முதியவர்களின் தமிழ்த் தேசியம்

 November 26, 2023


யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் தொடர்பில் தமிழ்த் தேசியர்கள் மத்தியில் கவலைகள் வெளிப்படுகின்றன.
அத்துடன், இவ்வாறான இசை நிகழ்வுகள் திட்டமிட்டு தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் சிலர் கூற முற்படுவதையும் காண முடிகின்றது.
யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்களாகிவிட்டன.
இந்த பதினான்கு வருடங்களில் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் மக்களுக்கு – குறிப்பாக, இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய அரசியல் அடைவுகள் எதனையும் காண்பிக்கவில்லை.
தொடர்ந்தும் ஒரே மாதிரியான கதைகளையே கூறிவருகின்றனர்.
குறிப்பாக இளைஞர்களை தமிழ்த் தேசிய அரசியலின் பக்கமாக ஈர்ப்பதற்கான எந்தவொரு வேலைத் திட்டமும் தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இல்லை.
இந்த நிலையில் மக்கள் களியாட்டங்களுக்கு பின்னால் செல்கின்றனர் என்று கவலைப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
களியாட்டங்கள் மீதான ஈடுபாடு என்பது மக்களது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகும்.
மக்கள் எப்போதும் பழைய சம்பவங்களில் மூழ்கியருப்பவர்கள் அல்லர்.
ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் சில கட்டுப்பாடுகள் – சில தடைகள் இருந்தன.
அதன் காரணமாக சில விடயங்களை பார்ப்பதற்கும் அதனை அனுபவிப்பதற்கும் மட்டுப்பாடுகள் இருந்தன.
ஆனால், இப்போது அப்படியில்லை.
போருக்கு பின்னரான அரசியல் சூழலை முதலில் தமிழ்த் தேசியர்கள் என்போர் நன்கு வாசிக்க வேண்டும்.
நிலைமைகளிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அவ்வாறில்லாது போனால் இவ்வாறு ஆதங்கப்படுவதிலேயே நேரத்தை விரயம் செய்ய நேரிடும்.
இன்று வடக்கு, கிழக்கில் இடம்பெறும் எதிர்ப்பு அரசியல் போராட்டங்களில் (அந்தப் பெயரில் இடம்பெறுபவை) சொற்ப எண்ணிக்கையானவர்களே பங்குபற்றுகின்றனர்.
ஆனால், களியாட்டங்களில் பல்லாயிரம் அளவில் திரளுகின்றனர்.
இது ஒரு பொதுவான நிலைமை.
இதனை மக்களின் குறைபாடாக நோக்கினால் அது தவறானது.
போருக்கு பின்னர் இடம்பெற்ற சில எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளில் மக்கள் திரண்டனர் – இளைஞர்கள் அணிதிரண்டனர்.
எழுக தமிழ் பேரணியில் மக்கள் ஆயிரக்கணக்கில் பங்குகொண்டனர்.
குறிப்பாக ‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி’ எதிர்ப்பு பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டனர்.
நீண்ட காலத்துக்குப் பின்னர் பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் அணிதிரண்டனர்.
ஆனால், அதனை அரசியல் கட்சிகளின் தலைமைகள் எவ்வாறு கையாண்டன? அரசியல் கட்சிகளின் வாக்கு வேட்டை வெறியாலும் விடயங்களை ஒழுங்கமைப்பவர்கள் மத்தியில் காணப்படும் மோதல்களாலும் மக்கள் விலகிச் சென்றனர்.
தமிழ்த் தேசியர்கள் என்போர் முதலில் ஒரு விடயத்தைத் தெளிவாகக் குறித்துக் கொள்ள வேண்டும்.
அதாவது, யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் ஒரு தனித்தீவில் வாழும் மக்கள் அல்ல.
அவர்கள் சந்தோசத்தை அனுபவிக்கக்கூடாது – அதற்கு பதிலாக, எப்போதும் போரின் வடுக்களையும் அதன் அவலங்களையும் எண்ணி மனம் வெந்துகொண்டிருக்கவேண்டுமென்று எண்ணக்கூடாது.
இதேபோன்று, புலம்பெயர் அமைப்புகளும் தாயகத்தில் இடம்பெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளின் பின்னால் ஏதோ சதியிருப்பது போன்று கதைகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும்.
இன்று புலம்பெயர் சூழலிலுள்ள தமிழர்கள் பலர் தென்னிந்திய திரை நட்சத்திரங்களை அழைத்து நிகழ்வுகளை நடத்துகின்றனர்.
கனடாவில் அவ்வாறான நிகழ்வுகள் வருடத்தில் பல தடவைகள் இடம்பெறுகின்றன.
அவ்வாறான சூழலில் தமிழ்த் தேசியம் நலிவுறுவதாக எவரும் விவாதிப்பதில்லையே – ஏன்? இவ்வாறான நிகழ்வுகளால் ஒருபோதும் தமிழ்த் தேசியம் நலிவுறாது.
மக்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய தலைமைகள் இல்லாத போது மட்டும்தான் தமிழ்த் தேசியத்தின் மீதான நம்பிக்கையிலிருந்து மக்கள் வெளியேறுவர்.
இப்போது, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய தலைமைகள் இல்லைமையே அடிப்படையான பிரச்னையாகும்.
தமிழ்த் தேசிய அரசியலை முதலில் முதியவர்களின் கூடாரத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.
அதிலிருந்துதான் ஒரு புதிய – முற்றிலும் பண்பு மாற்றம் பெற்ற அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முடியும்.   நன்றி ஈழநாடு 



No comments: