November 23, 2023
ரணில் விக்கிரமசிங்க அடுத்த தேர்தல்கள் தொடர்பில் அறிவித்திருக்கின்றார். அடுத்த ஆண்டு இரண்டு தேர்தல்கள். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல். பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து – இனி இது தொடர்பில் விவாதிக்க ஒன்றுமில்லை.
இரண்டு தேர்தல்கள் தொடர்பிலும் தமிழ் தேசிய கட்சிகள் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றுக்கு வரவேண்டும்.
அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் தொடர்பிலும் சிந்திக்கவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வியூகம் அதிகாரத்திற்கு வரும் நபருடன் பேரம்பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும் – அடுத்தது, பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய ஆசனங்களை வெற்றிகொள்வதற்கான உபாயங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
உபாயங்கள் இல்லாது வெறும் கொள்கையை சுலோகமாக காவித் திரிவதில் பயனில்லை.
இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ‘ஈழநாடு’ அறிவுறுத்தியிருக்கின்றது.
ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகள்புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை.
ஒன்றில் இதனை தமிழ் தேசிய கட்சிகள் என்போர் புரிந்துகொள்ள வேண்டும் – அல்லது, தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகள் மற்றும் மதத் தலைவர்கள் என்போர், கட்சிகளுக்கு புரியவைக்க வேண்டும்.
அவ்வாறானதொரு முயற்சியையே அண்மையில் மக்கள் முறைப்பாட்டுக்கான வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் மேற்கொண்டிருந்தது.
இந்த முயற்சியுடன் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அனைத்து சிவில் சமூக தலைவர்களும், மதத்தலைவர்களும் கைகோர்க்க வேண்டும்.
அவர்களுக்கு உண்மையிலேயே மக்களது நலனில் அக்கறையிருந்தால். வெறும் கொள்கை வாதங்களால் பயனில்லை. நாம் சூழ்நிலை கருதி, பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ள முன்வரவேண்டும்.
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளுக்கு ஒரு பிரதான பங்கிருக்கும்.
இதன் காரணமாகத்தான், 2005இல் செய்த தவறை செய்துவிடாதீர்கள் என்று, ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.
ஆனால், அதேவேளை, தமிழ் மக்கள் தனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதுபோல் தெரிகின்றது.
இந்த இடத்தை தமிழ் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்? இதற்கு பதிலாகவே தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் தொடர்பில் சிந்திக்கலாம் என்னும் பரிந்துரையை நாம் முன்வைத்திருந்தோம்.
இந்தப் பரிந்துரையை சாதகமாகப் பரிசீலிப்பதாக குத்துவிளக்கு சின்னத்தின் கீழ், ஒன்றுபட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
எனினும் இதுவரையில் உத்தியோகபூர்வமான முடிவுகள் வெளித்தெரியவில்லை – அதேவேளை இதனை ஒரு மக்கள் கூட்டமென்னும் வகையில் மேற்கொள்ளவேண்டும்.
ஆனால், இதில் கட்சிகள் மத்தியில் அச்சமும் உண்டு.
அவ்வாறானதொரு தீர்மானத்திற்கு பின்னரும் மக்கள் பிரதான வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டால் என்ன செய்வது.
அவ்வாறானதொரு அச்சம் இருக்குமாயின், தமிழ் தேசிய கட்சிகளால் அரசாங்கத்தை எதிர்கொள்ளவே முடியாது.
அரசாங்கம்தான் தமிழ் கட்சிகளை தங்களின் நிகழ்சிநிரல்களுக்கு ஏற்ப கையாளும் – அதேவேளை, அரசியல் தீர்வுக்காக பேரம் பேசக் கூடிய தகுதியையும் தமிழ்
தேசிய கட்சிகள் பெறப்போவதில்லை.
இறுதியில் மீண்டும், விடிய – விடிய இராமாயணம், விடிந்த பின்னர், இராமர் சீதைக்கு என்னவாம் – என்னும் நிலையில்தான், தமிழர் கோரிக்கைகள் வெறும் சுலோகங்
களாகக் காற்றில் கரையும். நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment