கட்டுரை இப்படியும் நடக்கிறது August 13, 2023

 அந்தக் காலத்தில் தமிழக சஞ்சிகைகள் எல்லாமே யாழ்ப்பாணத்தில்


கிடைக்கும்.

யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகக் கடையில் ஓடர் கொடுத்து விகடனையும் குமுதத்தையும் வாங்குபவர்கள் உள்ளூர் மல்லிகை சஞ்சிகையை கண்டு கொள்வ
தில்லை.
வாங்குகின்ற தமிழ் சஞ்சிகைகளில் வருகின்ற நல்ல விடயங்களை படிக்கிறார்களோ இல்லையோ அவற்றில் வரும் நகைச்சுவை துணுக்குகளை படிப்பதை
யாரும் தவறவிடுவதில்லை.
அதிகம் ஏன் அந்த துணுக்குகளை படிப்பதற்காகவே அவற்றை வாங்குபவர்களும் உண்டு.
அப்படி வாங்கி படித்த சஞ்சிகை ஒன்றில் வெளிவந்த துணுக்கு ஒன்று இன்று ஞாபகத்திற்கு வருகின்றது.
ஒரு கூட்டுறவு கடையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் கடையில் நின்றவரைக் கேட்பார், ‘என்னப்பா இது… அநியாயமா இருக்கு… பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?’ அதற்கு ரேஷன் கடைக்காரர் சொல்வார்: ‘பின்னே… அவரோட குடும்ப கார்டுலமொத்தம் 234 பேர் இருக்காங்களே…?’ என்று.
யாழ்ப்பாணம் என்பது கூட்டுறவின் தலைநகரமாக இருந்தது ஒரு காலம்.
அமரர் வீரசிங்கம் கூட்டுறவின் தந்தை என்று வர்ணிக்கப்பட்டவர்.
ஒரு காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நாட்டின் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கே முன்மாதிரியாகச் செயல்பட்டன.
ஆனால், அதுவே பின்னர் அப்படியே மறுபக்கம் புரட்டிப்போட்டது.
ஊழலின் மொத்த அடையாளம் என்பது கூட்டுறவுச் சங்கங்களாக மாறின.
அதற்காக எல்லா சங்கங்களையும் சொல்கிறோம் என்பதல்ல.
இன்றும் மிக முன்மாதிரியான சங்கங்கள் நம்மத்தியில் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன.
கிளிநொச்சி கரைச்சி பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் பணிகள், முன்மாதிரிகள் பற்றி அண்மையில் ஒருவர் விதந்துரைத்ததைக் கேட்க முடிந்தது.
ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பல்வேறு விடயங்களில் பிரசித்தம் வாய்ந்தது.
அதன் தலைவராக இருப்பவர் ஓர் அரசியல் கட்சியிலும் முக்கியஸ்தர்.
யுத்தகாலத்தில் நடந்த சம்பவம் ஒன்றால் அந்த சங்கம் பிரபல்யமானது மட்டுமல்ல அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று வந்தது.
யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஏ 9 வீதியை அரசாங்கம் பூட்டி வைத்திருந்தது.
இதனால் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் எடுத்து வருவதில் சிரமங்கள் ஏற்பட்டிருந்ததால் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக அலறியடித்தகாலம் அது.
அந்தப் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க பல நூறு மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியது.
அப்போது அரசாங்கம் பால்மா, அரிசி, சீனி ஆகிய அத்தியாவசிய தேவைப் பொருட்களை வறிய மக்களுக்கு கட்டுப்பாட்டுவிலையில் விற்பனை செய்யச்சொல்லி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அனுப்பி வைத்தது.
அந்தப்பொருட்களோ வெளிசந்தையில் பல மடங்கு அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன.
அரசாங்கம் மக்களுக்கு விநியோகிப்பதற்காக அனுப்பிய பொருட்களை அந்த பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் தனது வாகனங்களில் ஏற்றி தனியார் கடைகளுக்கு விற்பனை செய்ததாக பின்னர் புகார் தெரிவிக்கப்பட்டு அது நீதிமன்றம் வரை சென்றிருந்தது.
அந்த சங்கத்தில் அப்போது முக்கிய பதவிகளில் இருந்தவர்கள்தான் இப்போதும் இருக்கிறார்கள்.
அதில் பணியாற்றிய பதினான்கு ஊழியர்கள் நீண்ட காலமாக நிரந்தரமாக்கப்படாமல் தொடர்ந்தும் தற்காலிக ஊழியர்களாகவே பணியாற்றி வந்தனர்.
அண்மையில் அவர்களில் ஐவரை தவிர்த்து 9 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது.
அது என்ன பதினான்கு பேரில் ஒன்பது பேருக்கு மட்டும் நிரந்தர நியமனம் என்று விசாரித்தபோது தான் தெரியவந்தது.
அவர்கள் ஐவரும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது.
அது என்ன பதினான்கு பேரில் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் ஐந்து பேரையும் தவிர்த்து விட்டு நியமனம் வழங்கப்பட்டது என்பது தான் இன்று அந்த சங்கத்தில்
பரபரப்பாக பேசப்படும் சங்கதி.

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: