இலங்கையின் மத்திய பகுதியிலிருக்கும் மாத்தளை நகரம் வரலாற்றில் கவனத்திற்குரியது. சமகாலத்தில் மலையகம் 200 என்னும் தொனிப்பொருளில் கருத்தரங்குகள், மாநாடுகளில் பேசுபொருளாக விளங்குவதும் மாத்தளைதான்.
200 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து கப்பல் மார்க்கமாக அழைத்துவரப்பட்ட இந்தியத்தமிழர்கள்,
தலைமன்னாரிலிருந்து கால் நடையாகச் சென்றனர்.
அவர்கள் முதலில் தங்கவிடப்பட்ட பிரதேசம்
மாத்தளை.
இந்த வரலாற்றுச்செய்திக்கு ஆதாரமாகத் திகழ்வது அங்கு
எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம். 1983 கலவர காலத்தில் இங்கிருந்த தேர்களையும் கயவர்கள் எரித்தார்கள்.
ஒரு காலத்தில் மாத்தளை
நகரசபையின் தலைவராக விளங்கியவரும், எலிசபெத் மகாராணி இலங்கை வந்தவேளையில் அவரது கையை
குலுக்கி வரவேற்றவரும், பிரித்தானியாவின் ஆளுகைக்குள் இலங்கை இருந்தபோது, அந்த ஏகாதிபத்தியத்தை
எதிர்த்து கிளர்ச்சி செய்த வீர புறான் அப்புவுக்கு நினைவுச்சின்னம் எழுப்பியவருமான
பெரியார் தம்பிராஜா அய்யாவையும் அந்தக்கயவர்
கூட்டம் உயிரோடு எரித்தது.
இவ்வாறு தீக்குளித்த சீதையாக
புனர்ஜன்மம் எடுத்த பூமியான மாத்தளை, பல எழுத்தாளர்களையும் சமூக நலப்பணியாளர்களையும் எமக்கு
வரவாக்கியிருக்கிறது.
அவர்களில் சிலர் எனக்கு
நன்கு அறிமுகமானவர்கள். நாடக திரைப்பட கலைஞர் மாத்தளை கார்த்திகேசு, எழுத்தாளர்கள்
மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், ஏ.பி. வி. கோமஸ், மலரன்பன். இவர்களின் வரிசையில் மாத்தளை செல்வா என நாம்
அழைக்கும் எச். எச். விக்கிரமசிங்கா.
1970 களில் எனக்கு வீரகேசரியுடன் தொடர்பு ஏற்பட்ட காலத்தில்
அங்கே விநியோகப்பிரிவில் இவர் பணியாற்றிய காலத்தில் அறிமுகமானார்.
நான் 1972 இல் வீரகேசரி நீர்கொழும்பு பிரதேச நிருபராக இயங்கியபோது, அங்கு அடிக்கடி செல்லநேர்ந்த வேளைகளில் முதல் முதலில் சந்தித்தேன். 1973 இல் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மாநாடு அட்டனில் நடந்தபோதுதான் எமக்கிடையே நட்புறவு மலர்ந்தது. இவ்விழாவுக்கு இந்தியாவிலிருந்து பொதுவுடமைக்கட்சியின் தோழர் பாலதண்டாயுதமும் வந்திருந்தார். கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை நாவலும் வெளியிடப்பட்டது.
மாத்தளை செல்வாவுடனான நட்புறவு அரைநூற்றாண்டையும் கடந்து விக்கினமின்றி தொடருகின்றது.
வடக்கு மாத்தளையை பூர்வீகமாகக்கொண்டிருந்த
இவருக்கு இலங்கை எங்கும் நண்பர்கள். அவர்கள் கலை, இலக்கியவாதிகளாகவும், ஊடகவியலாளர்களாகவும்,
மாத்திரமின்றி அரசியல் வாதிகளாகவும் அமைச்சர்களாகவும் இருப்பவர்கள்.
முன்னாள் பிரதமர் ஶ்ரீமாவோ
பண்டாரநாயக்காவுடனும் இவருக்கு நட்புறவு இருந்தது. மக்கள் விடுதலை முன்னணி தோழர்களுடனும் உறவைப்பேணியவர்.
பின்னாளில் மலையக மக்கள் முன்னணியின் தலைவராகவும்
அமைச்சராகவும் விளங்கிய சந்திரசேகரனின் பிரத்தியேக பொது சனத் தொடர்பு அதிகாரியாகவும்
இயங்கியவர்.
அத்துடன் எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், மு. நித்தியானந்தன், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், இர. சிவலிங்கம்,
திருச்செந்தூரன், தெளிவத்தை ஜோசப், மலரன்பன்,
கவிஞர்கள் ஈழவாணன், புதுவை இரத்தினதுரை முதலான
ஆளுமைகளுடனும் நட்புறவைப் பேணியவர்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் சந்தித்த
மாத்தளைசெல்வாவிடம் அன்று கண்ட அதே சுறுசுறுப்பை இன்றும் காண்கின்றேன்.
தானும் இயங்கி, மற்றவர்களையும்
இயங்கவைக்கும் ரஸவாத வித்தை அறிந்தவர்.
இடதுசாரி அரசியலில் இவருக்கிருந்த
ஈடுபாட்டினால், அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கும் பலதடவை ஆளானவர்.
சிறைவாசமும் அனுபவித்தவர்.
மற்றவர்களுக்கு உதவும்
மனப்பான்மை இவரது இயல்பு. மாத்தளையில் பாதிக்கப்பட்ட
மக்கள் பக்கம் நின்று அவர்களின் தேவைகளை அரச மட்டத்தில் பேசி கவனித்தவர்.
இவரது தன்னலமற்ற சேவைகளை
மு. நித்தியானந்தன், மாத்தளை வடிவேலன், மலரன்பன் ஆகியோர் எழுத்திலும் பதிவுசெய்துள்ளனர்.
மாத்தளை செல்வாவின் அரசியல்
சார்ந்த நடவடிக்கைகளுக்கு அப்பால், என்னை பெரிதும் கவர்ந்த விடயம், அவர் மற்றவர்களின்
குறிப்பாக மலையக படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டு வருவதில் காண்பிக்கும் ஆர்வமும்
அக்கறையும்தான்.
வீரகேசரி, மற்றும் தமிழ் நாடு தினமணி பத்திரிகைகளின் சிரேஷ்ட ஊடகவியலாளராக விளங்கிய ( அமரர் ) எஸ். எம். கார்மேகம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரித்த தொகுப்பு நூல், மாத்தளை வடிவேலன், மலரன்பன் ஆகியோரின் கதைத் தொகுப்புகள் முதலானவற்றை வெளியிட்டிருக்கும் மாத்தளை செல்வா, மூத்த கவிஞர் நவாலியூர் சொக்கநாதர் இயற்றிய மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சியையும் நூலாக பதிப்பித்தவர்.
திருமுருக கிருபானந்தவாரியார்
அந்த நூலுக்கு அணிந்துரையும் கவிஞர் வி. கந்தனம் மதிப்புரையும் எழுதியிருக்கிறார்கள்.
அத்துடன் நவாலியூர் சொக்கநாதர்,
கந்தவனம், ஈழவாணன் ஆகியோர் இணைந்து எழுதிய
சிட்டுக்குருவி என்ற நூலையும் வெளியிட்டவர்தான் மாத்தளை செல்வா.
கடந்த 03 ஆம் திகதி 75 வயது பூர்த்தி பவளவிழாவையும் எம்மத்தியில் இல்லாமலே
கடந்திருக்கும் கவிஞர் புதுவை இரத்தினதுரையும், மாத்தளை செல்வா பற்றி ஒரு பாடலை பாடியிருக்கிறார்
எனச்சொன்னால் நம்பமாட்டீர்கள்.
“ அக்கிரமங்கள்
எங்கெங்கு பூத்திட்டாலும், அதை அழிக்க ஓடிவரும்
எனதருமை நண்பன் விக்கிரமசிங்காவின் பார்வை பட்டதன் பின்பே கவிஞனானேன். “
இந்த வரிகள் கவிஞரின் மிகைப்படுத்தப்பட்ட
கூற்றோ..? என்னவோ..? நானறியேன்.
எனினும் நான் அறிந்தவரையிலும் அறச்சீற்றத்துடன் வாழ்க்கைப்பயணத்தை
மாத்தளை செல்வா தொடர்ந்தமையால், பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கும் ஆளானவர்தான்.
இவர் அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது,
வீட்டிலிருந்து தனக்கு மாத்திரமின்றி, தன்னோடு இருந்த பிற கைதிகளுக்கும் உணவு வரவழைத்து
பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டிருந்தவர்.
“ செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய
யாவுள காப்பு “ என்பது
குறள்.
நாம் தேடிச்சேமிப்பதற்கு
நட்பைவிட வேறு அரியபொருள் இல்லை. அது இருந்துவிட்டால், எம்மை எத்தகைய இக்கட்டிலும்
அது காப்பாற்றும்.
ஒரு முக்கிய இடதுசாரித்தலைவரைக்கூட
அவர் சந்தித்த அடக்குமுறை இக்கட்டிலிருந்து காப்பாற்றியவர்தான் மாத்தளை செல்வா.
அதனால் நேர்ந்த நெருக்கடிகளையும்
தனக்கேயுரிய சாதுரிய இயல்புகளினால் சமாளித்தவர்.
மாத்தளை செல்வாவின் தொடர்பாடல்
இலங்கை – இந்தியாவுக்கு அப்பால், தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நீடிக்கிறது.
இலங்கை அரசியல் வரலாற்றில்
மாத்தளைக்கு முக்கிய இடமிருப்பதுபோன்று, மலையக இலக்கிய - பதிப்புத்துறை வரலாற்றில் மாத்தளை செல்வாவுக்கும்
முக்கிய இடமிருக்கிறது.
---0---
No comments:
Post a Comment