கட்டுரை இப்படியும் நடக்கிறது August 7, 2023

 துருக்கியில் வாழ்ந்த அறிஞர் முல்லா.


ஒருநாள் காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார்.
வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார்.
அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும் அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.
அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு ‘முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?’ என்று கேட்டான்.
‘மக்களுக்குப் பொய் பேசத்தெரியாது.
அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்’ என்றார் முல்லா.
‘அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக்காண்பியும் பார்க்கலாம்.
இதோ இந்த உடைவாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா?’ என்று முரடன் கேட்டான்.
‘உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை’ என்று கூறிய முல்லா திடீரென வானததைப்பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் சிரித்தார்.
‘என்ன சிரிக்கிறீர்’ என்று முரடன் கேட்டான்.
‘அன்பரே, உமது கைவாள் எனது தலையைத் துண்டிக்கும் முன்பு அதோ வானத்திலே கண்களைப் பறிக்கும் அழகுடன் சிறகுகளை அசைத்துப் பறக்கும் அந்த
விநோதமான தங்கப் பறவையை ஆசை தீரப் பார்த்து விடுகிறேன்.
அதற்குப் பிறகு நீர் எனது தலையை வெட்டி விடலாம்’ என்றார் முல்லா.
‘தங்கப் பறவையா வானத்தில் பறக்கிறது?’ என்ற முரடன் வியப்புடன் ஆகாயத்தை அண்ணாந்து நோக்கினான்.
முல்லா திடீரென்று பாய்ந்து முரடன் கையிலிருந்த வாளைத்தட்டிப் பறித்து விட்டார்.
‘நண்பனே, உம்முடைய உயிர் என் கையில் இருக்கிறது.
நான் நினைத்தால் உமது தலையை வெட்டி வீழ்த்திவிட முடியும் என்றார் முல்லா.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு விரைவில் நடப்பதற்கான ஏற்பாடுகளை தமிழரசுக் கட்சி தொடங்கிவிட்டதாகத் தெரிகின்றது.
கடைசியாக இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டுக்கு பின்னர், இதுவரை மாநாடு எதுவும் நடைபெறவில்லை.
அப்படி நடந்தால் தலைமைப் பதவியை கைப்பற்றவேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் தொடர்ந்து காய்நகர்த்தி வருகின்றனர்.
நீண்ட காலமாக மாநாடு நடக்கும் என்ற நம்பிக்கையே யாருக்கும் இருந்ததில்லை.
எப்படியென்றாலும் அதனை தள்ளிப்போடவே முயற்சி எடுக்கப்படும் என்ற நம்பிக்கையே எல்லோரிடமும் இருந்தது.
ஆனால், இப்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன என்று தெரிகின்றது.
அதற்காகவே இப்போது மாவட்ட கிளைகள், தொகுதிக்கிளைகள் என்று ஒவ்வொரு கிளைகளுக்கும் நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டு வருகின்றனர்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை அறிவதற்காக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருடன் பேசியபோது அவர் சொன்ன தகவல் ஆச்சரியத்தைத்
தந்தது.
வழக்கமாக மாநாடு நடக்கின்ற போதுதான் அதன் நிர்வாகிகள் தெரிவும் இடம்பெறும்.
அதாவது அடுத்துவரும் ஆண்டுகளுக்கான தலைவர், செயலாளர் போன்ற பதவிகளுக்கான தெரிவு மாநாட்டில் நடைபெறும்.
ஆனால், நடக்கவிருக்கும் மாநாட்டுக்கு முன்னதாக ஒரு மாதத்துக்கு முதலிலேயே, தலைவர் தெரிவு செய்யப்பட்டுவிட வேண்டும் என்று புதிய யோசனையை முன்வைத்திருக்கிறாராம் தற்போதைய தலைவர்.
அதற்கு அவர் சொல்லியிருக்கின்ற காரணம்தான் அதிர வைக்கின்றது.
மாநாட்டில் தலைவர் ‘தலைமை பேருரை’ ஆற்ற வேண்டும் என்றும் அந்தப் பேருரையை தயார் செய்வதற்காக தலைவர் தெரிவு மாநாட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே நடக்கவேண்டும் என்றும் யோசனை சொல்லியிருக்கிறாராம் தலைவர் மாவை சேனாதிராசா.
கடைசியாக நடந்த மாநாட்டில் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா, அந்த மாநாட்டில் தான் ஆற்றிய உரையை
ஒரு கையேடாக அச்சிட்டு மாநாட்டில் தான் பேசிய பின்னர் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு விநியோகித்திருந்தார்.
அவர்தான் அந்த மாநாட்டில் தலைவராக தெரிவுசெய்யப்படுவார் என்பது முன்னதாகவே முடிவு செய்யப்பட்ட விடயமாகியிருந்ததால் அவர் அதனை தயாரித்து எடுத்து வந்திருந்தார்.
இதற்கு முன்னர் மட்டக்களப்பில் நடைபெற்ற கட்சி மாநாட்டிலும் சம்பந்தன் ஐயா தலைமைப் பேருரையை ஆற்றியது ஒரு பிரசுரமாக வெளிவந்திருந்தது.
அதேபோல அடுத்த மாநாட்டிலும் தலைவர் ஆற்றுகின்ற உரையை வெளியிட வேண்டும் என்றும் அதற்காகவே தலைவர் தெரிவு ஒரு மாதத்துக்கு முன்னதாக நடக்கவேண்டும் எனவும் யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கின்றதாம்.
இதிலிருந்து மாநாட்டில் தலைவர் தெரிவு யார் என்பது இன்னமும் நிச்சயமானதாக இல்லை என்பது தெரிகின்றது.
மாநாட்டுக்கு பொதுச்சபை உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் வருவார்கள்.
ஆனால், அதற்கு முன்னதாக ஒரு சிறிய கூட்டத்தைக் கூட்டி தலைவர் தெரிவை முடித்துவிட்டால் வசதியாக இருக்கும் என்று தற்போதைய தலைவர் நினைக்கிறார் போலும் என்றார் இந்த தகவலைச் சொன்ன தமிழரசுக்காரர்.
முல்லா அந்த முரடனிடமிருந்து தப்பித்ததுபோல, சமயோசிதமாக சிறிய கூட்டம் ஒன்றை கூட்டி தலைமையில் தொடர நினைக்கிறாரோ என்னவோ?

  • ஊர்க்குருவி.
  • நன்றி ஈழநாடு 

No comments: