உலகின் அதிக வெப்பம் நிலவும் மாதம் இது; எதிர்காலத்தில் உஷ்ணம் மேலும் அதிகரிக்கும்!

- நாசா விஞ்ஞானி எச்சரிக்கிறார்

July 23, 2023 7:02 am 

 

இந்த வருடம் ஜூலை மாதம்தான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் உலகின் மிக அதிக வெப்பமான மாதமாக இருக்கும் என்று நாசாவின் முக்கியமான காலநிலை நிபுணர் கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு எச்சரிக்கைத் தகவலையும் கொடுத்துள்ளார் அவர்.

உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் உலகில் அதிக வெப்பம் பதிவான மாதமாக இந்த ஜூலை மாதம்தான் இருக்கும் என நாசா காலநிலை விஞ்ஞானி கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டு இதைவிட உச்சங்களை எட்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகின் சராசரி வெப்பநிலையை 16 பாகை செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 3 ஆம் திகதி உலகின் சராசரி வெப்பநிலை 17.01 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு அதிகரித்தது. அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாக பதிவானது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 பாகை செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதுதான் உலகின் மிக அதிக வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதை மிஞ்சும் வகையில் ஜூலை 3-ஆம் திகதி 17.01 பாகை செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து ஜூலை 4 ஆம் திகதி 17.18 பாகை செல்சியஸ் ஆக பதிவானது. அடுத்து ஜூலை 6 ஆம் திகதி 17.23 பாகை செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவானது. இப்படி ஜூலை மாதத்தில் உலகின் வெப்பநிலை புதிய உச்சங்களை எட்டியது.

இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியது முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. கடுமையான வெப்பத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

நாசாவின் வாஷிங்டன் தலைமையகத்தில் நாசா நிர்வாகி பில் நெல்சன் மற்றும் தலைமை விஞ்ஞானயும் மூத்த காலநிலை ஆலோசகருமான கேட் கால்வின் உள்ளிட்ட காலநிலை நிபுணர்கள் மற்றும் பிற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மூத்த காலநிலை விஞ்ஞானி கவின் ஷ்மிட் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். எல் நினோ ஒரு சிறிய பங்கு வகித்தாலும், நாம் பார்ப்பது ஒட்டுமொத்த வெப்பத்தையே, எல்லா இடங்களிலும், குறிப்பாக கடல்களின் வெப்பம் வெகுவாக அதிகரித்துள்ளது. பல மாதங்களாக, வெப்பமண்டலத்திற்கு வெளியேயும் கூட, கடல் மேற்பரப்பு வெப்பநிலை முந்திய பதிவுகளை முறியடித்து வருகிறது என கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம்தான் மிக அதிக வெப்பமான மாதமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன எனத் தெரிவித்துள்ள ஷ்மிட், தற்போது தனது கணக்கீடுகளின் அடிப்படையில் இதற்கு 50-50 வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். மற்ற காலநிலை விஞ்ஞானிகள் இதற்கு 80 சதவீதம் வரை வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு 2023 ஐ விட அதிக வெப்பமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் எல் நினோ வானிலை முறை – உலகளாவிய வெப்பநிலையை அதிகரிக்கும் போக்குக்கு பெயர் பெற்றது. இந்த ஆண்டின் இறுதியில் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்றும் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.      நன்றி தினகரன் 



No comments: