கட்டுரை இப்படியும் நடக்கிறது August 8, 2023

 பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து பலரை பிரித்தெடுத்துத் தனி


அணியாக தனது ஜனாதிபதி தேர்தலுக்கான கூட்டணியில் சேர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயன்று வருவது பற்றி முன்னரும் இந்தப் பத்தியில் தெரிவித்திருந்தேன்.

அதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் நிமல் லான்சா எம். பி. போன்றவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறித்தும்
அந்தப் பத்தியில் தெரிவித்திருந்தேன்.
அதனை அண்மையில், யாழ்ப்பாணம் வந்திருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனும் தான் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
பொதுஜன பெரமுனவை உடைப்பதற்கு ரணில் முயன்று வருவதாகவும் அது மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கலாம் என்றும் மனோ தெரிவித்திருந்தார்.
நிமல் லான்சா குழுவினரின் நகர்வால் கொதிப்படைந்திருக்கும் ராஜபக்ஷ அணியினர் அந்தப் புதிய அணி உருவாவதைத் தடுப்பதற்கு தம்மாலான முயற்சிகள் அனைத்தையும்
செய்துவருகின்றனர் எனவும் தெற்கில் விசயமறிந்த பத்திரிகையாளர் ஒருவர் தகவல் சொன்னார்.
அண்மையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிட்ட பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ இது தொடர்பில் முறையிட்டபோது பேசிய சில விடயங்கள் இப்பொது சிங்கள ஊடகங்களில் பேசப்படுகின்றன.
உங்களை இந்தப் பதவிக்கு நாங்களே கொண்டுவந்தோம்.
அதனை மறந்து தமது கட்சியை உடைப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று பஸில் கூறியபோது, சிரித்துக்கொண்டே பதிலளித்த ரணில், நீங்கள் என்னைக் கொண்டுவரவில்லை.
உங்களை நான்தான் காப்பாற்றினேன்.
அந்த நேரத்தில் நான் உங்களுக்கு உதவியிருக்காவிட்டால் இப்போது நாடு எப்படியிருக்கும் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டும் என்பதல்ல, நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதும் தெரியாததல்ல என்றாராம்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பஸில், ‘நீங்கள் அவர்களுக்கு உதவுவதால்தான் அவர்கள் இவ்வாறு எமது கட்சிக்கு எதிராக அணி திரள்கிறார்கள்.
அவர்களுக்கு உதவுவதையாவது நிறுத்துங்கள்’ என்று கோரிக்கை விடுத்தாராம்.
தான் ஆட்சிக்கு வந்த பின்னர் பாராளுமன்றில் பல தடவைகள் அவர்களும் தனக்கு உதவினரெனவும் அவ்வாறு தனக்கு உதவியவர்கள் கோரிக்கை விடுக்கின்றபோது அவர்களுக்கு உதவவேண்டியது தனது கடமை என்றும் கூறிய ரணில் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்ட பின்னர் பஸிலால் எதனையும் பின்னர் கூற முடியவில்லையாம்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் எனது கட்சிக்காரரை ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு வெளியேறியபோதே என்னால் அதனை தடுக்கமுடியவில்லை.
உங்கள் கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவதை என்னால் எப்படி தடுக்கமுடியும்? என்று ரணில் பதில் கேள்வி கேட்ட பின்னர் பஸில் அங்கிருந்து
சென்றிருக்கிறார்.
பஸிலுடனான இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அவரை சந்தித்த நிமல் லான்சா குழுவினர் தாம் தமது கட்சியை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர்,
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டதாகவும் ஆனாலும் அதுவரை காத்திருக்காமல் தாங்கள் இப்போதே ரணிலுக்கான பிரசாரத்தை தொடக்கிவிட்டதாகவும் கூறியிருக்கின்றனர்.
இந்தச் சந்திப்பைப் பற்றிய செய்தியைச் சொன்ன தெற்கின் பத்திரிகை நண்பர் ஒருவர், நிமல் அணியினர் ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் தமது அணியிலுள்ள ஒருவருக்கு
பிரதமர் பதவியை வழங்கவேண்டும் என்று கேட்டனரெனவும் அதற்கு ஐம்பது முதல் அறுபது எம். பிக்களை உங்களுடன் இணைத்தீர்கள் என்றால் அதனைத் தருவதற்கும் தான்
தயாராக இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறாராம்.
அதனால் உற்சாகமடைந்துள்ள நிமல் அணி ஆள்பிடி வேலையை தீவிரப்படுத்தியிருக்கின்றது.
எங்கே இவர்கள் ஐம்பதுக்கு மேற்பட்ட எம். பிக்களை திரட்டிவிட்டால் அவர்கள் சொல்கின்ற ஒருவருக்கு பிரதமர் பதவியை கொடுக்கவேண்டிவரும் என்பதால் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் நிமல் லான்சா அணியில் சேர்த்துவிட இப்போது ரணில் காய் நகர்த்துகிறார் என்றார் அந்த தெற்கின் பத்திரிகையாள நண்பர்.
இன்றைய பிரதமர் தினேஷ் ஜனாதிபதியின் கல்லூரி நண்பர்.
கடந்த ஒருவருடமாக இருவருக்குமிடையே நல்ல புரிந்துணர்வும் உறவும் நீடிக்கின்றது.
இந்நிலையில் அவரையும் நிமல் லான்சா அணியில் சேர்த்துவிட்டால் அவர்களுக்கு அவரை விடுத்து வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்வதே சிக்கலாகிவிடும்.
ரணிலுக்கு இந்த நிமல் லான்சாவை போன்ற ‘பொடியன்களை’ கையாள்வது பெரிய விசயமா என்ன?

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: