உலகச் செய்திகள்

 செல்வாக்கு மிக்க கவுச்சீட்டுகளில் சிங்கப்பூர் முதலிடம்

உக்ரைன் செல்லும் கப்பல்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை: கோதுமை விலை அதிகரிப்பு

ஐரோப்பாவில் வெப்ப அலை உச்சம்: ஆசியாவிலும் பாதிப்பு

சீனா, வியட்நாமில் சூறாவளியால் பல்லாயிரம் மக்கள் வெளியேற்றம்

தென் கொரியாவில் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பதையில் இருந்து 9 சடலங்கள் மீட்பு


செல்வாக்கு மிக்க கவுச்சீட்டுகளில் சிங்கப்பூர் முதலிடம்

July 20, 2023 5:03 pm 

உலகில் அதிக செல்வாக்கு மிக்க கடவுச்சீட்டை கொண்ட நாடுகள் பட்டியலில் ஜப்பானை பின்தள்ளி சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகில் வேறு எந்த நாட்டை விடவும் சிங்கப்பூர் நாட்டவர்கள் விசா அனுமதி இன்றி 192 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என ஹேன்லி கடவுச்சீட்டு தரப்படுத்தல் குறிப்பிட்டுள்ளது. 5 ஆண்டுகளாக முதலிடம் பிடித்த ஜப்பான் தற்போது மூன்றாம் இடத்துக்குச் சென்றுள்ளது. அதன் கடவுச்சீட்டை கொண்டு 189 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும். இதில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டு 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும். இந்த வரிசையில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் இருப்பதோடு அந்த நாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி 27 இடங்களுக்கே விசா இன்றி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் தகவலைக் கொண்டு கட்வுச்சீட்டுகள் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





உக்ரைன் செல்லும் கப்பல்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை: கோதுமை விலை அதிகரிப்பு

July 21, 2023 10:43 am 

உக்ரைன் துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல்கள் இராணுவ இலக்குகளாக கருதப்படும் என்று ரஷ்யா எச்சரித்த நிலையில் உலக சந்தையில் கோதுமை விலை வேகமாக அதிகரித்துள்ளது.

உக்ரைனிய தானியங்கள் கருங்கடல் வழியாக பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா இந்த வாரம் வெளியேறியது.

இந்நிலையில் பொதுமக்கள் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு உக்ரைன் மீது குற்றம் சுமத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.

எனினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இந்தத் தானிய உடன்படிக்கைக்கு திரும்ப முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி தெரிவித்துள்ளார். இதில் ரஷ்யாவின் விவசாய வங்கியை உலகளாவிய கொடுப்பனவு அமைப்பு ஒன்றில் இணைக்கும் கோரிக்கையும் உள்ளடங்கும்.

இந்நிலையில் உக்ரைனின் துறைமுக நகரான மைகொலைவ் மீது ரஷ்யா கடந்த புதன் (19) இரவு நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் 18 பேர் காயமடைந்துள்ளனர். மற்றொரு துறைமுக நகரான ஒடெசாவிலும் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை ஐரோப்பிய பங்குச் சந்தையில் கோதுமை விலை முந்தைய நாளிலிருந்து புதன்கிழமை 8.2 வீதம் உயர்ந்து, ஒரு தொன்னுக்கு 253.75 யூரோ ஆக இருந்ததோடு சோளத்தின் விலை 5.4 வீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கோதுமை விலை புதனன்று 8.5 வீதமாக உயர்ந்ததோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து அதிக உச்ச தினசரி அதிகரிப்பாக இது இருந்தது.

ரஷ்ய தாக்குதல்களில் 60,000 தொன் தானியங்கள் அழிந்து தானிய ஏற்றுமதி உட்கட்டமைப்புகளில் கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதாக உக்ரைன் விவசாயத்துறை அமைச்சர் மைகோலா சொல்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா கடந்த செவ்வாய்க்கிழமை தானிய உடன்படிக்கையில் இருந்து வாபஸ் பெற்று சில மணி நேரங்களின் பின் உக்ரைனிய துறைமுகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





ஐரோப்பாவில் வெப்ப அலை உச்சம்: ஆசியாவிலும் பாதிப்பு

July 19, 2023 4:38 pm 

வடக்கு அரைக்கோளத்தின் பெரும் பகுதிகளில் காட்டுத் தீ மற்றும் வெப்ப அலைகள் தாக்கி வரும் நிலையில் மூன்று கண்டங்களில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொடும் என்று அஞ்சப்படுகிறது.

வட அமெரிக்கா தொடக்கம் ஐரோப்பா மற்றும் ஆசியா வரை சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து விலகி இருக்கும்படியும் அதிகம் தண்ணீரை அருந்தும்படியும் சுகாதார தரப்பினர் எச்சரித்து வருகின்றனர்.

பூமியில் மிக வெப்பமான இடங்களில் ஒன்றாக உள்ள கலிபோர்னியாவின் மரண பள்ளத்தாக்கில் கடந்த ஞாயிறு (16) நண்பகலில் வெப்பநிலை 53.3 பாகை செல்சியஸை தொட்டிருந்தது.

கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகருக்கு அருகில் கடும் காற்றினால் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

உலகில் வேகமாக வெப்பமயமாகி வரும் பிராந்தியமாக உள்ள ஐரோப்பா அதிக வெப்பமான காலநிலையை எதிர்கொண்டுள்ளது. இத்தாலியின் சிசிலி மற்றும் சார்டினியா தீவுகளில் வெப்பநிலை 48 பாகை செல்சியஸை தொடும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.

ஐரோப்பாவின் அதிக வெப்பநிலை 2021 ஆம் ஆண்டு 48.8 செல்சியஸாக சிசிலி தீவில் பதிவானமை குறிப்பிடத்தக்கது. சைப்ரஸில் எதிர்வரும் வியாழக்கிழமை வரை வெப்பநிலை 40 பாகைக்கு மேல் இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. வெப்பம் தாக்கி 90 வயது முதியவர் உயிரிழந்திருப்பதோடு மேலும் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் ஷின்ஜியாங் பிராந்திய கிராமமான சன்பாவோவில் 52.2 பாகை செல்சியஸ் என்ற சாதனை வெப்பம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் 47 மாகாணங்களில் 32 இல் வெப்பம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதீத வெப்பத்தால் அமெரிக்காவின் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் 80 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 





சீனா, வியட்நாமில் சூறாவளியால் பல்லாயிரம் மக்கள் வெளியேற்றம்

July 19, 2023 6:04 am 

சீனாவின் தென் பகுதியிலும் வியட்நாமிலும் சூறாவளியால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

தலிம் என்றழைக்கப்படும் அந்த சூறாவளியினால் நூற்றுக்கணக்கான ரயில், விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன.

இந்த ஆண்டு சீனாவை உலுக்கியுள்ள 4ஆவது கடும் புயல் இது என அந்நாட்டு வானிலை ஆய்வகம் கூறியுள்ளது.

குவாங்டோங் மாநிலத்தில் புயல், மழை காரணமாக செம்மஞ்சள் நிற எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 230,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் 8,000 மீன் பண்ணை ஊழியர்களும் அடங்குவர். கரையோரப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

வியட்நாமில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 30,000 பேரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாய் அதிகாரிகள் கூறினர்.   நன்றி தினகரன் 





தென் கொரியாவில் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பதையில் இருந்து 9 சடலங்கள் மீட்பு

July 17, 2023 10:48 am 

தென் கொரியாவின் சியோங்கியு நகருக்கு அருகில் உள்ள சுரங்கப்பாதையில் வெள்ள நீர் நிரம்பி வாகனங்கள் மூழ்கிய நிலையில் அங்கிருந்து ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சில நாட்களாக நீடித்த கடும் மழையை அடுத்தே சுரங்கப் பாதையில் தப்பிக்க முடியாமல் வாகனங்கள் மற்றும் பயணிகள் வெள்ள நீரில் சிக்கியுள்ளனர்.

இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் குறைந்தது 35 பேர் உயிரிழந்திருப்பதோடு நாட்டின் பெரும் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர். இந்நிலையில் 658 மீற்றர் நீளம் கொண்ட சுரங்கப் பாதையில் 15 வாகனங்கள் மூழ்கி இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் தொடர்ந்து எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்பது தெரியாதுள்ளது.

இதில் பஸ் ஒன்றுக்குள் இருந்தே பல சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை (15) ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் மலைப் பிரதேசமான வடக்கு கியோஹ்சான் பிராந்தியத்தில் நிலச்சரிவினால் பல வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாக பல உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

தென் கொரியாவில் வருடத்திற்கு 1,000 தொடக்கம் 1,800 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் நிலையில் கடந்த சனிக்கிழமை மாத்திரம் அங்கு சுமார் 300 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 






No comments: