கங்கா கௌரி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 .

மிகுந்த பொருட்செலவில் வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை தயாரித்து புகழ் பெற்ற பி ஆர் பந்துலு , ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் , 1973ல் தயாரித்து , இயக்கி வெளியிட்ட படம் கங்கா கௌரி. கன்னடத்தில் ராஜ்குமார், பாரதி நடிப்பில் கருப்பு வெள்ளை படமாக தயாரித்த படத்தை அதே பேரில் தமிழில் வண்ணப் படமாக உருவாக்கி இருந்தார் அவர். தமிழ் ரசிகர்கள் மீது அவர் வைத்திருந்த அதீத நம்பிக்கையே இதற்கு காரணம் எனலாம்!

படத்தைப் பொறுத்த வரை முதலில் கவர்வது அதன் பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளும், தந்திர காட்சிகளும்தான். அரங்க அமைப்புக்கு பிரபலமான , ஆனால் தமிழில் சில படங்களில் மட்டும் பணியாற்றிய வாலி இந்த படத்தில் அரங்க நிர்மாணத்தை அருமையாக அமைத்திருந்தார். அவரை பாராட்டியே ஆக வேண்டும். அடுத்து தந்திர காட்சிகளை அமைத்த வி ஜி நாயர் ஒளித் திறன் மெச்சத்த தக்கது. இவர்கள் இருவரும் படத்தின் தரத்தை உயர்த்தியிருந்தார்கள்.

புராணக் கதைகளில் இருந்து சில கதைகளை தேர்வு செய்து படமாக்கினார் பந்துலு. கைலாயத்தில் சக்திக்கும், கங்கைக்கும் இடையே யார் சிவனுக்கு மிக வேண்டியவள் என்ற தர்க்கம் ஏற்பட்டு அது விபரீதம் ஆக அவர்கள் இருவரும் பூவுலகில் சென்று பிறந்து , காலம் கனியும் போது மீண்டும் சிவனை அடையும் படி சிவனால் உத்தரவிடப்படுகிறார்கள். அதற்கு அமைய பூலோகத்தில் புரோகிதர் குடும்பத்தில் கௌரியும், மீனவ குடும்பத்தில் கங்கையும் பிறந்து வளர்கிறார்கள். திருமண காலம் நெருங்கும் போது ஈசன் மானிட உருவில் தோன்றி அவர்கள் இருவரையும் காதலித்து , கரம் பற்றி ஆட் கொள்கிறார்.



இந்த கதைக்கு மத்தியில் சிவனுக்கு ஏற்படும் சில இன்னல்களும் இணைக்கப்பட்டுள்ளன. நாரதரின் போதனையால் சனிபகவான் ஈஸ்வரனை போன்று தானும் ஈஸ்வர பட்டம் பெற துடிக்கிறார். ஆனால் அது நிறைவேறாது போகவே சிவன், பார்வதி கல்யாணத்தில் கலகம் விளைவிக்கிறார். அதன் விளைவாக திருமணத்தில் புரோகிதராக செயற்பட்ட பிரம்மாவுக்கும் , சிவனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சபித்துக் கொள்கிறார்கள். அதன் காரணமாக ஐந்து முகங்களைக் கொண்ட பிரம்மா ஒரு முகத்தை இழந்து நான்முகன் ஆகிறார். சிவனோ பிச்சைப் பாத்திரம் ஏந்தி பிச்சண்டி ஆகிறார். சிவனின் இந்த லீலைகளே படமாகும்.



சிவபெருமானின் லீலைகளை ஜனரஞ்சகமாக படமாக்கியிருந்தார் பந்துலு. படத்தில் சிவனாக வரும் ஜெமினி கணேசன் ஒவ்வொரு சூழலுக்கும் பொருந்தும் படி நடித்திருந்தார். கங்கா கௌரி இருவரிடையே மாட்டிக் கொண்டு முழிப்பது, பிட்சை எடுத்து மாய்வது , கிருஷ்ண பகவானிடம் உதவி கேட்பது, சனிதேவனுக்கு உயிர் பிட்சை அளிப்பது, பூவுலகில் கங்கா கௌரியுடன் டூயட் பாடுவது, என்று அமர்க்கள படுத்தியிருந்தார் ஜெமினி. கண்ணனாக வரும் சிவகுமார் கவனத்தை கவருகிறார்.



கங்காவாக வரும் ஜெயலலிதா துறு துறுப்பாக நடித்திருந்தார். மீனவ குப்பத்தில் வாழும் போது மீனவப் பெண்ணாகவே பேசி காட்சியளிக்கிறார். போதாக்குறைக்கு அசோகனோடு சிலம்பு சண்டையும் செய்கிறார். கௌரியாக வரும் ஜெயந்தி உருகி உருகி நடிக்கிறார். சித்தியாக வரும் சி கே சரஸ்வதி வரும் காட்சி எல்லாம் ரகளைத்தான். தந்தையாக வரும் பூர்ணம் விசுவநாதன் அமைதியாக நடிக்கிறார். தேங்காய் சீனிவாசன் , மனோரமா காமெடிக்கு இன்ச்சார்ஜ்! இவர்களுடன் எம் கே முஸ்தபா, எஸ் எ அசோகன், குமாரி பத்மினி, கீதாஞ்சலி ஆகியோரும் நடித்திருந்தனர்.

பொதுவாக தமிழ் பக்திப் படங்களில் சனிபகவானின் பாத்திரம் காண்பிக்கப்படுவத்தில்லை. அந்த குறை இந்தப் படத்தில் தீர்ந்தது. சனிதேவனாக வரும் ஓ ஏ கே தேவர் பாத்திரம் அறிந்து நடித்திருந்தார். நாரதராக வருபவர் சோ. அவர் பேசும் வசனங்களில் எல்லாம் அரசியல் நெடி கலந்திருந்தது. ஒன்பது கிரகங்களையும் போற்றி அவர் பாடும் ஆதி பகவன் திருவடி வாழ்க பாடல் கவனத்தை எனோ பெறத் தவறிய நல்ல பாடல்.

பி பி ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி குரலில் ஒலித்த அந்தரங்கம் நான் அறிவேன் கொஞ்சும் இளம் புன்னகையில் பாடல் ஹிட்டடித்தது. இது தவிர என்னம்மா அன்னம்மா, ஆதி நாதன் கேட்கின்றேன் , பிச்சாண்டி தன்னை கண்டு பிச்சையிடுங்கள் ஆகிய பாடல்கள் கண்ணதாசன் புலமையில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ரசிக்கும் படி அமைந்தன.



படத்தின் ஒளிப்பதிவை நீண்ட காலம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி எல் நாகப்பா கையாண்டார். வி பி கிருஷ்ணன் படத்தொகுப்பு. படத்தின் கதை வசனத்தை எழுதியவர் ஏ எஸ் நாகராஜன். ஏ பி நாகராஜன் அல்ல! இந்த ஏ எஸ் நாகராஜன் பழம் பெரும் இயக்குனரும் கூட . சிங்களத்தில் தயாரான மாத்தலங் , புருஷ ரட்நய , படங்களை இயக்கியவர். தமிழில் வெளிவந்த பாசவலை இவரின் டையரக்ஷனில் உருவான படமாகும்.
கர்ணன் படத்துக்கும் கதை வசனம் எழுதிய இவரின் எழுத்தாற்றல் இந்தப் படத்திலும் வெளிப்பட்டது.

எல்லாவித படங்களையும் ரசிக்கும் படி இயக்கம் ஆற்றல் பெற்ற பி ஆர் பந்துலு இப் படத்தையும் ரசிக்கும் படி இயக்கியிருந்தார்.

No comments: