கட்டுரை இப்படியும் நடக்கிறது August 17, 2023

 ஒரு சோதிடர் ஊர் ஊராக சென்று சோதிடம் பார்த்து கையில்
கிடைக்கின்ற பணத்தைப் பெற்றுவந்தார்.

இவ்வாறு ஒவ்வொரு வீடுகளாக ஏறி இறங்கி வந்துகொண்டிருந்தவர் ஒரு வீட்டுக்கு சென்றதும் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண்ணைப் பார்த்ததும், அவர் கர்ப்பமாக
இருப்பதைப் புரிந்துகொண்டார்.
அவருக்கு எந்த நேரத்திலும் குழந்தை கிடைக்கலாம் என்ற நிலை.
அவரைப் பார்த்ததும் தெரிந்தது.
அந்தப் பெண்ணுக்கு கைரேகையைப் பார்த்து சோதிடம் சொல்லத் தொடங்கினார்.
இது உங்களுடைய முதல் பிரசவமா என்று கேட்டார்.
அந்தப் பெண்ணும் அதற்கு ‘ஆம்’ என்று பதில் சொல்ல, ‘உங்கள் கைரேகைப்படி உங்களுக்கு ஆண் பிள்ளைதான் பிறக்கும், தப்பினால் பெண்பிள்ளை’ என்றாராம்.
இந்தக் கதைதான் அந்தச் செய்தியை பார்த்தபோது ஞாபகத்திற்கு வந்தது.
‘சமஷ்டி கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம்.
இந்த நிலைப்பாட்டில் சமரசம் அல்லது விட்டுக்கொடுப்பு செய்துகொள்ளாமல் -அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் விரைவாக நடைமுறைப்படுத்தவும் – நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்தவும்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் அனுப்பி வைத்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
13ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலைப்பாட்டை தமக்கு தெரிவிக்குமாறு ஜனாதிபதி அண்மையில் கோரியிருந்தார்.
இதற்கான காலக்கெடு செவ்வாயன்று முடிவடையவிருந்தது.
இந்த நிலையிலேயே சம்பந்தன் தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஐந்து பக்கங்கள் கொண்ட கடிதத்தை வழங்கி வைத்தார்.
அந்தக் கடிதத்தில் வழக்கம்போல சுதந்திரத்திற்கு பிற்பட்டகால வரலாறுகளை விளக்கியுள்ள அவர், தமிழ் மக்களின் அபிலாசை சமஷ்டிதான் என்றும் அதேவேளை
அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் கேட்டிருக்கிறார்.
பதின்மூன்றை அமுல்படுத்துவது குறித்து பாராளுமன்றில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறே ஜனாதிபதி கோரியிருந்தார்.
அதாவது அதனை எப்படி அமுல்படுத்த வேண்டும், என்னென்ன திருத்தங்கள் செய்யவேண்டும் என்பது குறித்தே அவர் கருத்துக்கேட்டிருந்தார்.
அவர் எந்த சந்தர்ப்பத்திலும் இனப்பிரச்னைக்கு தீர்வு பற்றி பேசவில்லை.
ஆனால் சம்பந்தன் கடந்த கால வரலாற்றை அவருக்கு ஞாபகப்படுத்தியிருக்கிறார்.
பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்றால், எப்படி? அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்றால், தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்பு – அதாவது, ஜே. ஆர். கொண்டுவந்த அசல் அரசியலமைப்பா? அதனை இப்போது முழுமையாக அமுல்படுத்த முடியுமா? இதுவரை கடைசியாக செய்யப்பட்ட இருபத்தியொராவது திருத்தத்தில் உள்ளதும் சேர்ந்ததுதானே இப்போதைய அரசியலமைப்பு.
அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துங்கள் என்றால் ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பாக இருக்காதுதானே? அதுபோலத்தான், பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்துவது என்றால், அது இன்றிருக்கும் நிலையிலேயே அமுல்படுத்தச் சொல்கிறாரா? அதாவது பதின்மூன்றிலிருந்து பின்னர் பிடுங்கி எடுக்கப்பட்ட விடயங்களை மீண்டும் திருத்தமாக கொண்டுவந்தால்தான் அதனை முழுமையாக அமுல்படுத்த முடியும்.
அவ்வாறெனில் அது எவையெவை, என்ன திருத்தங்கள் மூலம் பதின்மூன்றிலிருந்து சில அதிகாரங்கள் எடுக்கப்பட்டனவோ அவற்றை எல்லாம் பட்டியலிட்டு,
அவற்றையெல்லாம் மீண்டும் மாகாணங்களுக்கு மாற்றவேண்டும் என்ற விபரங்களுடன் அல்லவா கேட்கவேண்டும்.
அதைவிடுத்து மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் வழங்கவேண்டும் என்று கேட்பது ஒரு பழமைவாய்ந்த கட்சிக்கு சரியானதுதானா
என்று யோசிக்கவேண்டும்.
சில கிராமங்களில் ஒரு பேச்சுவழக்கு உண்டு.
வீட்டுக்கு வந்தவர்களை சாப்பிட்டுவிட்டு போங்கள் என்று கேட்கின்றபோது, முழங்கையைப் பிடிப்பது என்று.
அதாவது கையை மடித்து வைத்துக்கொண்டு முழங்கையை பிடித்தால் கை வழுக்கிக்கொண்டு போய்விடும்.
சாப்பிடக் கேட்டதாகவும் போகும்.
அவர் கையை விடுவித்துக்கொண்டு போயும் விடுவார்.
அதுபோலத்தான் சம்பந்தன் ஐயாவும் ரணிலின் முழங்கையைப் பிடிக்கிறார் போலும்.   நன்றி ஈழநாடு 

No comments: