இலங்கைச் செய்திகள்

 யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம் விரைவில்

வடக்கு, கிழக்கில் தமிழில் சேவையாற்ற 6,000 பொலிஸாருக்கு தமிழ்மொழி பயிற்சி

விளக்கமறியலில் கைதி மரணம்; இரு பொலிஸாருக்கு இடமாற்றம் வட்டுக்கோட்டையில் சம்பவம்

திருமணமாகாத அழகு ராணியாக காரைதீவு நிவேதிகா தெரிவு

3 மாத காலமாக தோட்ட வைத்தியசாலையில் தங்கியிருக்கும் மக்கள் - வீட்டு உரிமைக்கோரி வீதிக்கு இறங்கி போராட்டம்


யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம் விரைவில்

November 24, 2023 4:48 pm 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ். நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூஜை” நேற்று (23) நடைபெற்றதுடன் இன்று (24) சமய சம்பிரதாயபூர்வமாக கட்டடத்தில் பால் காய்ச்சப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி. சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக பீடாதிபதிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவ பீடத்தின் கல்விப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன்  





வடக்கு, கிழக்கில் தமிழில் சேவையாற்ற 6,000 பொலிஸாருக்கு தமிழ்மொழி பயிற்சி

November 24, 2023 6:11 am 

வடக்கு, கிழக்கில் தமிழ்மொழியில் சேவையாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
தமிழ்மொழியில் சேவையாற்றக்கூடிய வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதற்கான பயிற்சி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், இடையில் பல்வேறு காரணங்களால் அது சற்று மந்த நிலையிலேயே உள்ளது.

எனினும், மீண்டும் அதனை மேம்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் சேவையாற்றக்கூடிய 6,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், , அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழ்மொழியில் சேவையாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய டளஸ் அழகப்பெரும எம்.பி., இது தொடர்பாக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
டளஸ் அழகப்பெரும எம்.பி. தனது கேள்வியின் போது,
“வடக்கு, கிழக்கில் தமிழை தமது தாய் மொழியாகக் கொண்ட மக்கள் பொலிஸ் நிலையங்களில் தமது தாய் மொழியில் முறைப்பாடு முன்வைக்க முடியாமல் பெரும் கஷ்டப்படுகின்றனர். தமது தாய் மொழியில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கும் முடியாத நிலையே அங்கு காணப்படுகின்றது.

இவ்வாறான விடயங்கள் சில வேளைகளில் இனப் பிரச்சினைக்கான காரணமாகவும் அமைந்து விடுகின்றன. இது அநீதியான ஒரு விடயமாகும்.

மக்கள் தமது தாய் மொழியில் முறைப்பாட்டை அல்லது வாக்குமூலத்தை வழங்க முடியாத நிலை மிகவும் துரதிஷ்டமானது.

நாட்டில் 85,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையிலுள்ள நிலையில், அவர்களில் ஒரு சதவீதமாவது இவ்வாறு தமிழ் மொழியில் செயற்படக்கூடிய உத்தியோகத்தர்கள் கிடையாது. அந்த வகையில், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் துறையில் நியமிப்பது தொடர்பான பொறிமுறையொன்றை உருவாக்குவது அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ, தமிழ் மொழியில் சேவையாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 





விளக்கமறியலில் கைதி மரணம்; இரு பொலிஸாருக்கு இடமாற்றம் வட்டுக்கோட்டையில் சம்பவம்

November 21, 2023 6:50 am 

மல்லாகம் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் உயிரிழப்புக்கு,

சிறுநீரகம் பாதிக்கப்பட்டதே காரணமென மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், கடுமையாக துன்புறுத்தப்பட்டதாலே சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் இளைஞனின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து,இவ்விளைஞன்,யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்விளைஞன் உயிரிழந்தார். இதையடுத்து,இவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை உடற்கூற்றுப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பரிசோதனையில்,துன்புறுத்ப்பட்டதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு,பொலிஸாரே உயிரிழப்புக்கு காரணமென தெரியவந்துள்ளது. இதையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 



திருமணமாகாத அழகு ராணியாக காரைதீவு நிவேதிகா தெரிவு

November 21, 2023 5:55 am 

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த செல்வி நிவேதிகா இராசையா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனேடிய அமைப்பொன்று இலங்கையில் முதல் முதலாக இந்த போட்டியை கடந்த மூன்று மாத காலமாக நடத்தியது. கொழும்பில் நடைபெற்ற இந்த தெரிவில் முதல் சுற்றில் 120 பெண்கள் நாடளாவிய ரீதியில் இருந்து கலந்து கொண்டனர். இறுதிச்சுற்றில் 15 பேர் கலந்து கொண்டனர். அதில் முதலாவது இடத்தில் நிவேதிகா இராசையாவும் இரண்டாவது இடத்தில் ஆச்சர்யா யோகராஜனும் மூன்றாவது இடத்தில் சந்திரகுமார் விதுர்ஷாவும் தெரிவு செய்யப்பட்டனர். கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விழாவில் தெரிவான அழகுராணிகள் கிரீடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

காரைதீவைச் சேர்ந்த செல்வி நிவேதிகா இராசையா காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையாவின் புத்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

( காரைதீவு குறூப் நிருபர் ) - நன்றி தினகரன் 




3 மாத காலமாக தோட்ட வைத்தியசாலையில் தங்கியிருக்கும் மக்கள் - வீட்டு உரிமைக்கோரி வீதிக்கு இறங்கி போராட்டம்

November 20, 2023 2:31 pm 

இராகலை மத்திய பிரிவு தோட்ட தொழிலாளர்கள் தமக்கான வீட்டு உரிமையை கேட்டு இன்று (20) காலை இராகலை நகரில் வீதிக்கு இறங்கி அமைதி பேரணியுடன் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இராகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த ஜூலை மாதம் (05) 20 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிறுப்பு திடீர் தீ விபத்துக்கு உள்ளாகி முற்றாக எறிந்து நாசமாகியது.

இந்த தீ விபத்து சம்பவத்தில் 20 வீடுகளில் 18 வீடுகள் முற்றாக எறிந்ததுடன் இதில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் நிர்கதிக்கு ஆளாகி இத்தோட்டத்தில் செயல் இழந்துள்ள தோட்ட வைத்தியசாலை கட்டடத்தில் அடிப்படை வசதி குறைபாடுகளுடன் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இவ்வாறு தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுப்பது தொடர்பில் எத்தகைய முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் தோட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் எடுத்ததாக தெரியவில்லை. இருப்பினும் தீயிக்கு இரையாகி முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ள லயன் குடியிருப்பினை திருத்தி பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ள மக்கள் தங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் தனி வீடுகளை அமைத்து அதில் குடியமர்த்த அரசாங்கம் மற்றும் இன்றைய ஆட்சியில் உள்ள தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர். இதற்கான அழுத்தத்தை கொடுக்கும் வகையில் கடந்த மூன்று மாத காலமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் பதாதைகளை ஏந்தி இராகலை நகரில் அமைதி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ்வாறு அமைதி பேரணியில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட மக்கள் இராகலை நகரில் மத்திய தபால் அலுவலகத்திற்கு முன் பிரதான வீதி ஓரத்தில் ஒன்று கூடி அமைதியாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நியாயமான உரிமையை கேட்டு அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் மத குருக்கள், மக்கள் பிரதநிதிகள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

ஆ.ரமேஸ் - நன்றி தினகரன் 





No comments: