கட்டுரை இப்படியும் நடக்கிறது August 11, 2023

 இந்த பதின்மூன்று என்ற வார்த்தையை கொஞ்ச நாட்களுக்கு எழுதுவதில்லை என்று நினைத்தாலும் சிலர் விடுவதாக இல்லை.


இலங்கை அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துகின்ற விடயம் இப்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கின்றது.
அதனை அமுல்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி அண்மையில் அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தது வாசகர்கள் அறிந்தது
தான்.
ஆனால், இந்த கோரிக்கைக்கு பதில் எழுதியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ‘பதின்மூன்று தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியுமல்ல, தீர்வுமல்ல.
தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டியே இனப்பிரச்னையை தீர்க்க ஒரே வழியாகும்’ என தெரிவித்துள்ளது.
பதின்மூன்றை அமுல்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி கடந்த புதனன்று உரையாற்றிய ஜனாதிபதியும், ‘நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் ஏற்றவகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்’ என்றுதான் கூறியிருந்தார்.
இந்தப் பதின்மூன்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் வடக்கு, கிழக்கில் மாத்திரம் உருவாக்கப்படவில்லை.
நாடு முழுவதிலும் ஒன்பது மாகாண சபைகள் இயங்குகின்றன.
இந்த மாகாண சபைகளால் இந்த நாடு ஒரு பெரிய சுமையை சுமக்கின்றது.
தேவையற்ற செலவை எதிர்கொள்கின்றது அதனால் அதனை இல்லாமல் செய்யவேண்டும் என்றும் தெற்கில் சிலர் கோரி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மாகாண சபைகளால் நாட்டுக்கு பயனில்லை என்றால் அதனை இரத்து செய்யலாம் என்று முன்னணியினர் கோரியிருந்தாலும் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாகப் பதிலளித்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம்.
ஆனால், அவர்களோ பதின்மூன்றையும் இனப்பிரச்னை தீர்வையும் எதற்காக ஒன்றாகப் பார்த்தார்கள் என்பது தெரியவில்லை.
பதின்மூன்றுதான் இனப்பிரச்னைக்கு தீர்வு என்று ஜனாதிபதிகூட சொல்லவில்லை.
இது போதாதென்று, இணையத்தளம் ஒன்றில் ‘ஈழநாடு’வில் பதின்மூன்றுக்கு ஆதரவாக வெளிவந்த கட்டுரை ஒன்றுக்கு ஒருவர் எதிர்வினையாற்றியிருக்கிறார்.
அந்த இணையத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றை பாரிஸிலிருந்து ஒருவர் அனுப்பியிருந்தார்.
அந்தக் கட்டுரையில் வந்த ஒரு முக்கியமான பகுதியை கீழே தருகின்றேன்.
‘இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் நீட்சியான 13ஆவது திருத்தச்சட்டம்.
அது ஒரு தலைப்பட்சமாக உருவாக்கப்பட்ட 1987 – 1988ஆம் ஆண்டுகாலப்பகுதியிலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும், தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாகவிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளாலும் அன்றே நிராகரிக்கப்பட்டிருந்த வரலாறு இன்றும் தமிழ் மக்களிடையே உயிர்ப்புடனேயே இருக்கிறது.
13ஆவது திருத்த சட்டத்தை வைத்து, தமிழ் மக்களின் ஆகக் குறைந்த அரசியல் தீர்வுக்காக வேனும் ஒரு துரும்பைக்கூட நகர்த்த முடியாது என்ற பட்டறிவின் தீர்க்கதரிசனம், 1988இல், இதே 13ஆவது திருத்தத்தின் முறைப்படி எதையும் சாதிக்க முடியாது என்று, இலங்கை- இந்திய பேரினவாத சக்திகளால் வடக்கு – கிழக்கு முதலமைச்சராக்கப்பட்ட அ.வரதராஜப்பெருமாளே தன்னிலைவிளக்கம் கொடுத்துவிட்டு, பதவி துறந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்ற வரலாறு முன்மொழிய தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் வட மாகாண முதலமைச்சராக பதவி சுகத்தை அனுபவித்து ஓய்ந்த விக்னேஸ்வரன் வழிமொழிய இன்றும் நிலையாக தொடர்கிறது.’
இதுதான் அந்தக் கட்டுரையின் சாராம்சம்.
முதலாவது வரதராஜப்பெருமாள், இந்த பதின்மூன்றால் ஒரு பயனுமில்லை என்று எந்தக் கட்டத்திலும் சொல்லவில்லை.
அதேபோல விக்னேஸ்வரனும் அதனை முழுமையாக நிராகரிக்கவில்லை.
அதுவல்ல நாம் சொல்லவருவது.
பதின்மூன்றாவது திருத்தத்தையும் மாகாண சபைகளையும் விடுதலைப் புலிகள் முற்றாக நிராகரித்தார்கள்.
அதனால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அந்த கட்டுரையாளர்.
அவரின் கோரிக்கை நியாயமானதுதான்.
இதன்மூலம் அவர் எதனைச்சொல்ல வருகிறார் என்றால், விடுதலைப் புலிகள் நிராகரித்த பதின்மூன்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத்தான்.
ஆனால், நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற புலிகள் – இலங்கை அரச பேச்சின் முடிவில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வைத்து வெளியிடப்பட்ட பிரகடனத்தில் சமஷ்டிக் கட்டமைப்புக்கு இலங்கை அரசு சம்மதம் தெரிவித்த போதும் விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்திருந்தனர்.
புலிகள் நிராகரித்த சமஷ்டி கட்டமைப்பையும் தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என்றே அந்த கட்டுரையாளர் சொல்வதாகக் கொள்ளலாம்.
அப்படியெனில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று புலிகளின் விருப்பத்துக்கு மாறான ஒரு தீர்வையே கோரி நிற்கிறார்கள் என்று கொள்ளலாமோ?

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: