ஒருநாள் விடியும் ஒளியும் தெரியும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண் ....அவுஸ்திரேலியா 
























மயக்கம் கலக்கம் மனதில் குழப்பம்
வருவதை எண்ணி கலங்கிட வேண்டாம்
வாழ்க்கையில்  யாவுமே வந்துமே போகும்
உளமதை குலையா வைத்திட நினைப்போம் 

பகலும் இரவும் வந்துமே போகும்
பசியும் நோயும் பற்றியே தீரும்
நினைவில் பலபல வந்துமே நிற்கும்
மனதைத் திடமாய் வைத்திட வேண்டும்

உறவே பகையாய் ஆகவும் கூடும்
உலகம் தூக்கி எறியவும் செய்யும்
தலையில் இடிகள் வீழவும் செய்யும்
தளர்வினைத் தகர்த்து எறிந்திடல் வேண்டும்

தேடியே தீயது வந்துமே நிற்கும்
திசையெலாம் இருளாய் சூழ்ந்துமே செறியும்
வாடிய மனத்தை வதைத்திட முனைவார்
வதங்கிடல் துவண்டிடல் ஒழித்திட வேண்டும்

நட்பே வெறுப்பாய் அமையவும் கூடும்
நண்பனே வில்லனாய் மாறவும் கூடும்
வெறுமையே விரிந்து வலையென நிற்கும்
பொறுமையை அணைத்தால் போய்விடும் அனைத்தும்

கடலினும் பெரிதாய் கவலைகள் விரியும்
வானினும் பெரிதாய் துயரது விரியும்
பூமியே பாரமாய் இருப்பதாய் தெரியும்
சாமியே துணையென எண்ணினால் விடிவே 

நம்பிக்கை என்பதை பிடித்திடல் வேண்டும் 
ஒருநாள் விடியும் ஒளியும் தெரியும் 
இருளது தொடராய் இருப்பதும் இல்லை
இறையெனும் கருணை விடிவினைக் காட்டும் 
 
























































































No comments: