இந்தியாவை அணுகுதல்

 December 16, 2023


இந்து மாமன்றம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தலையீடு செய்யுமாறும் தமிழ், முஸ்லிம் கட்சிகளை அழைத்து பேசுமாறும் கோரியிருக்கின்றது.
முஸ்லிம் கட்சிகளை எதற்காக அழைக்க வேண்டும் – மேலும் முஸ்லிம் கட்சிகள் இந்தியாவிடம் எப்போதாவது உதவியை கோரியிருக்கின்றனவா? இதற்கான பதிலை இந்து மாமன்றம்தான் வழங்க வேண்டும்.
ஆளுக்கொரு கடிதம் அனுப்பும் முயற்சிகள் பயனற்றவை.
ஏற்கனவே, மக்கள் முறைப்பாட்டுக்கான வடக்கு – கிழக்கு சிவில் சமூகம் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றது.
வடக்கு, கிழக்கின் முன்னணி புத்திஜீவிகள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் எனப் பலரும் – குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
ஏற்கனவே, கட்சிகள் அனுப்பிய கடிதங்கள் மூலம் குழப்பங்கள் ஏற்படலாம் – என்னும் நிலையில்தான் குறித்த சிவில் சமூக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் கட்சிகளை புதுடில்லி அழைக்காமல் இருப்பதற்கு காரணங்கள் உண்டு.
புதுடில்லிக்கு செல்வதற்கு முன்னர் – முதலில், தமிழ் கட்சிகள் தங்களுக்குள் தெளிவான நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.
புதுடில்லியின் எல்லைக் கோட்டை தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களின் கோரிக்கையை வடிவமைக்க வேண்டும்.
இந்திய பிரதமருக்கு தமிழ்த் தேசிய கட்சிகளின் சார்பில் இதுவரையில் மூன்று கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் எந்த அடிப்படையில் புதுடில்லி தமிழ் கட்சிகளை அழைக்க முடியும்? யாரை அழைப்பது? மூன்று கடிதங்கள் அனுப்பிய அனைத்துக்
கட்சிகளையுமா அல்லது முதலில் கடிதத்தில் கையெழுத்திட்ட ஆறு கட்சிகளையா? அனைவரையும் அழைத்து இந்தியா எதனைக் கூறமுடியும்? ஏற்கனவே, புதுடில்லியின் அழைப்பை சம்பந்தன் உதாசீனம் செய்திருக்கின்றார்.
தமிழ் கட்சிகளை அழைத்து பேசுங்கள் என்று கூற முயற்சிப்பவர்கள் இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்தியாவை அணுகுவதற்கு முன்னர் தமிழ் கட்சிகள் தங்களுக்குள் அதிகம் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.
ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில் இந்தியாவுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
ஈழத் தமிழ் மக்கள்மீது இந்தியாவுக்கு கரிசனை உண்டு.
அதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியா வெளிப்படுத்தியிருக்கின்றது.
ஆனால், இந்தியாவுக்கு மட்டுப்பாடுகள் உண்டு. இலங்கை ஓர் உடனடி அயல்நாடு.
ஓர் அயல்நாட்டுக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு சில வரையறைகள் உண்டு.
இதேவேளை, ஈழத் தமிழர்கள் சார்பில் இந்தியாவின் நேரடியான தலையீடானது இந்தியாவுக்கு மோசமான அனுபவங்களை கொடுத்திருந்தது.
இப்போதும் 35 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் இந்தியாவின்மீது ஒருசில அரசியல் குழுக்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றன.
இந்தியாவிடம் உதவிகளை கோரும் போது, இந்த வரலாறையும் நாம் மறந்துவிடக்கூடாது.
அன்று இந்தியா வலிந்து உதவிகளை செய்வதற்குத் தயாராக இருந்தபோது தமிழர் தரப்பு அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இப்போது சுடுகிறது மடியை தாருங்கள் என்றால் – இந்தியா எதுவும் செய்ய முடியாது.
முதலில் இந்தியாவிடம் செல்வதற்கு முன்னர் தமிழ் கட்சிகள் முடிந்தவரையில் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும்.
தங்களின் நிலைப்பாட்டில் குழப்பமற்ற நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.
அண்மையில், இந்தியாவுக்கு சென்றிருந்த குழுவில் சென்றவர்கள் சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பிலும் பேசியிருக்கின்றனர்.
இந்த நிலையில் எந்த அடிப்படையில் பிரதமர் மோடி ஈழத் தமிழர்களை அணுகுவது?   நன்றி ஈழநாடு No comments: