எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரை படித்துவரும் பிரியத்திற்குரிய வாசகர்களுக்கு வணக்கம்.
கடந்த 87 ஆவது அங்கத்தில், பெண்களின் ஆளுமைப்பண்புகள்,
அவர்களின் கணவர்மாரின் ஆளுமைகளினால் மறைக்கப்பட்டுவிடுவதையும் மறக்கப்படுவதையும் தொனிப்பொருளாகக்கொண்டு எழுதியிருந்தேன்.
அவுஸ்திரேலியா உட்பட உலகில்
பல நாடுகளிலிருந்தும் பலர் எனது வாட்ஸ் அப் ஊடாக தொடர்புகொண்டு கருத்துக்களை சொன்னார்கள். சிலர் மின்னஞ்சலில் தமது அனுபவங்களைச் சொன்னார்கள். அவர்களில் பெண்களும் இடம்பெற்றனர்.
எனது அந்தப்பதிவை படித்திருக்கும் பாரிஸில் வதியும் இளம்
ஓவியக்கலைஞரும் மொழிபெயர்ப்பாளரும் தேர்ந்த வாசகியுமான செல்வி சந்திரிக்கா எனக்கு எழுதிய மின்னஞ்சல் மடலை, அவரது அனுமதியுடன் இங்கே பதிவேற்றுகின்றேன்.
அன்புள்ள ஐயா வணக்கம். உங்கள் எழுத்தும்
வாழ்க்கையும் ( இரண்டாம்
பாகம் ) 87 ஆம் அங்கத்தை வாசித்தபோது, நான் சந்தித்த சில விடயங்கள் எனது நினைவில் வந்தன. அதனை உங்களிடம் பகிரலாம் என விரும்புகிறேன்.
நான் வசிக்கும் பாரிஸில் பல்கலைக் கழகத்திற்கு
முதலாம் ஆண்டு சென்றபோது , எனக்கு அருகில்
இருந்த ஒரு பெண் கொஞ்சம் வயது கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.
அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கதைக்க ஆரம்பித்தேன். அவரது சற்று முதிர்ந்த தோற்றம் என்னை சில வினாக்களுக்குள்ளாக்கியது. அவரின் வாழ்க்கை பற்றி வினவினேன்.
அவர் இவ்வாறு கூறினார் : உயர்தர படிப்பு முடிந்த பின்னர் வேலை செய்யவேண்டிய கட்டாயம் இருந்ததாகவும், அத்துடன் திருமணமும் முடித்து விட்டதாலும் என்னால் மேலும் படிப்பை தெடரமுடியாமல் போனது. பின்னர் எனது மகளை வளர்ப்பதில் எனது காலம் சென்றுவிட்டது , இப்போது எனது மளுக்கு 19 வயது . தற்போது அவளும் என்னுடன் சட்டம் பயில வந்துள்ளாள். “
இவ்வாறு சொல்லிவிட்டு, சற்றுத் திரும்பி தனது மகளை எனக்கு காண்பித்தார். அந்தப்பிள்ளையும் என்னைப்பார்த்து புன்னகைத்தது.
எனக்கு இந்தச்சம்பவம் புதிய அனுபவம் ஐயா. எங்கள் தாய்நாடான இலங்கையில் நான் வாழ்ந்த காலத்தில், என்னைச் சூழ்ந்திருந்த எவரும் இவ்வாறு வயதுமூப்பின் பின்னரும், திருமணத்தின் பிறகும் , பிள்ளைகள் பெற்றதையடுத்தும் படிப்பை ஆரம்பித்ததாக நான் கேள்விப் படவில்லை.
ஆனால், நான் புகலிடம் பெற்று வாழும் பாரிஸில் அன்று நான் கண்ட காட்சியும் சந்தித்த அனுபவமும் எனக்கு ஆச்சரியம் தந்தது . அதன் பின்னரே, இங்கே வயது கூடியவர்களும் கல்வியைத் தொடருவதைப் பார்த்தேன்.
இங்கே எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வயதான பிரான்ஸ் தம்பதிகள் 86 - 88 வயதுடையவர்கள் , பொழுது போக்காக ஏதாவது வாசிப்பார்கள். அப்போது, “ இந்த வயதில் படித்து எதனை இவர்கள் சாதிக்கப் போகிறார்கள் “ என்றும் நான் யோசிப்பதுண்டு.
அப்பொழுது எல்லாம் எனக்கு விளங்காத விடயம், நான் அதிகம் வாசிக்கவும், தேடவும் ஆரம்பித்த பிற்பாடே விளங்கியது.
வாசிப்பும் , அறிவும், தேடலும் இல்லாத நிலையில் இருக்கும்
எவராலும் எந்த ஆளுமைகளையும் விளங்கிக்கொள்ள முடியாது. இதுவிடயத்தில் எங்கள் சமூக மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளார்கள். வாசிப்பதற்கு எங்கும் சொல்லி தரப்படுவதாக எனக்குத் தென்படவில்லை. எமது தாயகத்தில் பாடசாலைகளிலும் இந்த வழி நடத்தல் இல்லை.
இளம்தலைமுறை சந்திரிக்கா
பாரிஸில் , பிரெஞ்சு இலக்கியங்களையும் படிக்கிறார். அத்துடன் தமிழ் இலக்கிய சந்திப்புகளிலும்
, தமிழ் நூல் வெளியீட்டு அரங்குகளிலும் உரையாற்றுகிறார்.
இத்தருணத்தில் மேலும் சில செய்திகளை உங்களுக்கு சொல்கின்றேன்.
எங்கள் குடும்பத்தில் எமது
பெத்தாச்சியின் ( அம்மாவின் சின்னம்மா ) பெயர்
காமாட்சியம்மா. அவர் 90 வயது வரையும் வாழ்ந்தவர். பாடசாலைக்கல்வி
இல்லை. அக்காலத்து திண்ணைப் பள்ளிக்கூடம்தான். கையொப்பமும் சரியாக வைக்க மாட்டார்.
கைநாட்டுத்தான்.
ஆனால், அவர் கல்கியின்
பொன்னியின் செல்வன் அனைத்து பாகங்களையும் வாசித்து, எமக்கு கதைகதையாகச் சொல்வார்.
இரவில் குப்பி விளக்கின் வெளிச்சத்தில் அவர் வாசிப்பதை பார்த்திருக்கின்றேன்.
எனது அம்மா, அன்றைய பிரித்தானியர்
ஆட்சிக்காலத்தில் ஒரு பொலிஸ் சார்ஜண்டுக்கு
மகளாக பிறந்தவர். ஆங்கில மூலம் கல்வி கற்றவர்.
அம்மாவும் இறுதிவரையில் புத்தகங்கள் வாசித்தார்.
வாசிப்புக்கு வயது எல்லை
இல்லையல்லவா..?
இந்த வாரம் தமிழ்நாட்டிலிருந்து
வெளியாகும் அம்ருதா இதழை வாசித்தேன்.
அதில் மூத்த பிரபல எழுத்தாளர் எமது அன்பிற்கினிய இந்திரா
பார்த்தசாரதி, யார் எதிரி? யார் சிநேகிதன்? என்ற சிறந்த சிறுகதையை எழுதியிருக்கிறார்.
1930 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அவருக்கு தற்போது 93 வயதும் கடந்துவிட்டது.
தற்போதும் எழுதுகின்றார்.
வாசிக்கின்றார். மின்னஞ்சலில் தொடர்பிலும் இருக்கிறார்.
----- ------ ---- -----
இது இவ்விதமிருக்க, மற்றும் ஒரு சர்ச்சையாக்கப்பட்டிருக்கும் விடயத்திற்கு
வருகின்றேன். சமகாலத்தில் இலக்கிய சர்ச்சைகள்
பெரும்பாலும் முகநூலில்தான் நடப்பதாக அறிகின்றேன். என்னிடம் முகநூல் இல்லை. அதனால் நான் அந்த சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதுமில்லை
!
படைப்பாளிகள் தங்கள், படைப்புகளுக்கு
தலைப்பு சூட்டுவது தொடர்பான சர்சையை கனடாவிலிருந்து
வெளியாகும் அபத்தம் இதழ் எழுப்பியிருந்தது.
விமல் குழந்தைவேலின், வெள்ளாவி நாவலின் தலைப்பினை மற்றும் ஒரு எழுத்தாளர் உருவிக்கொண்டார் எனவும், ஜெயமோகனின் கொற்றவை நாவலின் பெயரை மற்றும் ஒரு எழுத்தாளர் எடுத்துக்கொண்டார் எனவும் சொல்லப்பட்டிருந்தது.
அபத்தம் உரையாடலில், இந்தச்செயல்கள் பாரிய குற்றமாகவும் பேசப்பட்டிருந்தது. உரையாடியவர்கள்: விமல் குழந்தை வேலும் கற்சுறாவும்.
இவர்களில் கற்சுறாவை மாத்திரம்
நான் எனது வாழ்நாளில் இதுவரையில் ஒரே ஒரு தடவைதான் 2007 இறுதியில்
சந்தித்து பேசியிருக்கின்றேன். விமல் குழந்தைவேலை இதுவரையில் சந்திக்க சந்தர்ப்பம்
கிடைக்கவில்லை.
இவர் எமது இலக்கிய சகோதரி
லண்டனில் வதியும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் தம்பி.
விமல் குழந்தைவேலின் எழுத்துக்களை
படித்திருக்கின்றேன்.
இந்தத் தலைப்புப் பெயர் விவகாரம் பற்றியும் எழுத்தாளர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது.
நான் இலக்கியப்பிரவேசம் செய்த 1970 காலப்பகுதியில் எஸ்.
பொன்னுத்துரையின் சடங்கு நாவலைப் படித்தேன். இந்நாவல் சுதந்திரன் வார இதழில் தொடர்கதையாக வெளியாகி, பின்னர் நூலுருவம் பெற்றது. நான் அந்த நாவலை நூலுருவில்தான் படித்தேன். சடங்கு தொடர்கதை 1966 ஆம் ஆண்டளவில் சுதந்திரனில் வெளிவந்தது.
பின்னர் இளம்பிறை ரஃமானின்
அரசு வெளியீடாக நூலுருப்பெற்றது. பின்னாளில் தமிழ்நாடு ராணி முத்து பிரசுரமாகவும் மலிவுப்பதிப்பில்
வெளிவந்தது.
1966 ஆம் ஆண்டளவில் மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் செ.
கணேசலிங்கனின் சடங்கு நாவல் சென்னையில் வெளியானது. இதற்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி
நீண்ட முன்னுரையும் எழுதியிருந்தார்.
இரண்டு நாவல்களும் வடபுலத்தின்
சாதியமைப்பினை உறைபொருளாகவும் மறைபொருளாகவும் பேசியிருந்தது.
எஸ். பொ. வின் எழுத்தில் பாலியல் சார்ந்த விடயங்கள் தூக்கலாகவும், செ. க.வின் எழுத்தில் அன்றைய வடபுலத்தின் சமூக அமைப்பு வெளிப்படையாகவும் இருந்தது.
எஸ். பொ. வடபுலத்தின் சாதிய
கட்டமைப்பினை தனக்கேயுரித்த பாணியில் எள்ளல் செய்திருந்தார்.
செ. க. அதனை வர்க்கப்பார்வையுடன்
சித்திரித்திருந்தார்.
வடபுலத்திற்கு அப்பால்
பிறந்து வளர்ந்திருக்கும் எனக்கு இந்த ஒரே தலைப்பில் வெளிவந்த இரண்டு நாவல்களும் புதிய
வாசிப்பு அனுபவத்தை அந்த இலக்கியப்பிரவேச தொடக்க காலத்தில் தந்திருந்தன.
ஆனால், ஒருவருடைய தலைப்பினை மற்றவர் உருவிக்கொண்டார் முதலான
சர்ச்சைகள் அப்போது நடக்கவில்லை.
எஸ்.பொ.வும், செ. க. வும்
இறுதிவரையில் நண்பர்களாக இருந்ததை அறிவேன்.
கைலாசபதி, சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, டானியல் , என். கே. ரகுநாதன் முதலான முற்போக்கு
எழுத்தாளர்களுடன் கடுமையாக மோதிய எஸ்.பொ, எக்காலத்திலும், இவர்களின் நெருங்கிய நண்பராகவிருந்த
செ. க. வுடன் மோதவில்லை.
அதற்கு வேறும் சில காரணங்கள் இருக்கின்றன. அதனை இங்கு
சொல்லவும் முடியாது. அதற்கான சாட்சிகளும் தற்போது இல்லை. எஸ். பொ. வும் – செ. க. வும் இல்லை.
சரி போகட்டும். செ. கணேசலிங்கன் தரையும் தாரகையும் என்ற
தலைப்பில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இதனை 1972 இற்குப்பின்னரே நான் படித்தேன்.
அக்காலப்பகுதியில் நானும்
இதே தலைப்பில் ஒரு சிறுகதையை இலங்கை கம்யூனிஸ்ட்
கட்சியின் புதுயுகம் வார இதழில் எழுதியிருக்கின்றேன்.
அக்காலப்பகுதியில் எனக்கு
இலக்கிய நண்பராக அறிமுகமான செ. க. இது குறித்து
என் மீது எந்தக்குற்றச்சாட்டும் வைக்கவில்லை. பின்னாளில் எனது சில நூல்களை அவர்தான்
சென்னையில் தமது குமரன் இல்லம் பதிப்பகத்தினால் அச்சிட்டு வெளியிட்டுத்தந்தார்.
தற்போது அவுஸ்திரேலியா
சிட்னியில் வதியும் எழுத்தாளர் சோ. ரஞ்சகுமாரின் கோசலை என்ற சிறுகதை அவரது மேகவாசல்
தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
கோசலை என்ற பெயரில் தமிழ்நாட்டில்,
தமிழ்ப்பிரபா என்ற எழுத்தாளர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.
இலங்கையில் பூரணி என்ற பெயரில் இரண்டு சிற்றிதழ்கள் வெவ்வேறு காலப்பகுதியில் வெளிவந்துள்ளன.
தமிழகத்தின் மூத்த படைப்பாளி
இந்திரா பார்த்தசாரதி, தஞ்சை கீழ்வெண்மணியில் நடந்த கொடுமையை சித்திரிக்கும் குருதிப்புனல்
என்ற நாவலை எழுதியிருக்கிறார். இதற்கு 1977 இல் இந்திய சாகித்திய அகடமி விருதும் கிடைத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இதே தலைப்பில் 1995 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தை வெளியிட்டார்.
அதன் தொடக்கத்தில், எழுத்தோட்டத்தில்
குறிப்பிட்ட பெயரை தனது திரைப்படத்திற்கு எடுத்துக்கொண்டதற்காக
இந்திரா பார்த்தசாரதிக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
எமது எழுத்துலகமும் வாழ்க்கையும்
இப்படித்தான் இருக்கிறது.
சமகாலத்தில் வெளியாகும்
பல தமிழ்த்திரைப்படங்களின் பெயர்களை, நாம்
பல வருடங்களுக்கு முன்பே வெளியான தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துவிட்டோம்.
அதற்கும் நீண்ட பட்டியல்
இருக்கிறது.
ரவிச்சந்திரன் நடித்த நான்
திரைப்படமும் பார்த்தேன். விஜய் அன்டனி நடித்த நான் திரைப்படமும் பார்த்திருக்கின்றேன்.
அண்மையில் ஒரு புதிய தமிழ்த்
திரைப்படம் ஃபைட் கிளப் ( Fight Club ) என்ற பெயரில் வெளிவந்து தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது.
1999 ஆம் ஆண்டில் இதே பெயரில் ( Fight Club ) ஒரு ஆங்கிலத் திரைப்படம் வெளிவந்துள்ளது. தலைப்பின் பெயர்களை உருவினார்கள் என்ற குற்றச்சாட்டு
எழுந்துள்ள வேளையில், நானும் எனக்குத் தெரிந்த
செய்திகளை உருவிச் சொல்கின்றேன்.
( தொடரும்
)
No comments:
Post a Comment