இலங்கைச் செய்திகள்

பூநகரியில் 20,000 ஏக்கரில் புதிய மின் உற்பத்தி திட்டம் 

பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை திறந்து வைத்த கிழக்கு ஆளுநர்

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதி

தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்கும் முயற்சியுடன்  மலையக மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்கு முழு ஆதரவு

இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் புதிய தொழிநுட்ப பல்கலைக்கழகம்

குற்றச்செயல்களை புரிந்த பலர் கொழும்பில் தலைமறைவு கொழும்பில் சகல இன, மத மக்களுக்கும் பொலிஸ் பதிவு

தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம் நேற்று முதல் மக்கள் பானைக்கு


பூநகரியில் 20,000 ஏக்கரில் புதிய மின் உற்பத்தி திட்டம் 

நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

December 13, 2023 9:30 am 

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு நேற்று வருகை தந்து முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் பங்கேற்ற ஜனாதிபதி,அதன் போது ஜே. வி. பி எம்.பி அனுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மின் உற்பத்தி தொடர்பான கொள்கைகளுக்கிணங்க 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் புதிய திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அனுர குமார திசாநாயக்க எம்பி அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

1987 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 120 பில்லியன் ரூபாவை மாத்திரமே நாடு நேரடி முதலீடாக பெற்றுக்கொண்டுள்ளது. எனினும், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் குறுகிய காலப்பகுதியில் இலங்கையை விட அதிகமாக பல பில்லியன் நேரடி முதலீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.

இலங்கையின் பொருளாதார கொள்கைக்கமைய இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் பொருளாதார கொள்கைகளை முன்னெடுக்கவில்லை. எனினும் பூகோள அரசியல் காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்த நாடுகள் இலங்கையில் முதலீடுகளை முன்னெடுத்துள்ளன.

கிளிநொச்சி பூநகரியில் 700 மெகாவோட் மின்னுற்பத்தி திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்துக்கு 50 ரூபா என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மின்னுற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிடுகின்றது. நாட்டு மக்களும் அது தொடர்பில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக அராசாங்கம் செயற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி – பூநகரியில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய மின்திட்டங்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மின்கொள்கைகளுக்கிணங்க தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.புதிய திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துக்களை முன்வைத்த அனுரகுமார திஸாநாயக்க எம் பி நிலக்கரி, எரிபொருள் கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.மோசடி செய்தவர்கள் ஜனாதிபதியின் அமைச்சரவையிலேயே உள்ளார்கள். அத்துடன் பூநகரி மின்னுற்பத்தி திட்டத்தில் 500 மெகாவோட் அலகை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த நாடு என்ன ஆட்சியாளர்களின் சொத்தா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அவருக்கு மீண்டும் பதிலளித்த ஜனாதிபதி,

அமைச்சர்கள் மாத்திரமல்ல ஒருசில அரச அதிகாரிகளும் பணம் சம்பாதிப்பதற்காக முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள் என்றார்.

மீண்டும் கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க எம். பி ஒருசில மோசடியான அதிகாரிகளே மோசடியான அமைச்சர்களுக்கும் தேவைப் படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 





பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை திறந்து வைத்த கிழக்கு ஆளுநர்

December 13, 2023 8:20 am 

வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் செர்ஜி நகரில் இடம்பெற்ற திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் செர்ஜி நகர மேயர் ஜியோன் பவுல் ஜீன்ஸ்டன், இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தின் அமைச்சர் லக்ஷ்மி நாராயணன், பிரான்ஸிற்கான இந்திய தூதுவர் ஜவீட் அஷ்ரப்,தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழக தலைவர் அயலக கல்வி டாக்டர் குறிஞ்சி வேந்தன் , பிரான்ஸ் நாட்டின் அரசியல், கலாச்சார, இலக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த அரசியல், கலாச்சார, இலக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நன்றி தினகரன் 









இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதி

சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவிப்பு

December 13, 2023 7:51 am 

சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் லீ சியென் லொங்க் (Lee Hsien Loong) குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைப் பாராட்டி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே சிங்கப்பூர் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் அனுகூலமான முடிவுகளுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ள பிரதமர் லீ சியென் லொங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை விரைவில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் இலங்கையை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்தும் வேலைத்திட்டத்திற்காகவும் சிங்கப்பூர் பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 





தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்கும் முயற்சியுடன்  மலையக மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்கு முழு ஆதரவு

அமெரிக்க விசேட பிரதிநிதி அமைச்சர் ஜீவனிடம் உறுதி

December 13, 2023 7:10 am 

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இன சமத்துவம், நீதிக்கான விசேட பிரதிநிதி  டிசைரீ கோர்மியர் ஸ்மித் நேற்று  நுவரெலியாவில் தெரிவிப்பு

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கச் செய்யவும் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படுமென்று அமெரிக்க விசேட பிரதிநிதி உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இன சமத்துவம் மற்றும் நீதிக்கான விசேட பிரதிநிதியான டிசைரீ கோர்மியர் ஸ்மித் நேற்று (12 ) நுவரெலியா மாவட்டத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை சந்தித்து அவர் பேச்சு நடத்தினார். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பிரதிநிதியிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் எடுத்துரைத்ததுடன், மலையக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பிவரும் சர்வதேச சமூகத்துக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

அத்துடன், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவும், மலையக மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத் திட்டங்கள் பற்றி அமைச்சரிடம், அமெரிக்க பிரதிநிதி கேட்டறிந்துகொண்டார்.

அமைச்சின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துகளை அவர் அறிந்துகொண்டார்.

அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அமெரிக்க தூதரகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆங்கில மொழி பயிற்சி நடவடிக்கையை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.   நன்றி தினகரன் 





இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் புதிய தொழிநுட்ப பல்கலைக்கழகம்

2035 இல் தொழிநுட்பத்தில் முன்னேற்றமடைந்த நாடாக இலங்​ைக - சபையில் ஜனாதிபதி

December 13, 2023 6:10 am 0 comment

இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் புதிய தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2035க்கு பின்னரான தொழில்நுட்பம் எமது நாட்டை தொழிநுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த நாடாக அறிமுகம் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்றில்லாமல் விஞ்ஞான தொழில்நுட்ப வேலைத்திட்டங்களுக்கு அனைவரும்

பூரண ஒத்துழைப்பைவழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அடித்தளம் இல்லாமல் எம்மால் எதிர்காலம் நோக்கி முன்னேறிச் செல்ல முடியாது. நாட்டை முன்னேற்றவும் முடியாது.

அதேபோன்று விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் குறிப்பிடும் போது, இதன் மூலம் கிடைக்கும் பயன்பாடுகளை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் நாம் நவீன தொழிநுட்ப உபயோகத்துடனேயே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பே காணப்படுகிறது. இந்நிலையில் இதன் மூலம் உச்ச அளவிலான பயன்பாட்டை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதற்கான ஒரே தீர்வு தொழிநுட்பம் மூலமான விவசாயத்திற்கு செல்வதே.

அதனால் நாம் வேளாண்தொழிநுட்ப முறை தொடர்பில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளோம். நாட்டின் விவசாயத் துறையை நவீனமயமாக்க தனியார் துறைக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

அதேபோன்று வலுசக்தி தொடர்பில் குறிப்பிடுவதானால் நாம் பல கிகாவோட்களை காற்றாலை மின்சாரத்தின் மூலம் பெற்றுள்ளோம். அதேபோன்று 200 கிகாவோட்டை சூரிய சக்தி மின்சாரம் மூலம் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

நாம் இந்தியாவிடமிருந்து உதவி பெற்றுக் கொள்ள ஒரு முறைமை காணப்படுகிறது.

அது கிரீன் ஹைடிஜன் மற்றும் அமோனியா முறையாகும். இதில் ஹைடிஜன் முறையை கடல்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றோம்.

ஜேர்மன் மற்றும் பிரான்ஸுடன் நாம் கிரீன் தொழிநுட்பம் தொடர்பி ல் கலந்துரையாடி வருகின்றோம். மேலும் 4, 5 வருடங்கள் செல்லும்போது அது சாத்தியப்படும்.

அந்த வகையில் 2035க்கு பின்னர் வரும் தொழிநுட்பம் எமது நாட்டை தொழிநுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த நாடாக அறிமுகம் செய்யும்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 



குற்றச்செயல்களை புரிந்த பலர் கொழும்பில் தலைமறைவு கொழும்பில் சகல இன, மத மக்களுக்கும் பொலிஸ் பதிவு

தமிழ் மக்களை மட்டும் இலக்கு வைக்கவில்லை

December 12, 2023 6:58 am 0 comment

மனோ கணேசன் MP யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் டிரான் அலஸ் பதில்;

பல தடவைகள் விளக்கிக் கூறியும் அவர் குற்றச்சாட்டை முன்வைப்பது கவலை தருவதாகவும் அமைச்சர் தெரிவிப்பு

தமிழர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு கொழும்பு மாவட்டத்தில் தகவல்கள் திரட்டப்படவில்லை எனத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு சகலரதும் தகவல்களும் திரட்டப்படுவதாகத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் தகவல் சேகரிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தலை கோரினார்.

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களிடமிருந்து தகவல் பெறும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளது. இதில் ஒட்டுமொத்த மக்களது தகவல்களும் உள்ளடங்குகின்றன. தகவல்கள் சேகரிக்கும் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் நிறுத்த முடியாது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தகவல்

தரவு கட்டமைப்பு பேணப்பட வேண்டும். இதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல்கள் திரட்டப்படுவதாக மனோ கணேசன் எம்.பி சபையில் தவறான கூற்றை முன் வைத்துள்ளார்.கடந்த முறையும் அவர் இதே பிரச்சினையை முன்வைத்த போது, தனிப்பட்ட முறையில் அவரைச் சந்தித்து விளக்கியுள்ளேன்.

கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை 90 வீதமளவில் நிறைவு பெற்றுள்ளன. சிங்களம்,தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் என அனைத்து மக்களும் இந்த தகவல் பதிவுக்குள் உள்ளடங்குகின்றார்கள்.

இது புதிதாக ஆரம்பிக்கப்படவில்லை. யுத்த காலத்தில் இருந்தே இவ்வாறு பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்தந்த பகுதி பொலிஸ் நிலையங்கள் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில் தவறொன்றும் கிடையாது.

பெயர் உள்ளிட்ட விபரங்கள் மாத்திரமே கோரப்படுகிறது.நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

(லோரன்ஸ் செல்வநாயகம்) - நன்றி தினகரன் 






தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம் நேற்று முதல் மக்கள் பானைக்கு

December 12, 2023 6:40 am 0 comment

சிட்ரஸ் ஹோட்டல் குழுவுடன் இணைந்து இந்த உணவகம் கடந்த சனிக்கிழமை (09) பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.இந்த சுழல் உணவகம் நேற்று (11) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டது.

இந்த உணவகத்தின் வருவாயில் 80% தாமரை கோபுரத்திற்கும் 20% சிட்ரஸ் ஹோட்டலுக்கும் உரித்தாகுமென தெரியவந்துள்ளது. இதில், ஏழு நாடுகளின் உணவு வகைகள் உள்ளன. மேலும்,

இருநூறு பேர் சாப்பிடும் வகையில் இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையும் மற்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையும் இந்த உணவகம் திறந்திருக்கும். இங்கு உணவருந்த, தொலைபேசி அல்லது ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதலாவது சுழலும் உணவகம் இதுவாகும்.   நன்றி தினகரன் 





No comments: