பலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காண சவூதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள்

 November 21, 2023 11:28 am 

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதே பலஸ்தீனப் பிரச்சினையில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடாகும். சவூதி அரேபிய இராச்சியத்தின் நிறுவனர் மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துர்ரஹ்மான் ஆல் ஸஊத் காலத்திலிருந்து இன்றுவரை அந்நிலைப்பாடு மாறாது நிலையாக இருந்து வருகிறது.

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் முதல் நாடாக சவூதி அரேபியா வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளதோடு, இந்தப் பிரச்சினையானது அரேபியர்களின் முதன்மையான பிரச்சினை என்றும் பலஸ்தீனியர்கள் தாம் விரும்புவது போல் கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட அவர்களின் சுதந்திர நாட்டை மீளப் பெறுதல் என்ற இலக்கை அடைந்து கொள்ளும் வரை அனைத்து அரேபியர்களும் மற்றும் முஸ்லிம்களும் அதை ஆதரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது.

1982 ஆம் ஆண்டு மொராக்கோவில் பெஸ் நகரில் நடைபெற்ற அரபு உச்சி மாநாட்டில் மன்னர் பஹ்த் பின் அப்துல் அஸீஸின் சமாதானத் திட்டம் உட்பட, பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான பல மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் சவூதி அரேபியா அங்கம் வகித்துள்ளது. மன்னர் அப்துல் அஸீஸ் சமாதான திட்டமானது அரபு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டதோடு அரபு அமைதி திட்டத்திற்கும் பின்னர் 1991 இல் மெட்ரிட் நகரில் நடைபெற்ற அமைதி மாநாட்டிற்கும் அடிப்படையாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது பலஸ்தீனத்தின் காஸாவில், இஸ்ரேலியப் படைகளின் அத்துமீறல்களால் கடுமையான பிரச்சினைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளதோடு தங்கள் சொந்த இடங்களிள் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பலஸ்தீன பிரச்சினையை நியாயமான முறையில் தீர்ப்பதையே அரபு தலைவர்கள் விரும்புகிறார்கள். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய இரு பிரதேசங்களை கொண்ட இரண்டு தனிநாடுகளைக் கொண்டிருப்பதன் மூலம் அமைதியை உருவாக்க முடியும் என்பதை அவர்கள் எதிர்பாரப்பதோடு, கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராக கொண்டும் குறிப்பாக 1967 முதல் பலஸ்தீனுக்கு சொத்தமாக இருந்த பகுதிகளிலும் பலஸ்தீனீன் பூரண கட்டுப்பாடு நிலவ வேண்டும் என்பதையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். பாலஸ்தீன நிலத்தின் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வரவும், தீர்வு காண்பதை கடினமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவும் உலக நாடுகளை ஜித்தா பிரகடனமானது வேண்டி நிற்கிறது என சவூதி அரேபியாவில் நடைபெற்ற வளைகுடா நாடுகள் மற்றும் ஆசியான் உச்சி மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட தனது உரையில் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்திருந்தார்.

சவூதி அரேபியா காஸா பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகாய மற்றும் கடல் மார்க்கமாக தொடர்ந்தும் நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறது. இது பாலஸ்தீனிய மக்களுடன் அவர்கள் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் இன்னல்களில்களின் போது அவர்களுடன் நிற்பதாக வாக்களிக்கப்பட்ட சவூதி அரேபியாவின் வரலாற்றுப் பங்களிப்பின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 


No comments: