கடந்த ஓகஸ்ட் மாதம் பாரிஸ் மாநகருக்கு சென்றிருந்தபோது, அங்கே சில கலை, இலக்கியவாதிகளையும் சந்தித்தேன்.
அவர்களில் ஒருவர் செல்வி சந்திரிக்கா அரசரட்ணம்.
இவரது பூர்வீகம் வடபுலத்தில் மானிப்பாய். ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போது தனது தாயை இழந்திருக்கிறார்.
இவர் தனது தாயரை எவ்வாறு பறிகொடுத்தார்..? என்பதை இவரது தாய்மாமனாரான எழுத்தாளர் அருந்ததி ( அருள் இரத்தினம் ) எழுதியிருக்கும் ஆண்பால் உலகம் என்ற நாவலைப் படித்து தெரிந்துகொள்ள முடியும்.
பல உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும் அந்த நாவல் அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்களைச் சொல்கிறது.
இந்த நாவல் தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது.
இரண்டு நூல்களுக்கும் முகப்பு ஓவியம் வரைந்திருப்பவர்தான் செல்வி சந்திரிக்கா.
கடந்த 2010 ஆம் ஆண்டிற்குப்பின்னர் பாரிஸ் மாநகரை புகலிடமாக்கியிருப்பவர். ஓவியம் வரைவதில் ஆற்றல் மிக்க சந்திரிக்காவின் ஓவியக்கண்காட்சிகள் பாரிஸில் நடந்துள்ளன.
இவரது குழந்தைப்பருவத்தில் பெற்றதாய் எரியூட்டிக்கொல்லப்பட்டதையடுத்து, அம்மம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தவர். இவருடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூவர்.
தாயின் அரவணைப்பினை குழந்தைப்பருவத்தில் இழந்திருக்கும் சந்திரிக்காவுக்கு ஆதர்சமாகத் திகழ்ந்திருப்பவர் அம்மம்மா சிவபாக்கியம்.
வடபகுதி போர் மேகங்களினால் சூழப்பட்டிருந்த கால கட்டத்தில்
பிறந்திருக்கும் சந்திரிக்கா, இடப்பெயர்வுகளையும் சந்தித்திருப்பவர்.
யாழ். இந்து மகளிர் கல்லூரியில் படித்தவர். பின்னர் பாரிஸில் வாழ்ந்த தாய் மாமனாரும் எழுத்தாளரும், நாடகம் மற்றும் திரைப்படத்துறை சார்ந்த கலைஞருமான அருந்ததி என்ற புனைபெயரில் எழுதிவருபவருமான அருள் ரத்தினம் அவர்களினால், அழைக்கப்பட்டு, தற்போது பாரிஸில் வாழ்ந்து வரும் சந்திரிக்கா, சட்டத்துறையில் பயின்றவாறு தேர்ந்த வாசகராகவும் ஓவியத்துறையில் ஈடுபாடுகொண்டவராகவும் விளங்குகிறார்.
புகலிட வாழ்வில் பிரெஞ்சு மொழியை கற்றுத்தேர்ந்து, பிரஞ்சு இலக்கியங்களை வாசிப்பதிலும் ஆர்வம் கொண்டிருப்பவர். அத்துடன் தமிழ் இலக்கிய சந்திப்புகளிலும் நூல் வெளியீட்டு அரங்குகளிலும் கலந்துகொண்டு கருத்துரைக்கின்றார்.
தனது பால்ய காலத்திலேயே படங்கள் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்த சந்திரிக்காவிடம், ஓவியம் குறித்த புரிதல் எவ்வாறு தொடங்கியது எனக்கேட்டோம்.
“ எனது சின்ன வயதில் ஏதாவது ஒன்றைப் பார்த்து ரசிக்கும்போதே, அதனை அப்படியே வரைந்து பார்க்கவேண்டும் என்ற ஆசைவரும். இப்படித்தான் ஒருதடவை ஒரு பத்திரிகையில் பழக்கூடை ஒன்றை சுமந்திருக்கும் பெண்ணின் அழகான ஓவியத்தைப் பார்த்தேன். அது என்னை மிகவும் கவர்ந்தது, ஒருநாள் ஒரு வெள்ளைத்தாளில் என்னிடமிருந்த வண்ணக் கலவைகளை பயன்படுத்தி அந்த பழக்கூடை சுமந்த பெண்ணின் ஓவியத்தை வரைந்து பார்த்தேன். என் பார்வைக்கு அச்சு அசலாக நான் பார்த்த அந்த ஓவியம் போலவே அது இருந்தது. எனக்குள்ளே என்னாலும் ஓவியம் வரையமுடியும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
நான் பிரான்ஸ் வரும்போது பென்சில் மூலம் வரைந்த எனது சில
படங்களையும் எடுத்து வந்திருந்தேன், அவற்றைப் பார்த்த எனது மாமா ஓவியக்கலையை நான் முறையாக பயிலவென்று அதற்குரிய இடத்தில் என்னைச் சேர்த்துவிட்டார்.
அது ஒரு அரச நிறுவனம் சார்ந்த ஓவிய - சிற்ப பயிற்சிக்கான கல்விக்கூடம். அங்கு பயிலும் போது நான் வரைந்த அனேக ஓவியங்கள் பல தடவைகள் காட்சிப் படுத்தப்பட்டன. கூடவே அங்கு சிற்பமும் செய்யப் பழகினேன்.
இதுவரை நான் நூறுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து விட்டேன், எனினும் நான் இன்னும் அதில் வளரவேண்டும் மிக பெரிய அளவில் பேசப்படும் ஓவியம் ஒன்றையாவது வரையவேண்டும் என்கின்ற எண்ணம், கனவு, இலட்சியம் எப்போதும் என்னுள்ளே இருக்கின்றது. “
இளம் ஓவியர் சந்திரிக்கா, பாரிஸில் நடந்த இலக்கிய அரங்குகளிலும் தனது ஓவியக்கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார்.
இந்த இளம் ஓவியரை வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment