பயணியின் பார்வையில் – 01 - கௌதம புத்தர் எங்கும் இருப்பார் - முருகபூபதி

 .


பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பாதுகாப்பு முதலான திரைப்படங்களை இயக்கிய பிரபல இந்திய நெறியாளர் ஏ. பிம்சிங் அவர்கட்கு புத்தர் மீது பேரபிமானம். அதனால், தனது திரைப்படங்களில் புத்தர் சிலையை அடிக்கடி காண்பிப்பார்.

எம்.ஜி. ஆர் . இரட்டை வேடத்தில் நடித்த குடியிருந்தகோயில்                ( 1968 ) இலங்கையில் வெளியானது. இத்திரைப்படத்திலும்  புத்தர் சிலை வருகிறது.  ஒரு எம்.ஜி.ஆர். படுகாயங்களுடன் ஒரு வீட்டினுள்ளே நுழைந்து பெருங்குரல் எடுத்து ஒரு ஷோகேஸில் ஓங்கித் தட்டுவார். அப்போது அதிலிருந்த சிறிய புத்தர் சிலை ஆட்டம் காணும்.

அக்காலப்பகுதியில் அந்தக்காட்சியை நீக்கவேண்டும் என்று இலங்கை திரைப்பட தணிக்கை அதிகாரிகள் சொன்னதாக ஒரு தகவலும் இருக்கிறது.

சமகாலத்தில் புத்தர் இலங்கையில் பேசுபொருளாகிவிட்டார்.  13 ஆவது திருத்தச்சட்டம் பற்றியோ, மகாணங்களுக்கான அதிகாரங்கள் தொடர்பாக தமிழர் தரப்பு பேசத்தொடங்கிவிட்டால்,  அதற்கு எதிரானவர்கள் -  சிங்கள பேரினவாத சக்திகள் வெகுண்டு எழுந்துவிடும்.


1957 ஆம் ஆண்டு பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவுக்கும்  தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்குமிடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட வேளையிலும் சிங்கள கடும்போக்காளர்கள் அதனை எதிர்த்து கோஷம்போட்டனர்.

தங்களது கண்டன ஊர்வலங்களில்,   பண்டாரநாயகம் – செல்வநாயகம் – ஐயா… தோசே மசால வடே    என்று சிங்களத்தில் கோஷம் எழுப்பினர்.

யூ. என்.பி. தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தனா,  கண்டி தலதா மாளிகை நோக்கி களனி ரஜமகாவிகாரையிலிருந்து அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரையை தொடக்கினார்.

பெளத்த பிக்குகள் மற்றும் சிங்கள கடும்போக்காளர்களின் எதிர்ப்பினையடுத்து பண்டாரநாயக்கா, தனது கொழும்பு ரோஸ்மீட் பிளேஸ் வாசஸ்தலத்திற்கு முன்பாக அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார்.

அதன்பின்னர் ஒரு சில பௌத்த பிக்குகளின் சதியினால், அவர் 1959 ஆம் ஆண்டு ஒரு பௌத்த பிக்குவினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த வரலாறுகள் மீண்டும் புதிய பாணியில் எழுதப்பட்டுவிடுமோ என்று அஞ்சத் தக்கவகையில் சமகாலத்தில் செய்திகள் வெளியாகின்றன.


1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம்  , 13 ஆவது திருத்தச்சட்டம்,  மாகாண சபைகளுக்கான அதிகாரம் பற்றிய பேச்சுக்கள் எழுந்துவிட்டால், கடும்போக்காளர்கள் மத்தியிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்துவிடும்.

இந்த விவகாரங்களுக்குள் கௌதம புத்தரும் சிக்கிக்கொள்வார்.  அண்மைக்காலத்தில் மேர்வின் சில்வாவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும்  தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு எதிர்வினையாக தமிழ்த்தேசிய உணர்வாளர்களும்  கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

ஒரு காலத்தில்  கே. எம். பி. ராஜரட்ணா என்ற ஒரு அரசியல்வாதியிருந்தார்.  அவர் அன்று    தமிழர்களின் தோலில் செருப்புத் தைத்து அணிவேன்  “ என்றார்.

தற்போது அவரது வழியில் வந்திருக்கும் மேர்வின் சில்வாவும்              “ தமிழர்களின் தலைகளை கொய்து வருவேன்  “ என்கிறார். இதில் கவனிக்கவேண்டியது:  இவர் களனி தொகுதியிலிருந்து அரசியலுக்கு வந்தவர். ஜே. ஆர். ஜெயவர்தனாவும் அதே களினியிலிருந்துதான் கண்டிக்கு பாதயாத்திரையை ஆரம்பித்தவர். இதே களனி தொகுதியில் அமைந்த ரஜமகாவிகாரையின் பிரதம மதகுரு மாப்பிட்டிய கம புத்தரகித்த தேரோதான் பண்டாரநாயக்கா படுகொலைச்சதிவழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்தவர்.


இதே தொகுதியிலிருந்துதான்  மற்றும் ஒரு கடும்போக்காளர் சிறில் மத்தியூவும் அரசியலுக்கு வந்தவர். யாழ். பொது நூலக எரிப்பு பற்றி பேசப்படும்போது, இவரது பெயரைத் தவிர்க்கமாட்டார்கள்.

இவ்வளவு செய்திகளின் பின்னணியில் விளங்கும் களனி பற்றி எனது நடந்தாய் வாழி களனி கங்கை நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன். இந்த களனி கங்கை தீரத்தில்தான் மகாத்மா காந்தியின் அஸ்தியும் கரைக்கப்பட்டது.

கௌதம புத்தரும் இங்கே வந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இதுஇவ்விதமிருக்க,  அண்மையில் நான் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே பஸ்வண்டியில் எனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்றபோது பாரிஸின் புறநகரத்தில் ஒரு காட்சியைக் கண்டேன்.

வீதியோரத்தில் நான் கண்ட காட்சியினால்,  சற்று திகைத்துவிட்டேன். அங்கே Budhaa Bar என்ற உணவு விடுதியிருந்தது.  

இலங்கையில் புத்தர் சிலையை வைப்பதற்கு ஆர்வம் காண்பித்துக்கொண்டு, அதனை ஒரு அரசியல் இயக்கமாகவே மேற்கொண்டவாறு, அந்த நாட்டில் தொடர்ந்தும் இனவாத விஷத்தை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதே கௌதம புத்தரின் பெயரில் பிரான்ஸ் நாட்டில் யாரோ ஒரு வர்த்தகர், தனது வருமானத்திற்காகவும் சிலருடைய உழைப்பிற்காகவும் Budhaa Bar என்ற உணவு விடுதியை நடத்தி வருகிறார். அதனுள்ளே என்ன என்ன இருக்கிறது ? என்பதை பார்ப்பதற்கு எனக்கு நேர அவகாசம் கிடைக்கவில்லை. எனது கைத்தொலைபேசியில் அதன் முகப்பை  பதிவுசெய்து கொண்டேன்.

பின்னர் எனக்கு நன்கு தெரிந்த தமிழ் குடும்ப நண்பரின் இல்லம் சென்றேன். அவர்கள் யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்தவர்கள்.  அவர்கள் வீட்டில் இராப்போசன விருந்தை முடித்துக்கொண்டு புறப்படும்போது எனது கண்களை மற்றும் ஒரு காட்சி கவர்ந்தது.

அந்த இல்லத்தின் முன்புற அறையில் ஒரு சிறிய மேசையில் புத்தரின் சிறிய சிலையும் அதன் முன்பாக ஒரு தீபமும் சுடர்விட்டுக்கொண்டிருந்தது.

இலங்கையில்  சிங்கள பௌத்த பேரினவாதத்தை விதைக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக உழைத்துவரும் கடும்போக்காளர்களுக்கு  நான் வெளிநாட்டில் கண்ட காட்சிகளை இந்த பதிவின் ஊடாக தெரிவிக்கின்றேன்.

புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்தவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தியது இலங்கை என்ற செய்திகளை முன்னர் படித்திருப்பீர்கள்.

பிரான்ஸ் நாட்டில் புத்தர்,  பாரிலும்  ( Bar ) இருக்கிறார். ஈழத்தமிழர்  வீடுகளிலும் இருக்கிறார்.

தமிழ்த்திரைப்படங்களிலும் வந்திருக்கிறார். அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

ஏனென்றால், அவர் ஒரு மன்னராக இருந்தும், அரசியலை, பதவிகளை, அதிகாரங்களை, ஆசா, பாசங்களை துறந்தவர். அன்பு மார்க்கத்தை மாத்திரமே போதித்தவர்.


No comments: