இந்திய – இலங்கை இணைந்த பொருளாதார தொலைநோக்கு: தொடர்புகளை மேம்படுத்தல், செழுமையை உறுதிப்படுத்தல்

 

July 21, 2023 4:47 pm 

இன்று (21) புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்புக்களின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பெறுபேறுகளை இலக்காகக் கொண்ட பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதில் இந்திய இலங்கை பங்குடமையானது வலுவான மூலாதாரமாக இருந்ததாக இரு நாடுகளினதும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த அதேசமயம், இலங்கை மக்களுக்காகவும் அரசாங்கத்துக்காகவும் முன்னொருபோதுமில்லாத வகையில் இந்தியாவால் தக்கதருணத்தில் வழங்கப்பட்ட ஆதரவுக்காக இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விசேட பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

2. இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி, ஆகியவற்றுக்கான தமது அர்ப்பணிப்பினையும் நம்பிக்கையினையும் இரு தலைவர்களும் இச்சந்திப்புகளின்போது மீள வலியுறுத்தியிருந்த அதேவேளை, நல்லிணக்கத்தினை ஊக்குவிப்பதற்காகவும் நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் நலன்களுக்காக ஸ்திரமானதும் சமமானதும் வலுவானதுமான பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தினை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

3. மேலும் இந்தியாவின் ஸ்திரமானதும் துரிதமானதுமான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மீட்சி, புனரமைப்பு பணிகள் ஆகியவற்றுடன் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமானதும் ஆழமானதுமான இருதரப்பு பொருளாதார பங்குடைமையை உருவாக்குவதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதாக இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். மேலும், இரு நாட்டு மக்களிடையே நாகரீக உறவுகள், புவியியல் ரீதியான நெருக்கம், கலாசார தொடர்பு மற்றும் புராதன நன்மதிப்பு ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள இணையற்ற நன்மைகளை சுட்டிக்காட்டியதுடன், பகிரப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார செழுமையை உருவாக்கும் வகையில் ஏற்கனவே உள்ள இணக்கப்பாடுகள் மற்றும் ஏனைய மேலதிக வசதிகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

4. இந்த நோக்கங்களின் அடிப்படையில், இவற்றை செயல்படுத்தும் முக்கிய கருவியாக, சகல பரிமாணங்களிலும் தொடர்புகளை வலுவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைவாக; இரு தலைவர்களும் கீழ்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

I. கடல் மார்க்கமான இணைப்பு;

a. பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் பிராந்திய கப்பல் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை அதிகரிப்பதனை இலக்காகக் கொண்டு கொழும்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்கள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்பு வள அபிவிருத்தியில் ஒத்துழைப்பு வழங்குதல்.

b. இந்தியாவிலுள்ள நாகபட்டினம் மற்றும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்தினை மீள ஆரம்பித்தல், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலும் பரஸ்பரம் இணக்கம் காணப்பட்ட ஏனைய இடங்கள் இடையிலுமான கப்பல் போக்குவரத்தினை விரைவில் மீள ஆரம்பிப்பதற்கான பணிகளை முன்னெடுத்தல்.

II. வான் மார்க்கமான தொடர்பு;

a. யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பித்தமையானது இருநாட்டு மக்களிடையிலுமான உறவுகளை மேம்படுத்தியுள்ள அதேவேளை இச்சேவையினை கொழும்பு வரை விஸ்தரிப்பதற்கும் அதே போல சென்னை மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட இலங்கையின் ஏனைய இடங்கள் இடையிலான தொடர்புகளை விஸ்தரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

b. மக்களுக்கு சிறந்த பொருளாதார பிரதிபலன்களை பெற்றுக் கொள்வதற்காக, பலாலி விமான நிலையத்தின் உட்கட்டமைப்பினை மேலும் அபிவிருத்திசெய்தல் உட்பட சிவில் விமான போக்குவரத்து துறையில் ஒத்துழைப்பினையும் முதலீட்டினையும் வலுவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல்.

III. மின்சக்தி மற்றும் வலுச்சக்தி இணைப்புகள்;

a. புதுப்பிக்கத்தக்க சக்தியினை அபிவிருத்தி செய்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையானது, இலங்கையின் முக்கியத்துவமிக்க புதுப்பிக்கத்தக்க சக்தியினை அபிவிருத்தி செய்வதற்காக கரையோர காற்றாலைகள் மற்றும் சூரியக்கலங்கள் மூலமான மின்சக்தி உட்பட இலங்கையின் குறிப்பிடத்தக்க புதுப்பிக்கத்தக்க சக்தி ஆற்றலை மேம்படுத்தும், இதன்காரணமாக 2030 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் ஊடாக 70 வீதமான மின் தேவையினை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டிருக்கும் இலங்கையின் நோக்கம் வெற்றியடைவதனை உறுதி செய்தல்.

b. இலங்கையில் மின்சார உற்பத்தி செலவினத்தை குறைப்பது மட்டுமல்லாமல் இலங்கைக்கான அந்நியச் செலாவணிக்குரிய நம்பகமான மற்றும் வலுவான தளத்தினையும் உருவாக்கும் நோக்குடன் BBIN நாடுகள் உட்பட இலங்கைக்கும் ஏனைய பிராந்திய நாடுகளுக்கும் இடையில் நேரடியான வர்த்தக மின் சேவைகளை செயல்படுத்துவதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உயர்வலு மின்சக்தி விநியோகக் கட்டமைப்பினை ஸ்தாபித்தல்.

c. இலங்கையின் மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மூலங்களை அதிகரிப்பதனை இலக்காகக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் ஊடாக பசுமை ஹைட்ரோஜன் மற்றும் பசுமை அமோனியா ஆகியவற்றில் ஒத்துழைப்பினை விஸ்தரித்தல் மற்றும் சம்பூரில் சூரியமின்கல திட்டம் மற்றும் எல்.என்.ஜி திட்டம் ஆகியவை குறித்த புரிந்துணர்வினை துரிதமாக அமுல்படுத்துதல்.

d. திருகோணமலை எண்ணெய்தாங்கி பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திக்கான தற்போதைய ஒத்துழைப்பானது, திருகோணமலை பிராந்தியத்தில் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான எமது பெருமுயற்சியினை பிரதிபலிக்கின்றது, அத்துடன் கைத்தொழில் மின்சக்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் ஆகியவற்றுக்கான பிராந்திய மற்றும் தேசிய மையமாக திருகோணமலையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

e. இலங்கைக்கு மலிவானதும் நம்பகமானதுமான எரிசக்தி வளங்களின் உறுதியான விநியோகத்தினை உறுதிப்படுத்துவதனை இலக்காகக் கொண்டு இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கைக்கு பல்பொருள் பெற்றோலிய குழாய் கட்டமைப்பினை நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பு.

f. இலங்கையின் மேல்நிலை (UPSTREAM) பெற்றோலிய வளத்துறையினை அபிவிருத்தி செய்யும் இலக்குடன் இலங்கை கரைக்கு அப்பாலுள்ள பகுதிகளில் பரஸ்பர இணக்கப்பாட்டுக்கு அமைவாக கூட்டு அகழ்வு மற்றும் ஹைட்ரோகாபன் உற்பத்தியை மேற்கொள்ளல்.

IV. வர்த்தகம், பொருளாதார மற்றும் நிதி ரீதியான தொடர்பு

a. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் பெருந்தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதிகளில் இரு தரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஈடுபாடுகள் மிகவும் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, கொள்கை நிலைத்தன்மை, இலகுவாக வர்த்தகங்களை மேற்கொள்வதை ஊக்குவித்தல், இருதரப்பு முதலீட்டாளர்களுக்குமான வெளிப்படையான அணுகுமுறை ஆகியவற்றின் ஊடாக பரஸ்பர முதலீட்டினை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

b. மேலும் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்களின் உரித்துமாற்றல் நடவடிக்கைகளிலும் இலங்கையின் பல்வேறு துறைகளிலும் உற்பத்தி மற்றும் பொருளாதார வலயங்களிலும் இந்தியாவிலிருந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகளை உருவாக்குதல்.

c. புதிய மற்றும் முன்னுரிமைக்குரிய துறைகளில் இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பரந்தளவில் மேம்படுத்துதனை இலக்காகக் கொண்டு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கலந்துரையாடல்களை மேற்கொள்தல்.

d. இந்திய ரூபாவை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் காரணமாக பரஸ்பரம் நன்மை பயக்கின்றதும் வலுவானதுமான வர்த்தக தொடர்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிறுவனங்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் ஏனைய கொடுக்கல் வாங்கல்களை மேலும் மேம்படுத்துவதற்காக UPI தளத்தினை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் கொடுப்பனவு முறையினை செயல்படுத்துவதற்கு இணங்கப்பட்டுள்ளது.

e. பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஆட்சி முறையில் இந்தியாவின் துரிதமான டிஜிட்டல் மயமாதல் இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் நிலையியல் மாற்றங்களின் முக்கியமான வினையூக்கியாக அமைந்துள்ளது. அத்துடன் பிரஜைகளை மையமாகக் கொண்ட சேவைகளை ஆக்கபூர்வமான வகையிலும் வினைத்திறன் மிக்கதாகவும் இலங்கை மக்களுக்காக வழங்குவதற்கும், இலங்கைக்கான தேவை மற்றும் முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பினை பயன்படுத்துவதற்கும் இணங்கப்பட்டுள்ளது.

V. மக்கள் – மக்கள் தொடர்பு

a. சுற்றுலா துறையினை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் பௌத்த வளாகங்கள் மற்றும் இராமாயண யாத்திரை, அதேபோல இலங்கையில் உள்ள புராதனமான பௌத்த, இந்து மற்றும் ஏனைய மதங்களின் வழிபாட்டு இடங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றினை பிரபலமாக்குதல்.

b. இலங்கையின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் புதிய உயர் கல்வி மற்றும் தொழில் திறன் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதன் ஊடாக இருதரப்பிலும் கல்வி சார்ந்த நிறுவனங்களிடையிலான ஒத்துழைப்பினை கண்டறிவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

c. விவசாயம், நீர்வளம், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், நிதி மற்றும் முகாமைத்துவம், சுகாதாரம் மற்றும் மருத்துவம், பூமி மற்றும் சமுத்திர விஞ்ஞானம், சமுத்திரவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவை குறித்தும் அதேபோல வரலாறு, கலாசாரம், மொழிகள், இலக்கியம், மத ரீதியான கற்கைகள் மற்றும் ஏனைய மானிடப் பண்பியல் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்பினை விஸ்தரித்தல்.

d. இலங்கை மற்றும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையினை ஊக்குவிப்பதற்காக திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான தரை மார்க்கமான பிரவேசத்தினை விஸ்தரிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஸ்தாபித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டுகால உறவினை மேலும் அபிவிருத்தி செய்தல். இவ்வாறான தொடர்பினை ஸ்தாபிப்பது குறித்த ஆய்வு மிகவும் கிட்டிய காலத்தில் ஆரம்பிக்கப்படும்.

5. இந்த அடிப்படையில், இப்பரந்த பிராந்தியத்திலும் இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையினை உறுதிப்படுத்துவதற்கான இருதரப்பு ஒத்துழைப்புக்கான முக்கியத்துவமிக்க தருணத்தையும் நீண்டகால மார்க்கத்தினை வழங்குவது மட்டுமல்லாமல் மேம்படுத்தப்பட்ட பரஸ்பர நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைமீது கட்டி எழுப்பப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்திய இலங்கை உறவுக்கான எதிர்கால பாதையினையும் வடிவமைக்கின்ற இந்த பகிரப்பட்ட இலக்கினை துரிதமாக எட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இரு தலைவர்களும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 






No comments: