நிலவின் மணல்பரப்பின் வெப்பநிலை என்ன?- சந்திரயான்-3 பகிர்ந்த முதல் ஆய்வுக் குறிப்பு

 .

நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலை என்னவென்பது குறித்து முதல் பரிசோதனை குறிப்பை அனுப்பியுள்ளது சந்திரயான்-3 விண்கலனின் விக்ரம் லேண்டர்.

இது தொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "விக்ரம் லேண்டரில் உள்ள சேஸ்ட் ChaSTE (Chandra's Surface Thermophysical Experiment) பேலோடின் முதல் ஆய்வுக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. நிலவின் மேல் பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் பணியை சேஸ்ட் செய்கிறது. இது நிலவின் மணல்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட அளவு துளையிட்டு வெப்பத்தை அறிந்துள்ளது.

அதாவது நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலில் இருந்து 10 செ.மீ ஆழத்துக்கு துளையிட்டு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சென்டிமீட்டரில் வெப்ப நிலையை அறியும் வகையில் அதில் 10 வெப்பநிலை உணரிகள் பொருத்தப்பட்டிருந்தன. நிலவின் தென் துருவத்தில் இதுபோன்று மணல்பரப்பின் மீது வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்யப்படுவது இதுவே முதன்முறை. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பகுதிக்கு ‘சிவசக்தி’ என்று பெயரிடப்பட்டது. இந்தப் பகுதியில் ரோவர் வலம் வரும் படங்களின் தொகுப்பை இஸ்ரோ நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டது. அதில் 26 கிலோ எடை கொண்ட ரோவர், தனது 6 சக்கரங்களால் தென்துருவப் பகுதியில் ரிமோட் கார் போன்று முன்னும், பின்னும் ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை செய்வதை தெளிவாக காணமுடிந்தது. இந்நிலையில் இன்று நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலை பற்றிய பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

Nantri : https://www.hindutamil.in/news/india/

No comments: