November 25, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றங்களை கண்டுவருவதான ஒரு தோற்றத்தை சர்வதேச அரங்குகளில் ஏற்படுத்த முயற்சிக்கின்றார்.
மேற்குலக ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கும்போது, நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றமடைந்து வருவதாகவும் தமிழ் கட்சிகளுடனான பேச்சில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் கூறிவருகின்றார்.
தற்போது அவ்வாறானதொரு கருத்தையே இந்திய ஊடகங்கள் மத்தியிலும் முன்வைக்கின்றார்.
இத்தனைக்கும் ஈழத் தமிழர் விவகாரத்தில் என்ன நடைபெறுகின்றது என்பது இந்திய ஊடகங்களுக்கு நன்கு தெரிந்த விடயம்.
அவ்வாறிருந்தபோதும், தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பான இந்தியாவின் கருத்துகளுடன் தான் உடன்படவில்லை என்று கூறியிருக்கின்றார்.
ஈழத் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கான தீர்வாக 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி
வருகின்றது.
ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தப் போவதாகக் கூறியிருந்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுகளிலும் ஈடுபட்டார்.
அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டம் ஏற்கனவே, பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய படைகள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டமையைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட முக்கிய அதிகாரங்கள் சிலவற்றை மீண்டும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுசென்றார்.
இதில் தமிழர் பக்கத்திலும் மோசமான தவறுகள் இழைக்கப்பட்டன என்பதும் உண்மைதான்.
அவற்றை மீளவும் மாகாண சபைகளுக்கு வழங்குவதிலிருந்துதான் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த முடியும்.
இந்த விடயங்கள் தமிழர் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
ஆனால், இந்த விடயத்தில் இதுவரையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவோ அரசியல் தீர்வு விடயத்தில் முன்னோக்கி செல்வதாகக் கூறிவருகின்றார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் இதுவரையில் எந்தவொரு முன்னேற்றகரமான விடயங்களும் இடம்பெறவில்லை.
யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட, இலங்கையின் ஆட்சியாளர்களால் நல்லிணக்க விடயத்தில் முன்னோக்கி பயணிக்க முடியவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இலங்கை மீது வெளிநாடுகளின் அழுத்தங்கள் தொடர்கின்றன.
நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றங்களை காண்பிப்பதுதான் இவ்வாறான அழுத்தங்களுக்கான உண்மையான பதிலாகும்.
ஆனால், விடயங்களில் முன்னேற்றங்களை காண்பிக்காது, பொய்யான அபிப்பிராயங்களை வழங்குவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.
ரணிலும் இதற்கு விதிவிலக்கல்ல.
அவரும் கடந்தகாலத்தில் கூறப்பட்ட பொய்களை பின்தொடர முயற்சிக்கிறார் என்றே தெரிகின்றது. நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment