாரித்தார். சிவாஜியின் நண்பரான இவர் செல்வந்தராக விளங்கிய காரணத்தினால் எவரிடமும் கடன் வாங்காமல் தன் சொந்த செலவிலேயே படத்தை தயாரித்தார். சிவாஜியின் ஒத்துழைப்போடு படம் துரித கதியில் தயாரானது. ஆனாலும் என்ன காரணத்தாலோ படம் கருப்பு வெள்ளைப் படமாகவே உருவானது.

கிராமத்தை சுற்றி வட்டமிட்டு உருண்டு புரண்டு காதலிக்கிறது ஒரு காதல் ஜோடி. முத்து, வள்ளி என்ற இந்த ஜோடியின் காதலுக்கு எதிராக வருகிறான் பொன்னன். வள்ளியின் தந்தையும், முத்துவின் தந்தையும் வீண் அகம்பாவத்தினாலும் , வறட்டு பிடிவாதத்தால் கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க காதலர்கள் நொறுங்கிப் போய் விடுகிறார்கள். பொன்னனின் சதித் திட்டத்தால் மைனர் மாணிக்கம் வள்ளியின் கணவனாகிறான். ஆனால் மணவறையில் அவனின் சாதி வழக்கப் படி அவனின் சகோதரி முறையிலானவள் மாணிக்கம் சார்பில் வள்ளி கழுத்தில் தாலி கட்டுகிறாள்! பொன்னனின் தொடர் சதியால் மாணிக்கம் வள்ளியை தீண்டாமல் , விலைமாதுவின் மடியில் விழுந்து கிடக்கிறான். முத்து, வள்ளி ஒன்று சேர்ந்தார்களா, மாணிக்கத்தின் கதி என்ன, பொன்னனின் சதி வெற்றி பெற்றதா என்பதுதான் படத்தின் மீதி கதை.


படத்துக்கு கதை வசனம் எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி. அவரின் அனுபவ பேனா பல இடங்களில் வசனங்களை அழுத்தமாக பதித்தது. அவற்றை அழகுற , அழுத்தமாக உணர்ச்சிகரமாக பேசி நடிக்க நடிகர்கள் அமைந்தது நல்லதாகப் போயிற்று. சிவாஜி, உஷா நந்தினி ஆடிப் பாடுகிறார்கள், அவ்வப்போது பிரிவு வேதனையால் துடிக்கிறார்கள். சிவாஜியின் நடிப்புத் திறன் சகஸ்ரநாமத்துடன் வாதாடும் போது வெளிப்படுகிறது. உஷா நந்தினி கொஞ்சுகிறார், அல்லது விம்முகிறார்.

படத்தில் இரண்டாவது ஹீரோவாக முத்துராமன் வருகிறார். வழக்கமான நடிப்பு. நம்பியார் படம் முழுதும் வருகிறார். அநியாயம் செய்கிறார். இறுதி காட்சியில் இளைய நடிகர்களுக்கு தான் சளைத்தவனில்லை என்பது போல் கற்பழிப்பு காட்சியில் தூள் கிளப்பி விட்டார். அடேங்கப்பா!

சோ, மனோரமா, தங்கவேலு, ஏ வீரப்பன் , புஷ்பமாலா, பக்கிரிசாமி,

உசிலைமணி என்று ஒரு டீம் நகைச்சுவைக்கு பாடு பட்டு ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. எஸ் வி சுப்பையா , எஸ் வி சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி, காந்திமதி , சி ஐ டி சகுந்தலா , ஆகியோர் நடிப்பு படத்துக்கு வலு சேர்க்கிறது.

படத்தில் இடம் பெற்ற ஆகாய பந்தலிலே, நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் பாடல்களையும், படத்தில் இடம் பெறாத வருவான் மோகன ரூபன் எனக் காத்திருந்த காத்திருந்த கன்னி இவள் பாடலையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். நெல்லை அருள்மணி , முத்துச் சரம் சூடி வரும் வாலிப பொண்ணுக்கு பாடலை எழுதி இருந்தார். டீ எம் எஸ் , சுசிலா குரலில் , எம் எஸ் விஸ்வநாதன் இசையில் பாடல்கள் தேனாய் இனித்தன .

எஸ் மாருதிராவ் ஒளிப்பதிவு செய்ய சி வி ராஜேந்திரன் படத்தை இயக்கினார். ஆனாலும் படத்தில் நாத்தனார் தாலி கட்டுவதையும், அதனால் வள்ளி முத்துவுக்கு தான் உரியவள் என்றும் நியாயப்படுத்தப் பட்டத்தை ரசிகர்கள் ஏற்கவில்லை. இதனால் படத்தின் பாடல்கள் அடைந்த வெற்றியை படம் அடையவில்லை!

No comments: