சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலின் தலவிருட்சமான அரசமரம்
குறித்து இரண்டு தினங்களுக்கு முன்னரும் இந்தப் பத்தியில் எழுதியிருந்தேன்.
அந்த அரச மரம் குறித்து முதலியார் இராசநாயகம் தொண்ணூற்று ஏழு வருடங்களுக்கு முன்னர் எழுதிய வரலாற்று நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவலை ஒரு சிங்கள இளைஞர் எனக்கு தெரிவித்தது குறித்தும் அதனை இலங்கை சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தமும் வெளியிட்டிருப்பது பற்றியும் அந்தப்
பத்தியில் எழுதியிருந்தேன்.
அதன் அர்த்தம் அதுதான் சரியானது என்பதல்ல.
இந்த விவகாரம் தொண்ணூறு வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றது என்றால் அது நூறு வருடங்களாக சர்ச்சைக்குரியதாக இருந்து
வருகின்றது என்பதை வெளிப்படுத்துவதே இந்த ஊர்க்குருவியின் நோக்கமாக இருந்தது.
சங்கமித்தை கொண்டுவந்து நாட்டிய மரம் என்று நம்பப்படுகின்ற அரச மரம் ஒன்று, அநுராதபுரத்தில் இருப்பதாக இன்றும் நம்பப்படுகின்றது.
ஆனால், வரலாறுகள் எப்போதும் சரியானவையாக இருந்ததில்லை.
அண்மையில் ஒரு செய்தி: அநுராதபுரத்தில் உள்ள அந்த அரசமரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட கிளை ஒன்று இந்தியாவில் புத்தகாயவில் நடப்பட்டதாகவும், அதனை பராமரிப்பதற்காக – அதாவது அந்த ‘புனித’ மரம் பட்டுப் போகாமல் வளர்த்து எடுக்கப்படவேண்டும் என்பதற்காக மாதாந்தம் ஐம்பதாயிரத்துக்கும்
அதிகமான இந்திய ரூபாய்களை அந்த மாநில அரசு செலவு செய்கின்றது என்றது அந்தச் செய்தி.
சில வேளை அந்த மரம் வளர்ந்து சில நூறு ஆண்டுகள் போனபின்னர் சங்கமித்தை நாட்டிய மரம் என்று வரலாறு எழுதப்பட்டாலும் ஆச்சரியமானதல்ல.
அதுபோலத்தான், நமது வரலாறுகளும் எழுதப்படுகின்றன.
நமது யாழ்ப்பாண பொதுநூலகம் எரியூட்டப்பட்டது என்பது நமது அரசியல் – பொதுவாழ்வில் ஒரு முக்கியமான சம்பவம்.
ஆனால், எமது கண் முன்னால் எரிந்து சாம்பலான அந்த சம்பவம் எப்போது நடந்தது என்பதில் அதாவது மே முப்பத்தியொராம் திகதியாக ஜூன் முதலாம் திகதியா என்று இன்றும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.
அண்மையில் கறுப்பு ஜூலையின் நாற்பதாவது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தோம்.
அதிலும் அந்த கலவரத்துக்கு காரணமான பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்ட அந்த தாக்குதல் இருபத்து மூன்றில் நடந்ததா? என்று ஒரு விவாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆக, நம் கண்முன்னால் நடந்த சம்பவங்களின் வரலாறுகளே இப்படி இருக்கும்போது சங்கமித்தையின் காலத்து வரலாறு எப்படியிருக்கும் என்பது தெரிந்ததுதான்.
இன்று இந்தப் பத்தியில் நாம் சொல்லவருவது, அது குறித்த விடயமல்ல.
இந்த பறாளாய் முருகன் கோவில் அரச மரம் பற்றிய – தொல்பொருள் திணைக்களம் அதனை சங்கமித்தை நாட்டியது என்று வெளியிட்ட வர்த்தமானி தொடர்பாக கடந்த புதனன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களான தர்மலிங்கம் சித்தார்த்தனும், செல்வம் அடைக்கலநாதனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து
முறையிட்டிருந்தார்கள்.
அவர்கள் இருவரும் முறையிட்டது தொடர்பான செய்திகள் வியாழக்கிழமை வெளியான ஈழநாடுவில் செய்தியாக வெளிவந்திருந்தது.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகர்களைச் சந்தித்த எம்.பிக்கள், பறாளாய் முருகன் கோயிலின் தலவிருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்து முறையற்ற விதமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார் என்று தெரிவித்திருந்தனர்.
அத்துடன், விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாமல் எப்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என தொல்லியல் திணைக்களத்தினரிடம் விசாரணை நடத்தவும் ஜனாதிபதி உத்தரவிட்டார் என்றும் இந்த விவகாரம் பற்றி இவர்கள் இருவரும் தனது கவனத்துக்குக் கொண்டு வருவதற்கு முன்னர் இப்படியொரு பிரச்னை நீடிப்பது தனது கவனத்துக்கு யாராலும் கொண்டு வரப்படவில்லையென ரணில் தெரிவித்ததாக தெரிவித்திருந்தனர்.
இந்தச் செய்தியை படித்து விட்டு ஈ. பி. டி. பி. ஊடகப் பேச்சாளர் நேற்று ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி, இந்த விவகாரம் குறித்து திங்கட் கிழமையே அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுகுறித்து பேசியிருந்ததாகவும் கூட்டமைப்பினர் ஆயிரம் விகாரைகளை அமைக்கும் சஜித்தின் திட்டத்துக்கு ஆதரவளித்துவிட்டு இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
இப்போது எமக்கு எழுகின்ற சந்தேகம் வேறு ஒன்றுமல்ல, திங்கட்கிழமையே அமைச்சர் அந்த விவகாரத்தை அமைச்சரவையில் கிளப்பியிருந்தபோதிலும், கூட்டமைப்பு எம். பிக்களிடம் அதுகுறித்து முன்னர் தான் அறிந்திருக்கவில்லை என்று ஜனாதிபதி சொன்னது தவறானதா? அல்லது ஜனாதிபதியே தெரிந்துகொண்டும் தெரியாதது
போல பதிலளித்தாரா?.
இந்த ஊர்க்குருவியைப் பொறுத்தவரை யார் குத்தினாலும் அரிசி ஆனால் சரிதான்.
- ஊர்க்குருவி.
- நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment