கட்டுரை - இப்படியும் நடக்கிறது August 10, 2023

 அவர் ஒரு தென்னிலங்கை இளைஞர்.


வயது நாற்பதைக் கடந்தாலும் இளைஞர் என்று தானே சொல்கிறார்கள்.
ஒரு பௌத்தரான அவர் எப்போது என்னை சந்தித்தாலும் சைவசித்தாந்தம் பற்றி வகுப்பு எடுப்பார்.
தினமும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டுத்தான் அன்றைய கடமைகளைத் தொடங்குவார்.
எந்தத் துறைசார்ந்து பேசினாலும் அந்தத் துறை பற்றி ஒரு கலாநிதி பட்டம் பெற்றவர் போன்று பேசுவார்.
சில வேளைகளில் அதிகப் பிரசங்கித்தனம் போல இருக்கும்.
நேற்று முன்தினம் அந்த இளைஞனுடன் ஒரு மொறட்டுவை பல்கலைக்கழக பேராசிரியருடன் சந்தித்தேன்.
அப்போது அந்த இளைஞர் தன்னை அறிமுகம் செய்தபோது, மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் தான் ஆற்றிய ஒரு சிறிய பணி பற்றி எடுத்துச் சொன்னார்.
அவர் அப்போது உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாராம்.
வானியல் துறையில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்த அவர் அது தொடர்பாக பல்வேறு நுல்களைப் படித்து அறிந்து வைத்திருந்ததை கவனித்த அப்போதைய பல்கலைக்கழக உபவேந்தர் அவரை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
அவ்வாறு வகுப்பெடுத்தபோது, பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய விரிவுரையளர்கள், ‘இது என்ன ஒரு ஏ.எல். மாணவன் பல்கலைக் கழகத்தில் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதா?’ என்று கேள்வி கேட்கத்தொடங்கியிருந்தனராம்.
உபவேந்தர் உடனே இந்த ஏ.எல். மாணவனை விரிவுரையாளர்கள் முன்னால் வகுப்பெடுக்க கேட்டிருக்கிறார்.
ஒரு மணி நேரம் ஒழுங்குசெய்யப்பட்ட அந்த வகுப்பு நான்கு மணி நேரம் சென்றிருக்கின்றது.
அங்கிருந்த விரிவுரையாள்கள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் இந்த மாணவன் பதிலளித்திருக்கிறான்.
சொல்லப்போனால் விரிவுரையளர்கள் அறிந்திராத விடயங்களையெல்லாம் அவன் அறிந்திருந்தது அப்போது தெரியவந்தது.
அன்று அந்த மாணவனை கேள்வி கேட்ட விரிவுரையாளர்களில் ஒருவர்தான் நேற்று முன்தினம் நான் அந்த மாணவனுடன் (இன்றைய நாற்பது தாண்டிய
இளைஞன்) சந்தித்த பேராசிரியர்.
அந்தச் சந்திப்பில் அரசியல் எமது பேசுபொருளானதும் பேராசிரியர் யாழ்ப்பாண நிலைமைகளை கேட்டார்.
அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர் என்பதை நான் அறிவேன்.
அதனால் என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த அந்த விடயத்தை அவரிடம் விரக்தியுடன் சொன்னேன்.
‘பறாளாய் முருகன் கோவிலில் உள்ள அரச மரத்தை இப்போது சங்கமித்தை கொண்டுவந்து நாட்டியது என்று தொல்லியல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.
சங்கமித்தை வந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, ஆனால் இந்தக் கோவில் கட்டப்பட்டது சில நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக. அது எப்படி?’ என்றேன்.
இந்த அரச மரம் குறித்த அறிவிப்புக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய போராட்டத்தில் அதன் ஊடக பேச்சாளர் எழுப்பிய கேள்வியே
என் மனதில் இருந்ததால் அவரிடம் அதனை கேட்டேன்.
அப்போது அந்த பேராசிரியரை முந்திக்கொண்டு அந்த இளைஞன் சொன்னான், அது சரியானது தான்.
சங்கமித்தை வரும்போது கொண்டு வந்த அரச மரங்களில் ஒன்றை யாழ். தீபகற்பத்துக்கு கடல் மார்க்கமாக வந்திறங்கி உள்ளே வரும்போது ஓர் இடத்தில் நாட்டியது உண்மைதான்’ என்றார்.
ஓர் அரச மரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழுமா? என்ற எனது கேள்விக்கு, ‘அது என்ன அநுராதபுரத்தில் அவர் நாட்டிய மரம் இருக்கமுடியும்
என்றால் யாழ்ப்பாணத்தில் நாட்டியது இருக்காதா?’ என்றார்.
அவர் எந்த விடயத்தில் கதைத்தாலும் தகவல்களை சரியாகச் சொல்பவர் என்பதால் அவருடன் அதுகுறித்து மேலும் தர்க்கிப்பதை நிறுத்திக்கொண்டேன்.
அவர் பௌத்த இனவாதியோ, மதவாதியோ அல்ல.
அதிகம் ஏன் அவர் இப்போது சிவபெருமானையே வழிபடுபவர்.
அத்தகைய ஒருவருடன் நான் தர்க்கிக்க விரும்பவில்லை.
அத்தோடு அதனை நிறுத்திவிட்டேன்.
அவருடன் இவ்வாறு தர்க்கித்துவிட்டு வந்த மறுநாள் காலை (நேற்று) இலங்கை சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவிடமிருந்து ஒரு
குறுந்தகவல் வந்தது.
‘பண்டைய யாழ்ப்பாணம், முதலியார் சீ. இராசநாயகம் 97 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்.
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருட்டிணசுவாமி அய்யங்காரின் முன்னுரை கொண்ட நூல்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் அருள்மிகு பறாளை முருகன் கோயில் வளாகத்தில் உள்ள அரச மரம், சங்கமித்திரை கொண்டு வந்த மரங்களுள் ஒன்று என்கிறார் முதலியார் சீ. இராசநாயகம்.’
இதுவே சச்சி ஐயாவின் தகவல்.
கூடவே முதலியார் இராசநாயகம் எழுதிய ‘பண்டைய யாழ்ப்பாணம்’ என்ற நூலின் 64ஆவது பக்கத்தில் அதுகுறித்து வந்த பக்கத்தையும் படம் எடுத்து அனுப்பியிருந்தார்.
அந்த தகவல் வந்ததும், முதல் நாள் இதுகுறித்து பேசிய அந்த சிங்கள இளைஞனை தொடர்பு கொண்டு ‘நீர் சொன்னது சரிதான்’ என்றேன்.
உடனே அவர், Ancient Jaffna என்ற நூலில் இருந்துதான் நான் இந்தத் தகவலை பெற்றேன் என்றார்.
சச்சி ஐயா எந்த நூலை ஆதாதமாக அனுப்பியிருக்கிறாரோ அதனையே அந்த இளைஞரும் கூறியது அவர்மீது இன்னும் மதிப்பை கூட்டியது.
அவர் சொன்னார், ‘சங்கமித்தை இலங்கைக்கு வந்தபோது அவருடன் வந்த ஐந்து பௌத்த துறவிகளில் இருவர் தமிழர்கள்.’ என்றார்.
இது குறித்து இன்னமும் அவருடன் பேச வேண்டும் போல இருந்தது.
வசதி வருகின்றபோது இன்னுமொருநாள் பேசுவோம்.
இது வரலாறு சம்பந்தப்பட்டது.
விவாதிக்கவேண்டியது.
அதற்காக இந்த ஊர்க்குருவியும் பௌத்தர்களிடம் காசு வாங்கிவிட்டார் என்று யாரும் இனி கூறினாலும் கூறுவார்கள்.
முதலியார் இராசநாயகமும் வாங்கினார் என்று சொல்கிறார்களோ தெரியவில்லை.

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: