ராஜ ராஜ சோழன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


மா மன்னன் ராஜ ராஜ சோழனின் வரலாற்றை சொல்லும் விதத்தில் அண்மை காலத்தில் பொன்னியின் செல்வன் திரைப் படம் இரு பாகங்களாக வெளியாகி வெற்றி கண்டது. இப் படத்தில் கதை மன்னனின் இளமைக் கால சரித்திரத்தை விளக்கும் முகமாக அமைத்திருந்தது. ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் 1973 இதே ராஜ ராஜ சோழனின் பிற் கால வரலாறு படமாகி திரைக்கு வந்தது. படத்தை தயாரித்தவர் ஆனந்தா மூவீஸ் அதிபர் ஜி . உமாபதி.


மா பொ சிவஞானம் தலைமையிலான தமிழரசு கழகத்தின் தீவிர

தொண்டரான உமாபதி , கழகத்தின் போராட்டங்களில் பங்கு பற்றி சிறை சென்றவராவார். தமிழக, ஆந்திர பிரிவினையின் போது திருத்தணி ஆந்திராவுடன் சேரக் கூடாது, அது தமிழகத்துக்கே சொந்தம் என்று கோரி கழகம் நடத்திய போராட்டத்தில் கலந்து சிறை சென்ற உமாபதி பிற் காலத்தில் திரையுலக பிரமுகரான உருவானார். கடைநிலை ஊழியராக வாழ்வை தொடங்கிய இவர் சென்னையில் தமிழ் படங்கள் திரையிடுவதற்கான முதலாவது குளிர்சாதன திரையரங்கான சாந்தி தியேட்டரை சிவாஜியுடன் சேர்ந்து உருவாக்கினார். பின்னர் தன்னுடைய பங்குகளை சிவாஜிக்கே விற்று விட்டு புதிதாக ஆனந்த் தியேட்டரை உருவாக்கினார். சென்னையிலே முதலாவது 70mm தியேட்டராகவும், சினிமாஸ்கோப் திரையரங்காகவும் இது உருவானது. எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனக்கு முன் வரிசையில் ஆசனம் ஒதுக்கா விட்டால் திரும்பி சென்று விடும் மனப்பான்மை கொண்ட இவர் தமிழர்களின் சரித்திர நாயகனான ராஜ ராஜ சோழன் படத்தை முதல் தடவையாக அகண்ட திரையில் , சினிமாஸ்க்கோப்பில் , கலர் படமாக தயாரிக்க முன் வந்தார்.


அவ்வை டி கே சண்முகம் சகோதரர்களால் 1955ம் ஆண்டு முதல் மேடை நாடகமாக நடத்தப்பட்டு வந்த ராஜராஜ சோழன் நாடகத்தை எழுதியவர் பத்திரிகை ஆசிரியரும், எழுத்தாளருமான அரு ராமநாதன் ஆவார். இவர் எழுதிய நாடகத்தை இயக்கும் பொறுப்பு ஏ பி நகராஜனிடம் ஒப்படைக்கப் பட்டது. தான் இயக்கும் புராண படங்களில் பக்கம் பக்கமாக வசனங்களை எழுதி படமாக்கும் ஏ பி என் அதே நாடகப் பாணியை பின் பற்றி படத்தை எடுத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும் .

தமிழ் மன்னர்களில் ஆட்சியில் ராஜராஜ சோழனின் ஆட்சியே தமிழர்களின் பொற்காலம் என்பது வரலாற்று சான்று. அவன் ஆட்சியில் தமிழர் கலை, கலாசாரம் , சைவ சமய பக்தி என்பன மேன்மை உற்றிருந்தன. பல நாடுகள் மீது அவன் படையெடுத்து வெற்றி கொண்ட போதும் அவற்றை அவன் ஆக்கிரமிக்கவில்லை. அப்பேற்பட்ட சக்ரவர்த்தியின் கதையே திரைப்படமானது.


படத்தில் ராஜா ராஜா சோழனாக நடிப்பவர் சிவாஜி. வயதான சோழனின் கம்பீரம், மிடுக்கு, அதிகாரம் என்று ஒன்றிலும் குறை வைக்காமல் தன் நடிப்பினை வாரி வழங்கியிருந்தார் சிவாஜி. ஆனால் படத்தின் பெரும் பகுதி சோழனின் குடும்பப் பிரச்சனையை சொல்லுவதாகவே அமைந்து விட்டது. இதனால் சில இடங்களில் காட்சிகள் கேலிக் கூத்தாக அமைந்து விட்டன. படத்தில்

எல்லாருடனும் , குடும்பத்தினருடனும் கராறாகவே பேசுகிறார் சிவாஜி. எந்த இடத்திலும் மென்மையைக் காணோம்! இவருடன் டி ஆர் மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன் , லஷ்மி,முத்துராமன்,சிவகுமார், எஸ் வரலஷ்மி, விஜயகுமாரி, எம் என் நம்பியார், மனோரமா,சுருளிராஜன் , குமாரி பத்மினி, கே டி சந்தானம், ஆர் எஸ் மனோகர், எஸ் வி சகஸ்ரநாமம், காந்திமதி, சிவதாணு, சி ஐ டி சகுந்தலா, குமாரி பத்மினி, என்று ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தார்கள். இவர்களுடன் இலங்கை நடிகரான ஸ்ரீ சங்கர் ஈழத்து புலவராக நடித்திருந்தார்.



இத்தனை பேர் நடித்து இருந்தும் படத்தை தூக்கி நிறுத்த முடியவில்லை. பெரும்பாலான காட்சிகள் மேடை நாடகம் பார்ப்பது போன்ற எண்ணத்தையே ஏற்றப்படுத்தியது. ராஜராஜ சோழன் என்றவுடன் யுத்த காட்சிகள், ஏராளமான குதிரையோட்டங்கள் , வீர, தீர செயல்கள் என்பவற்றை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சிவாஜியும், லஷ்மியும், முத்துராமனும் போடும் வாய்ச் சண்டைதான் மிஞ்சியது! ஆனாலும் சோழனின் எதிரியின் ராஜகுருவான பாலதேவரை சோழன் தன்னுடன் வைத்திருந்து ராஜதந்திரமாக அவரின் சதித் திட்டங்களை முறியடிப்பது சுவாரஸ்யம் . பாலதேவராக வரும் நம்பியார் நடிப்பும், சோழனின் மகள் குந்தவையாக வரும் லஷ்மியின் நடிப்பும் பாராட்டும் படி இருந்தது.



சோழனின் பெருமையை சொல்லும் வகையில் தஞ்சை

பெரியகோயில் உருவாவதும் , அதன் கும்பாபிஷேகமும் , நம்பியாண்டார் நம்பி உதவியுடன் தேவாரங்கள் மீட்கப்படுவதும் சிறப்பாக படமாக்கப்பட்டன . வாசு ஸ்டுடியோவில் உருவான பெரிய கோயில் அரங்கு பிரமிக்க வைத்தது. அரங்க நிர்மாணத்தை கங்கா அருமையாக அமைத்திருந்தார். புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான டபிள்யூ ஆர் சுப்பராவ் படத்தை ஒளிப்பதிவு செய்திருந்தார். இருவருக்கும் சபாஷ்!


படத்தில் எட்டு பாடல்கள், கண்ணதாசன், கே டி சந்தனம், உளுந்தூர்பேட்டை சண்முகம், பூவை செங்குட்டுவன் ஆகியோரின் பாடல்களுக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். தமிழ் மாதங்கள் பன்னிரண்டையும் இணைத்து கண்ணதாசன் எழுதிய மாதென்னை படைத்தான் உனக்காக பாடல் சிறப்பாக அமைந்தது. அரு ராமநாதனின் வசனங்கள் சில இடங்களில் பிரகாசமாக அமைந்தது. ஜி உமாபதி பணத்தை தாராளமாக செலவு செய்து ராஜராஜ சோழனை தயாரித்திருந்தார் . என்றாலும் ஏ பி நாகராஜன் திரைக்கதை இயக்கத்தில் வெளிவந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறியது. அது மட்டுமன்றி சிவாஜியின் பல படங்களை டைரக்ட் செய்த ஏ பி நாகராஜன் இறுதியாக டைரக்ட் செய்த சிவாஜி படமாகவும் இது அமைந்தது!

No comments: