நல்ல முடிவு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 நல்லவன் ஒருவன் ஊரில் காலமானால் ஊரே கூடி அனுதாபம்


தெரிவிக்கும். ஆனால் இறந்தவன் கெட்டவன் என்றால் ஊரே ஒன்று சேர்ந்து ஆனந்தக் கூத்தாடும். ஆனால் இறந்தவன் கெட்டவன் என்றாலும் அவன் இறந்தது எப்படி என்ற மர்மம் நீடித்தால் செத்தும் கெடுத்தான் பாவி என்ற நிலையே நீடிக்கும். இந்த பிரச்சனை எவ்வாறு தீர்ந்தது என்பதை விளக்கும் படம்தான் நல்ல முடிவு.


கிராமத்தில் செல்வத்துடனும், செல்வாக்குடனும் வளம் வரும்

முத்துலிங்கம் ஓர் அயோக்கியன். ஊரில் உள்ள பெண்களை எல்லாம் பெண்டாள நினைக்கும் சண்டாளன். மீனாட்சி அந்த ஊரில் தங்கை, தகப்பனுடன் வாழ்ந்து வருகிறாள். கூடவே ரங்கையா என்ற மாட்டையும் அருமை, பெருமையாக வளர்த்து வருகிறாள். ஊரில் பட்டதாரியாக விளங்கும் கணேசனுக்கும் அவளுக்கும் இடையே காதல் வருகிறது. ஆனால் முத்துலிங்கமோ , மீனாட்சி, அவள் தங்கை, அவனின் அடியாளாக மாயாண்டியின் மகள், மனநிலை பாதிக்கப் பட்ட ஒரு பெண் என்று எல்லோரையும் தன்னுடைய இச்சைக்கு பயன்படுத்த அலைகிறான். இதனை தட்டி கேட்கும் அவனின் மனைவி, தம்பி இருவரையும் நிந்தனை செய்கிறான். இந்த நிலையில ஓர் இரவு காட்டு பங்களாவில் முத்துலிங்கம் படுகொலை செய்யப்படுகிறான். அவனை கொன்றது யாரென்ற மர்மம் நீடிக்கிறது . இறுதியில் மர்மம் விலகி நல்ல முடிவு ஏற்படுகிறது .

மர்மக் கதை ஒன்றை கிராமிய சூழலில் எழுதியிருந்தார் பாலமுருகன். சிவாஜியின் ஏராளமான படங்களுக்கு கதை வசனம் எழுதியிருந்த இவர் வித்தியாசமான ஒரு கதையை அமைத்திருந்தார். அதற்கு அவர் எழுதிய வசனங்கள் கருத்துடன் அமைந்தன. படத்தில் ஹீரோவாக ஜெமினி கணேசன் நடிக்க அவருக்கு ஜோடியாக ஜெயந்தி நடித்தார். அன்றைய சீசனில் இவர்கள் இணைந்து பல படங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திலும் அது தொடர்ந்தது. ஆனாலும் நடிப்பில் மட்டுமன்றி உருவத்திலும் இருவரிடையே முதிர்ச்சி தெரிந்தது! படத்தில் மற்றுமொரு ஜோடி முத்துராமன், வெண்ணிற ஆடை நிர்மலா. இருவர் நடிப்பும் ரசிக்கும் படி இருந்தது.


வில்லன் முத்துலிங்கமாக ஆர் எஸ் மனோகர் தனது வழமையான நடிப்பை வழங்கினார். ஏ கே வீராசாமி சில காட்சிகளில் வந்தாலும் நிறைவாக செய்திருந்தார். நகைச்சுவைக்கு சோ, மனோரமா, தேங்காய் சீனிவாசன் பொறுப்பு. சோ போடும் பெண் வேடம் அவருக்கு அருமையாக பொருந்துகிறது. இவர்களுடன் குமாரி பதமினி, பீலி சிவம், சுகுமாரி ஆகியோரும் நடித்தனர்.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பாடல்கள்தான்.

கண்ணதாசன் இயற்றி , எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்த படத்தின் அனைத்து பாடல்களும் ஜிலேபி! டி எம் எஸ், சுசிலா குரலில் , நீ இன்றி நான் இல்லை வாடா ரங்கையா, முல்லை பூ போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி, மாமா வீடு கல்யாணத்திலே ஊர் கோலம் விட்டது போலே, காட்டு ராணி முகத்தை காட்டு ராணி ஆகிய பாடல்கள் படத்தை விட பிரபலமடைந்தன. நடன ஆசிரியர் இ . மாதவனின் நடன அசைவுகள் இதமாக இருந்தது. விந்தன் படத்தை ஒளிப்பதிவு செய்ய கே .கோவிந்தசாமி படத் தொகுப்பை கையாண்டார்.


படத்தை டைரக்ட் செய்தவர் சி என் சண்முகம். வீணை எஸ் பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்த இவர் 1967ம் ஆண்டு கற்பூரம் என்ற படத்தை இயக்கி , அந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான பிலிம் பெயார் விருதும், சிறந்த நடிகர் என்ற தமிழ்நாடு அரசின் விருது ஏவி எம் ராஜனுக்கும் கிடைத்தது. அந்த சண்முகம் நீண்ட காலத்துக்கு பிறகு இந்த படத்தை இயக்கி இருந்தார். படத்தை தொய்வில்லாமல் நகர்த்தியும் இருந்தார். ஆனாலும் திறமை இருந்தும் அவரால் முன்னணி இயக்குனராக ஏனோ முடியவில்லை.

கிராமம், குடும்ப செண்டிமெண்ட், மர்மம், நகைச்சுவை என்று எல்லாம் கலந்து பாலமுருகன், சண்முகம் இருவரும் தந்த நல்ல முடிவு நல்ல படம்!
No comments: