.
சாணமிட்ட வாசலிலே சங்கமிக்கும் கோலம்
சத்தமின்றி பூக்கவிடும் சங்ககாலப் பெண்ணின்
நாணமதைப் போர்த்திவரும் நாலுகுண மௌனம்
நாணேற்றக் காத்திருக்கும் நாயகனின் சொந்தம்
பாணமிட விழியோடு பதுக்கிவைத்து எய்யும்
பாவையரில் தேங்கியுளப் பழங்கால மௌனம்
தூணதுவாய் நின்றென்றும் துணைசெய்யும் போது
தூரநிலா வந்தருகே தொடர்வாழ்த்துப் பாடுமே
*
தானமென இதயத்தை தாரைவார்க்கு முன்னே
தாயுனக்குத் தந்துவைத்த தற்காப்புக் கலையாய்
ஊனத்தைக் கண்டறிந்து உருப்படியாய் உன்னை
ஒருவனுக்கு ஒப்படைக்க உதவுவதே மௌனம்
ஏனத்தைக் கைவைத்து ஏதுமற்று வாடும்
எளியவர்கள் பாத்திரத்தில் இடும்மௌனம் தானம்
மீனழுத நிலையொத்த மிடியுடையர் வாழ
மீதமுள்ள மௌனத்தை மெருகேற்று வாயே!
*
ஈனத்தை விளைவிக்க ஏற்புடைய மௌனம்
எதிராளி எய்கின்ற ஈட்டியெனக் கொள்ளு
மானத்தை விலைபேசி மறைவாக விற்க
மான்விழியில் தேன்பாய்ச்சும் மௌனமொரு முள்ளு
வானத்தை அழகாக்கி வைக்கின்ற மௌனம்
வாழ்த்துவதாய் காட்டுகின்ற வசீகரத்தை அள்ளு
தேனள்ளித் தெளிப்பதுவாய் தேவையொடு நீயும்
தெரிந்தெடுத்த மௌனத்தால் தீர்ப்பெழுதித் தள்ளு !
Nantri https://eluthu.com/
No comments:
Post a Comment