அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.
எனது எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) தொடரின் 76 ஆவது அங்கத்தை இங்கிலாந்திலிருந்து எழுதுகின்றேன். கடந்த 11 ஆம் திகதி, பாரிஸ் மாநகரிலிருந்து ரயில் மார்க்கமாக புறப்பட்டு இங்கிலாந்திற்கு வந்து சேர்ந்தேன்.
எழுத்தாளரும், தொலைக்காட்சி
, சமூக வலைத்தள ஊடகவியலாளருமான நண்பர் எஸ்.
கே. ராஜனும், எனது தங்கை மகன் சதீஸ்குமாரும் என்னை வரவேற்றனர்.
பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளையின் விருது விழா கடந்த 06 ஆம்
திகதி நடந்தது. அதற்காக வருகை தந்து, அந்த விழா முடிவுற்றதும், சில நாட்கள் பாரிஸில் தங்கியிருந்து சில கலை இலக்கிய நண்பர்களை சந்தித்தேன்.
பிரான்ஸில் Hotel B & B இல் விருதாளர்களுக்கான தங்குமிட வசதி வழங்கப்பட்டிருந்தது. வென்மேரி அறக்கட்டளையின் நிறுவுனர் வென்ஸிலாஸ் அநுரா அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் இணைந்து அனைத்து
ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தார்.
இங்கிலாந்திலிருந்து வருகை
தந்திருந்த நூலகர் செல்வராஜா, பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதியர், டென்மார்க்கிலிருந்து வந்திருந்த ‘ ‘நிலக்கிளி ‘ அ. பாலமனோகரன் தம்பதியர், கனடாவிலிருந்து வந்திருந்த பேராசிரியர் இளையதம்பி
பாலசுந்தரம் தம்பதியர், மற்றும் கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம், அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த பேராசிரியர்
ஆசி. கந்தராஜா தம்பதியர், நியூசிலாந்திலிருந்து கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபி தனது கணவருடனும்,
நோர்வேயிலிருந்து நரம்பியல் மருத்துவ நிபுணர் ரூபவதனா மகேஷ்பரன் தனது தாயார் மற்றும்
கணவருடனும் வருகை தந்து குறிப்பிட்ட Hotel B & B இல் தங்கியிருந்தனர்.
எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியனும், கலை, இலக்கிய ஆவணச்சேகரிப்பாளர் – பதிப்பாசிரியர்
பத்மநாப அய்யரும் வெளியே உறவினர்கள் – நண்பர்கள்
இல்லத்தில் தங்கியிருந்து விருது விழாவுக்கு வந்தனர்.
நானும் Hotel B & B இல்
இருந்தேன்.
இங்கிருந்த நாட்கள் கலகலப்பாக கழிந்தன.
எனது பால்ய காலத்தில் எனக்கு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்து, நீர்கொழும்பு
விவேகானந்தா வித்தியாலயத்தில்
( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) 1954 ஆம் ஆண்டு முதல் மாணவனாக இணைத்துக்கொண்ட
ஆசான் ( அமரர் ) பண்டிதர் வட்டுக்கோட்டை க. மயில்வாகனன்
அவர்களின் நினைவாக எனக்கு விருது வழங்கப்பட்டது.
அதனால், அவரது புதல்வர்கள் முருகானந்தனும், மகேசானந்தனும் ( இரட்டையர்கள்
) எனது நலனில் கூடுதல் கவனம் செலுத்தினர் என்பதை
இங்கே நன்றியுடன் குறிப்பிடுகின்றேன்.
விருது விழா ஓகஸ்ட் 06 ஆம் திகதி வெகு சிறப்பாக நடந்தது.
அன்றைய தினம் காலை ஆறு மணியளவில் சென்னையிலிருந்து கவிஞரும் இலக்கிய நண்பருமான வ. ஐ. ச. ஜெயபாலன் என்னை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டார்.
இவர் 1976 காலப்பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தில்
பயின்ற காலம் முதல் நன்கறிவேன். சிறந்த கவிஞர். இறுதியாக 2005 ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில்தான்
சந்தித்தேன். எனக்கு கனடா இயல் விருது கிடைத்த செய்தி அறிந்ததும் தொடர்புகொண்டு வாழ்த்தினார்.
பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளை
விருது, இவருக்கும் கிடைத்திருப்பதாக ஊடகங்களில்
செய்தி வெளியாகியிருந்தது. இவரும் பிரான்ஸுக்கு
வருவாரென எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால், அவரது தொலைபேசி அழைப்புத்தான் வந்தது.
“ வரவில்லையா..? “ எனக்கேட்டேன்.
“ இல்லை. நான் ஒரு கவிஞன். ஆனால், என்னை திரைப்பட நடிகர்
என்று அடையாளப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர். அதனால் வரவில்லை “ என்றார்.
எனக்கு அடையாளம் குறித்த
கேள்விகள் மனதில் இழையோடின.
தமிழ் உலகம் நன்கறிந்த
கவிஞர்தான் ஜெயபாலன். சென்னைக்குச் சென்று ஆடுகளம்
( 2011 ) திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருபவர். பதினைந்திற்கும்
மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டார். பெரும்பாலும் வில்லன் பாத்திரத்தில்தான்
தோன்றினார். இவரது யாழ்ப்பாணத் தமிழ் உச்சரிப்பினை தமிழக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
என்பதனாலோ என்னவோ
( தமிழக திரைப்பட இயக்குநர்களின் பார்வையில் ) தமிழகத்தவர்கள்தான் இவருக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
தன்னை நடிகன் என அடையாளப்படுத்தி விருது தருகிறார்களே என்பதுதான் அவரது ஆதங்கமாக இருந்தது.
அவ்வாறாயின் ஏதேனும் ஒரு
துறையில் ஈடுபடும் ஒருவரின் அடையாளம் என்று எதனை நாம் கருதுவது?! என்ற கேள்வி எனது
மனதில் எழுந்தது.
தொலைவிலிருந்து அந்த காலை
நேரம் அவர் தொடர்புகொண்டு உரையாடியபோது, அதுபற்றி விவாதிக்க மனம் இடம் தரவில்லை. வென்மேரி அறக்கட்டளையின் விருதினைப் பெறுவதற்காக
பிரான்ஸ் நாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அனைவரும் தங்கள் சொந்தச் செலவில்தான் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். தங்குமிட
வசதி தேவைப்பட்டவர்களுக்கு விழா ஏற்பாட்டளர்கள் அதற்கான ஒழுங்குகளையும் சிறப்பாக செய்திருந்தனர்.
கவிஞரும் நடிகருமான ஜெயபாலன்
நோர்வே நாட்டை தனது புகலிடமாகக் கொண்டிருந்தாலும், சினிமா வாய்ப்புகளுக்காக சென்னையிலேயே
வாடகை வீட்டில் தங்கியிருப்பவர்.
எனவே அவரால் பணம் செலவிட்டு
பிரான்ஸுக்கு வருவது சாத்தியமில்லாதிருக்கலாம்.
அடையாளம் குறித்த அவரது கருத்து தொடர்பாக நாம் தங்கியிருந்த
Hotel B & B இல் விருதாளர்கள் சிலருடன் உரையாடினேன்.
எனது எழுத்தும் வாழ்க்கையும்
தொடரினை எழுதும்போது இந்த அடையாளம் குறித்து எனக்குள்ளும் பல கேள்விகள் இருக்கின்றன.
எழுத்தையே முழு நேரத்தொழிலாக
1972 முதல் நானும் மேற்கொண்டிருப்பதனால்,
என்னை எழுத்தாளன் என்றே அடையாளப்படுத்துவதற்கு விரும்புகின்றேன். புகலிடத்தில்
குடும்பத்திற்காக வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும்,
இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் எழுத்துத்தான் எனது முழுநேரத் தொழில்.
படைப்பிலக்கியவாதிகளாக, ஊடகவியலாளர்களாக, இலக்கிய விமர்சகர்களாக தமது எழுத்துக்களை பதிவேற்றிவரும்
பலர், ஏதேனும் தொழிலை வருமானத்திற்காக மேற்கொண்டுதான் வருகிறார்கள். அவர்கள் ஆசிரியர்களாக – பேராசிரியர்களாக, பொறியியலாளர்களாக, சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, கணக்காளர்களாக, தொழிலாளி – விவசாயிகளாக, திரைப்பட
நடிகர்களாகவும் இருக்கிறார்கள்.
திரைப்பட நடிகராக முன்பிருந்தவரான
சிவக்குமாரும் ஒரு எழுத்தாளர்தான், பேச்சாளர்தான். பல திரைப்படங்களில் நடித்திருக்கும் குறிப்பிடத்தகுந்த
நடிகர்.
ஆனால், அவரை நடிகர் சிவக்குமார்
என்றுதான் இப்போதும் அழைக்கிறார்கள். நடிப்பை முழுநேரத்தொழிலாக மேற்கொண்டுவரும் அனைவருடையதும்
அடையாளம் நடிகர் – நடிகையர்தான்.
கவிஞராக அறியப்பட்டு, தமிழ்நாட்டில் முழுநேர நடிகராகியிருக்கும் நண்பர்
ஜெயபாலனுக்கு தனது அடையாளம் எது? என்பது குறித்து ஏன் மயக்கம்? என்ற கருத்தினை நாம் தங்கியிருந்த
Hotel B & B இல் சில விருதாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
எனினும் விருது விழாவில்
ஜெயபாலனின் பெயர் அறிவிக்கப்பட்டபோது காண்பிக்கப்பட்ட காணொளியில் அவர் ஏற்கனவே எழுதி
வெளியிட்டிருந்த நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அத்துடன் ஆடுகளம் திரைப்படத்தில்
அவர் நடிகர் தனுஷுடன் நிற்கும் ஒரு காட்சியும் காண்பிக்கப்பட்டது.
தம்மை எழுத்தாளர்களாக சொல்லிக்கொள்ளும்
எம்மவர்கள் ஏதும் தொழில் துறைகளில் ஈடுபட்டால்,
தமது அடையாளம் குறித்து என்ன சொல்வார்கள் ? என்ற கேள்வியை முன்வைத்து தற்போதைக்கு
இந்த அங்கத்தை நிறைவுசெய்கின்றேன்.
( தொடரும் )
No comments:
Post a Comment