பாரத விலாஸ் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பாரத நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகி விட்டன.


பல்வேறு சமயங்கள்,இனங்கள், மொழிகள், கலாசாரங்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழும் நாடாக பாரதம் திகழ்கிறது. இந்த ஒற்றுமையைத்தான் தேசிய ஒருமைப்பாடு என்று பெருமிதத்துடன் போற்றுகிறார்கள் . இந்த தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் படம் ஒன்று வந்தது. அந்த படம் தான் பாரத விலாஸ்.


சிவாஜி கணேசனின் நடிப்பில் தனது சினி பாரத் நிறுவனத்தால் பாபு படத்தை தயாரித்து இயக்கி வெற்றி கண்ட ஏ சி திருலோகசந்தர் இரண்டாவது தயாரிப்பாக இந்தப் படத்தை எடுத்தார். திரைக்கதை எழுதி படத்தையும் தயாரித்து இயக்கினார் அவர்.

சென்னையில் ஒரு வெள்ளைக்கார அதிகாரிக்கு சொந்தமான வீட்டில்

சந்தர்ப்ப வசத்தால் நான்கு குடும்பங்கள் வாடகைக்கு குடியேறுகிறன. தமிழ், மலையாள முஸ்லீம், கன்னட தெலுங்கு பேசும் தம்பதி, பஞ்சாப் குடும்பம் என குடியேறும் இந்த நான்கு குடும்பங்களும் தாங்கள் வாழும் வீட்டுக்கு பாரத விலாஸ் என்று பெயரிட்டு ஒற்றுமையுடன் வாழ்கின்றன. இவர்கள் குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை. இந்த கதையை நகர்த்த ஏராளமான நடிகர்கள் படத்தில் இடம் பெற்றிருந்தார்கள்.

தமிழ் தம்பதியாக சிவாஜி, கே ஆர் விஜயா, பஞ்சாபி தம்பதியாக சுந்தரராஜன், தேவிகா, கன்னட தெலுங்கு தம்பதி எம் ஆர் ஆர் வாசு, மனோரமா, மலையாள முஸ்லிம் தம்பதியாக வி கே ராமசாமி, ராஜசுலோசனா இவர்களுடன் ஜே பி சந்திரபாபு, ஏ.சகுந்தலா, சிவகுமார்,ஜெயசுதா, ஜெயசித்ரா, சசிகுமார், எஸ் வி ராமதாஸ், எஸ் வி ராமதாஸ், சி ஐ டி சகுந்தலா, ராஜபாண்டியன், நீலு, டைபிஸ்ட் கோபு, ராஜவேலு, என்று ஒரு நடிகர் பட்டாளமே படத்தை ஆக்கிரமித்திருந்தது.

இவர்கள் போதாதென்று தெலுங்கு நடிகர் ஏ நாகேஸ்வர ராவ், மலையாள நடிகர் மது, ஹிந்தி ஹீரோ சஞ்சீவ்குமார் ஆகியோரும் கௌரவ நடிகர்களாக படத்தில் இடம் பெற்றார்கள். எல்லா நடிகர்களும் அனுபவசாலிகள். அதனால் அவர்களை இயக்குவதில் டைரெக்டருக்கு பெரிய சிரமம் எதுவுமில்லை. ஆனால் படம் முழுதும் வாசு கத்தி கத்தி பேசுவதை கட்டப்படுத்தியிருக்கலாம்!

சிவாஜி அப்பாவியாக, அசடாக , கோபக்காரராக, பயந்தவராக , ஆவேசம் கொள்பவராக படத்தில் வருகிறார். தன் இமேஜை பற்றி கவலைப் படாது நடித்து நிறைந்த நடிப்பை தருகிறார். அவருடைய அத்தனை குணாம்சங்களுக்கும் ஈடு கொடுப்பவராக கே ஆர் விஜயா பாந்தமாக நடிக்கிறார். தேவிகா இருந்தும் இல்லாத நிலை. வி கே ராமசாமி சோகமாகவும் நடிக்க முடியும் என்று நிரூபிக்கிறார். படத்தில் வருபவர்கள் பல மொழி பேசுபவர்களாக இருந்த போதும் பொது மொழியாக அவர்கள் பேசுவது தமிழ்தான்!


படத்துக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். சக்கை போடு போடு ராஜா பாடல் மனசாட்சியுடன் சேர்ந்து படுவது போல் வித்யாசமாக அமைந்தது. நாற்பது வயது நாய்க் குணம் பாடல் வேடிக்கையான கருத்துக் பாடல். இந்திய நாடு என் வீடு தேசியத்தை வலியுறுத்தும் பாடல் . எல்லாம் வாலியின் கை வண்ணம்.

படத்தின் வசனங்களை மதுரை திருமாறன் எழுதினார். நான் பெண்ணுக்கு ஆட கற்றுக் கொடுத்தேன், பாட கற்றுக் கொடுத்தேன் ஆனால் அழ கற்றுக் கொடுக்கவில்லை, பணம் தான் மனுஷன் காலில் விழவேனும் , மனுஷன் பணத்தின் காலில் விழ கூடாது போன்ற வசனங்கள் பிரகாசித்தன.

எம் விஸ்வநாத் ராய் ஒளிப்பதிவு செய்தார். பாபு படத்தை கருப்பு

வெள்ளையில் எடுத்த திருலோக் இந்தப் படத்தை கலரில் எடுத்தார். தேசிய ஒற்றுமையை விளக்க எடுத்த படம் என்பதால் கதை ஓரளவு செயற்கையாகவே இருந்தது. ஆனாலும் நோக்கம் சிறப்பாக இருந்ததால் அந்த குறையை கண்டு கொள்ளத் தேவையில்லை. ஆங்கிலத்தில் வெளிவந்த ஹிந்தி திரைப் பட செய்திகளை தரும் பிலிம் பெயர் சஞ்சிகை 1973ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படம் என்ற விருதை படத்துக்கும், சிறந்த தமிழ் டைரக்டர் என்ற விருதை திருலோகச்சந்தருக்கும் வழங்கி கௌரவித்தது!




No comments: