படித்தோம் சொல்கிறோம்: திரௌபதையின் மரணவாக்குமூலம் கதையாகும் விந்தை ! ( அமரர் ) சை. பீர் முகம்மதுவின் பயஸ்கோப்காரனும் வான்கோழிகளும் !! முருகபூபதி


இளம்பராயத்தில் தாடிக்காரர்களைத்தேடிய ஒருவர், வாசிப்புப்பழக்கம் ஏற்பட்டதும் தாடிக்காரர்களின் நூல்களை நூலகத்தில் தேடித்தேடி படித்தவர்,  காலப்போக்கில் ஒரு எழுத்தாளனாகவே தன்னை நிலைப்படுத்திக்கொண்டவர்.

 அவர் இலங்கையரோ தமிழகத்தவரோ அல்ல. அவர்தான் மலேசிய தமிழ் இலக்கியத்தை உலகப்பார்வைக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்ற நோக்கோடு அயராமல் இயங்கிய  சை.பீர்முகம்மது.

கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்துவிட்டார்.

 அவரை பல வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் நடந்த ஒரு


பட்டிமன்றத்தில் சந்தித்தேன். அந்த பட்டிமன்றத்தில் ஒரு மலேசிய பேச்சாளர், அவரது பெயரில் பீரும் இருக்கிறது மதுவும் இருக்கிறது என்று வேடிக்கையாகச்சொல்லி சபையை கலகலப்பாக்கினார்.

 எனது வீட்டுக்கு அழைத்து விருந்துகொடுத்தேன். அவர் இலக்கியவிருந்து படைத்து விடைபெற்றார். அன்று முதல் எனது இலக்கிய நண்பர்கள் பட்டியலில் இணைந்தார். மலேசியாவுக்கு நான் அவரது விருந்தினராகச்சென்றபோது நீண்டபொழுதுகள் அவருடன் இலக்கியம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், என விரிவான உரையாடலுக்கு உகந்த படைப்பாளி. வெறும் படைப்பாளியாக மாத்திரம் திகழாமல் இலக்கிய யாத்ரீகனாகவும் அலைந்தவர். 1942 இல் கோலாலம்பூரில் பிறந்த பீர்முகம்மது, 1959 முதல் எழுதினார்.  இவரது நூலுருப்பெற்ற படைப்புகள்:

வெண்மணல்(சிறுகதை) பெண்குதிரை (நாவல்) கைதிகள் கண்ட கண்டம், மண்ணும் மனிதர்களும், திசைகள் நோக்கிய பயணம், மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் (கட்டுரை தொகுப்புகள்) அக்கினி வளையங்கள்’ (நாவல்)

பீர்முகம்மதுவின் இலக்கியப்பணிகளில் விதந்துபேசப்படவேண்டியது அவரால் மூன்று தொகுதிகளாக தொகுக்கப்பட்ட மலேசியத்தமிழ் எழுத்தாளர்களின் ஐம்பது ஆண்டு காலச்சிறுகதைகள். அதற்காக தமிழ் இலக்கிய உலகம், குறிப்பாக மலேசிய தமிழ் மக்கள் அவருக்கு நன்றி கூறக்கடமைப்பட்டவர்கள்.

 பயஸ்கோப்காரனும் வான்கோழிகளும்  அவரது மற்றும் ஒரு  சிறுகதைத்தொகுப்பு. இத்தொகுப்பில் 20 ஆவது கடைசிக்கதையாக, இந்தத்தலைப்பிட்ட கதைதான் இடம்பெற்றுள்ளது.

 தமது பதின்மவயதில் ஈ.வே.ரா.பெரியாரின் பேச்சைக்கேட்பதற்காக தமது பெரியப்பாவின் சைக்கிள் பின்புறக்கெரியரில் தொற்றிக்கொண்டு சென்றவர் பீர்முகம்மது.

 இளம்பராயத்திலேயே பெரியாரின் கருத்துக்களால் கவரப்பெற்று தீவிர வாசகனாகி எழுத்தாளனாக முதிர்ந்தவரின் சர்வதேசியப்பார்வையை இந்தத்தொகுப்பில் படித்துணர முடிகிறது.

  “இந்தக் கதைத்தொகுப்பின் தரம்பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் எனது சிறுகதைப்பாதையை இத்தொகுப்பு மாற்றியமைக்கும். “- எனச்சொல்கிறார் பீர்முகம்மது.

 தான் மேலும் செம்மைப்படுவேன் என்ற தன்னடக்கக் குரலாக இந்த வார்த்தை அவரிடமிருந்து வெளிப்படுகிறது.

  சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூலுக்கு


பதிப்புரை எழுதியிருக்கும் பாலு மணிமாறன்,                   “ கதைகளையும் தனி வாழ்வையும் மிக நெருக்கத்தில் வைத்துக்கொள்ளும் அதிர்ஷ்டம் பலருக்கும் வாய்ப்பதில்லை. அதற்கான தைரியமும் இருப்பதில்லை. நெஞ்சிலே தெளிவுண்டாயின், வாக்கிலே ஒளியுண்டாகுமன்றோ? வேவ்வேறு திசைகளில் வெளிச்சம் வீசும் கதைகள் திரு.சை.பீர்முகம்மதிடமிருந்து பிறந்திருக்கின்றன. வாசித்துப்போகும் வழிநெடுக அவை வெளிச்சம் வீசுகின்றன.” எனச்சொல்கிறார்.

 வாழ்வின் தரிசனங்கள்தான் படைப்பிலக்கியம் என்ற பொதுவான கருத்தோட்டத்திலிருந்து பீர்முகம்மதுவின் சில சிறுகதைகள் வேறுபடுகின்றன.

 அவருக்கு அறிமுகமில்லாத காவேரி நதிக்கரை, பாரசீகம் (இன்றைய ஈரான்) மனிதர்கள் மீண்டுவரமுடியாத சயாம் காடு, ஜப்பானிய படை, மகாபாரதம்….இப்படியாக ஒன்றிலிருந்து ஒன்று முற்றாக வேறுபடும் கதைகள்தான் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

 கதை வாசிப்பது மட்டுமல்ல எழுதுவதும் சிறந்த அனுபவம்தான்.


பீர்முகம்மது தானும் அனுபவித்து வாசகர்களையும் அனுபவிக்கச் செய்கின்றார்.

 துப்பாக்கிகளுக்கு முன் மனிதத்தை வைக்கும் பீர்முகம்மதுவின் கதைகள்- என்ற தலைப்பில் தமிழக எழுத்தாளர் ( அமரர் )  பிரபஞ்சன், இந்நூலில் பதிவுசெய்துள்ள இக்குறிப்பு சிறுகதை எழுத்தாளர்களுக்கு ஒரு பாடக்குறிப்புபோலுள்ளது. பிரபஞ்சன் இப்படிச்சொல்கிறார்:-

 “ எழுதுபவர்கள்,  தீர்மானித்த முன்முடிவுக்கே பெரும்பாலும் தம் கதையை நகர்த்துவார்கள். சிறுபான்மைக்கதை அதன் முடிவை அதுவே தேடிக்கொள்ளும். எழுத்தின் உள்-அக விசித்திரம் இது. பலசமயங்களில் எழுதுபவர் கதையை எழுதுவது இல்லை. கதையே தன்னை எழுதிக்கொள்கிறது. அது அற்புத தருணம். எப்போதுஅது வாய்க்கிறதோ, அப்போது எழுதுபவர், ஊசி வழி நூலாகத் தம்மை நெகிழ விட்டுவிடவேண்டும். அப்போது உருவாகும் கதை அருமையாக அமையும்.”

  தொழிலாளி, கலைஞன், கவிஞன், உடற்குறைபாடுள்ள ஆண்-பெண், விளிம்புநிலை ஏழைப் பிச்சைக்காரர்….இப்படியாக பீர்முகம்மதுவின் கதா பாத்திரங்களின் வார்ப்பு அற்புதமாக முழுமைபெறுகின்றன.

 இத்தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு சிறுகதைகளைப்பற்றியும் தனித்தனி கட்டுரைகளே எழுதலாம்.

 அந்தமரங்களும் பூப்பதுண்டு கதையில் வரும் வயித்துமுட்டி


இராமசாமியும் உரியகாலத்தில் பருவமெய்தாத பாக்கியமும் எம்மை நெகிழவைக்கின்றார்கள். அந்த வயித்துமுட்டி இறந்தபோது, பாக்கியம் கதறுகிறாள். அதில் அவளது காதலும் வெளிப்படுகிறது. வாழ்வின் விளிம்பிலிருந்த  இரண்டு ஆத்மாக்களின் பரஸ்பர காதலை வாசகருக்குச்சொல்லாமல் உணரவைக்கின்றார் பீர்முகம்மது. மலேசியாவில் ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி கலியன், அடியாட்களினால் வெட்டிக்கொலைசெய்யப்படுகிறான். இந்தக்கலியன் தாழ்ந்த சாதியைச்சேர்ந்தவன் என்பதனால் அவனை அடக்கம் செய்த புதைகுழி அடிக்கடி இடம்மாறுகிறது. இறுதியில் எலும்புக்கூடாக நூதன சாலை கண்ணாடிப்பெட்டிக்குள் அடைபடுகிறான் கலியன் என்ற கலியமூர்த்தி. அவனது ஆவி அவனது கதையை சொல்கிறது.

 பொற்காசுகள் என்ற கதை பாரசீகத்தின் கவிஞர் பிர்தௌஸின் வீரியம்மிக்க சிந்தனைகளை பேசுகிறது. வீரர்களுக்கு உற்சாகமூட்டி வெற்றிவாகை சூடச்செய்த அக்கவிஞனுக்கு அரண்மனை அரசவை புலவரால் அவமானம் நேர்ந்துவிடுகிறது. அதற்கு உடந்தையாகிப்போன குற்ற உணர்வுடன் அக்கவியைத்தேடி மன்னன் அமீர் வருகிறான். கவியின் ஊர் ஆளரவமற்று வெறிச்சோடிப்போயிருக்கிறது. மன்னன் வரும்போது அந்த ஊரின் மற்றுமொரு வாயிலின் ஊடாக கவி பிர்தௌஸின் பூதவுடலை மக்கள் கல்லறைக்கு எடுத்துச்சென்றுவிட்டார்கள்.

 பீர்முகம்மது இப்படியாக சர்வதேசப்பார்வையுடன் மாத்திரம்


கதைகளை எழுதவில்லை. மகாபாரதத்தில் துவாரகையில் பாண்டவர்களின் அந்திம காலத்தையும் சித்திரிக்கின்ற கதையொன்றையும் இத்தொகுப்பில் எழுதியிருக்கிறார்..

 தேவலோகத்துக்கு செல்லும் கடைசித்தருணத்தில் தருமரும் அவரது வளர்ப்பு நாயையும் தவிர அனைவருமே பாதிவழியில் மாண்டுபோகிறார்கள்.

 தேவத்தேர் என்ற இச்சிறுகதையில் ஐந்துபேருக்கு மனைவியாக வாழ்ந்த திரௌபதையின் மனச்சங்கடம் வெளிப்படுகிறது. அவளால் யாரையும் முழுமையாக காதலிக்கமுடியாமல்போன சோகம் அம்பலமாகிறது.

 சஞ்சலமே சத்துரு என்ற கீதோபதேசத்தை உணர்த்தும் கதை.

    அருச்சுனனுக்கு மகாபாரத்தில் இத்தனை பெயர்களா?

 செல்வத்தையெல்லாம் வெல்பவன் என்பதால் தனஞ்செயன், இந்திரனின் மகன் என்பதால் ஐந்திர், எப்பொழுதும் வெற்றியையே சந்திக்கும் வாய்ப்புப்பெற்றவன் என்பதால் ஜிஷ்ணு, குந்தியின் மகன் என்பதால் கௌந்தேயன், பல்குணன், இரு கைகளாலும் போரிடும் ஆற்றலுள்ளவன் என்பதால் சவ்யாசி, வானரத்தை கொடியாக கொண்டவன் என்பதால் கபித்வஜன், வானரத்வஜன், வெற்றியின் சின்னத்திற்கு எடுத்துக்காட்டாக விஜயன், காண்டீபம் என்ற வில்லைக்கொண்டதால் காண்டீபன்.

 இத்தனை பெயர்களையும் கொண்டு விளங்கிய அருச்சுணன்,


இறுதிப்பயணத்தில் யாவும் இழந்து வெறும் நர நாராயணன் என்ற புதிய பெயருடன் புறப்படுகிறான். ஆசா-பாசம் அனைத்தையும் துறந்துசென்றால்தான் தேவலோகத்தை அடையமுடியும். ஆனால் அவனாலும் முடியவில்லை.

 காதலின் சஞ்சலத்தால் வாடும் திரௌபதையாலும் முடியவில்லை. அருச்சுணன் மீதான தனது காதலை வெளிப்படுத்த முடியாமலேயே போய்விட்டது என வருந்துகிறாள். வனவாசத்தின்போது பீமனுக்கு அவள் மீதிருந்த காதலைப்புரிந்தும் அவளால் எதுவுமே அவனுக்காக செய்யமுடியவில்லையே என்ற ஏக்கத்தை பீமனிடமே அந்த இறுதிப்பயணத்தில் வெளிப்படுத்தி சஞ்சலத்துடன் புலம்பி அவனருகிலேயே மடிந்துவிடுகிறாள்.

 இச்சந்தர்ப்பத்தில் தொ.மு.சிதம்பர ரகுநாதன் எழுதிய வென்றிலன் என்றபோதும் என்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது. அவர் அக்கதையில் திரௌபதைக்கு கர்ணன் மீதுதான் காதல் இருந்ததாக சொல்லப்பட்டிருக்கும். சுயம்வரத்தில் கர்ணன் வில்லை எடுக்கும்போதே அவன் மீது அவளுக்கு காதல் வந்துவிடுகிறது.

 அந்தக்கதையில், பஞ்சபாண்டவர் பற்றிய அவளது பார்வை இப்படி இருக்கும்:

   தருமபுத்திரன் ஒரு ரிஷிப்பிறவி. அவருக்கு மனைவி என்றால் சதி என்ற தெய்வீகப்பொருள். அவர் பள்ளியறையில் வைத்துக்கொண்டுகூட, திடீரென்று நீதி சாஸ்திரம் போதிக்க ஆரம்பித்துவிடுவார். பீமரோ காதலுக்கோ சல்லாபத்துக்கோ ஏற்றவரில்லை. இடும்பைதான் அவருக்கு சரியான மனைவி. வில்லை முறித்து என்னை மணந்த அர்ஜூனனுக்கு நான் பலரில் ஒருத்தி. அவருக்கு சமயத்தில் ஒருத்தி வேண்டும். அது திரொபதியானாலும் சுபத்திரையானாலும் ஒன்றுதான். நகுல சகாதேவர்கள் என் கண்ணுக்கு கணவர்களாகவே தோன்றவில்லை. மதினியின் அன்பு அரவணைப்பில் ஒதுங்க எண்ணும் மைத்துனக்குஞ்சுகளாகத்தான் தோன்றினர். எனினும் எனக்கு கர்ணன் மேல்தான் நேர்மையான அன்பு படர்ந்திருந்தது. கர்ணன் நினைவுகள்தான் என் இளமையைக்கூடக் கட்டுக்குலையாமல் காத்து வந்தது.     

   ஒரு மகாபாரத பெண்பாத்திரம் இரண்டு படைப்பாளிகளின் பார்வையில் எப்படி வேறுபடுகிறது என்பதை குறிப்பிடுவதற்காகவே இங்கு இந்தத்தகவலை பதிவுசெய்கின்றேன்.

 பீர்முகம்மது, இக்கதைத்தொகுப்பில் இடம்பெறும் கதைகள் பிரசுரமான இதழ்களை நூலின் தொடக்கத்தில் பட்டியலிட்டிருக்கிறார். ஆனால் ஆண்டுகளை குறிப்பிடவில்லை.

எந்த ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்டிருந்தாலும் எக்காலத்திலும் படிக்கத்தக்க கதைகளாக அவை அமைந்திருப்பதும் தனிச்சிறப்புத்தான்.

 சில வார்த்தைகளுக்கு அவர் அடிக்குறிப்பிட்டிருக்கலாம். உதாரணமாக:- மீ (இது ஒரு உணவுவகை என்பது புரிகிறது. ஆனால் என்னவென்று தெரியவில்லை.) நாசிகண்டா , நாசிலிம்மா, இப்படி சில சொற்கள்.

 பீர்முகம்மதுவின் ஐம்பது ஆண்டுகால இலக்கிய எழுத்தூழியத்தை இனம்காண்பிக்கும் பதச்சோறாக இக்கதைகள் அமைந்துள்ளன.

சிறந்த படைப்பாளி சை. பீர்முகம்மது தற்போது எம்மத்தியில் இல்லை. எனினும்,  அவரது கதைகள், இலக்கிய உலகில்  தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கும் நம்பிக்கையைத் தருகிறது.

--0—

letchumananm@gmail.com

No comments: