இலக்குமித்தேவி சிரித்திடுவாள் இல்லமனைத்தும் மங்கலமே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 .

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்     மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



வாழ்வினில் விரதம் வரமாகும்
மனமது ஒடுங்குதல் நலமாகும்
தேவைகள் மனதில் எழும்போது
தேவியை நினைப்பார் நிலமீது 

தேவியை நினைப்பார் பலவாறு
தினமுமே துதிப்பார் பலபேரும்
சிறப்புடன் எடுப்பார் சிலநாளை
அதனை அகத்தினில் அமர்த்திடுவார்

அப்படி அமைவது இவ்விரதம்
அதுவே அலைமகள் தினமாகும்
மங்களம் கிடைக்க யாவருமே
அலைமகள் விரதம் அனுட்டிப்பார்

மங்கள நாயகி வரலக்சுமி 
வளமினை கொடுப்பாள் வரலக்சுமி
எங்களின் வாழ்வு விடிவுறவே
என்றுமே அவளே துணையாவாள்

தளர்வினைத் தகர்க்கும் தாயாவாள்
உளமதை உறுதி ஆக்கிடுவாள்
நிலமதில் நிம்மதி தந்திடுவாள் 
அளவிலாச் சக்தியும் அவளாவாள்

செல்வம் என்பது சிறப்பாகும்
தெய்வம் தந்தால் அருளாகும்
தெய்வமாம் லக்சுமி பூஜையினை
சிரத்தையாய் செய்குவார் இந்நாளில்

அலைமகள் கலைமகள் மலைமகளாய்
அமைந்தவள் ஆதிசக்தி யாவாள் 
அலைமகள் அருளும் அமைந்திட்டால்
அனைத்துமே வசமாய் ஆகிடுமே

வீட்டினில் பெண்கள் விளக்கேற்றி
மெய்யன்புடனே துதி பாடி
இலக்குமித் தாயை மனமிருத்தி
ஏற்றிடு வார்கள் விரதமதை 

காப்புக் கட்டி நின்றிடுவார்
கையால் குங்கும் தொட்டிடுவார்
மஞ்சள் வைத்து பூஜிப்பார்
மங்கலம் என்றே மகிழ்ந்திடுவார் 

பெண்களே சிறப்பாய் பிடித்திடுவார்
பீடுகள் பெருக வேண்டிடுவார் 
கொண்டவர் நலத்தை மனமிருத்தி
பெண்களே விரதம் நோற்றிடுவார் 

மாங்கல்யம் நிலைக்க வேண்டிடுவார்
மனமது சிறக்க வேண்டிடுவார்
வாழ்வெலாம் ஒளிர வேண்டிடுவார்
வரலக்சுமி பாதம் பணிந்திடுவார் 

அம்மன் ஆலயம் அனைத்திலுமே
அபிசேகம் ஓமம் இடம்பெறுமே
அனைத்துப் பெண்களும் ஆலயத்தில்
அம்மனைத் துதிப்பார் காதலுடன்

பூஜை நிறைவில் பெண்களெலாம்
புனித நூலைக் காப்பாக
கைகளில் கட்டி காத்திடுவார்
கணவர் குடும்பம் நலன்காக்க 

வீடுகள் விளக்கால் ஒளியாகும்
வெற்றிகள் வரவு விரைவாகும் 
இலக்குமித் தேவி சிரித்திடுவாள்
இல்லம் அனைத்தும் மங்கலமே 

No comments: