எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 73 துக்கம் விசாரிப்பதற்கான தாயகப் பயணம் ! ஒரு மாத காலம் சூறாவளிச் சுற்றுலா !! முருகபூபதி


கனடா பயணத்தை நிறைவுசெய்துகொண்டு, கட்டார் மார்க்கமாக எனது தாயகத்திற்கு புறப்பட்டபோது,  எனது நிகழ்ச்சி நிரலை மனதிற்குள் பதிவேற்றிக்கொண்டேன்.

இலங்கையில் நிற்கப்போகும்  சுமார் ஒரு மாத காலத்துள் யார், யாரை சந்திக்கவேண்டும், எத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவேண்டும் என்பது பற்றிய ஒரு பதிவை எனது கணினியில் ஏற்கனவே எழுதி வைத்திருந்தேன்.

இம்முறை  எனது  தாயகப் பயணம் சற்றுவித்தியாசமாகத்தான்


இருக்கும் என்பது  அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்பே எனக்குத்  தெரியும்.

இறுதியாக 2019 ஆம் ஆண்டு இரண்டு தடவைகள் அடுத்தடுத்து இலங்கைக்கு வரநேர்ந்தது.  அதன்பின்னர் கொவிட் பெருந்தொற்று நெருக்கடி வந்தமையால், சுமார் நான்கு ஆண்டுகள் அவுஸ்திரேலியா எல்லையை விட்டு நகரமுடியாமல் இருந்தது.

2023 மே மாதம்  கனடா , கட்டார், இலங்கை பயண ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தவேளையில், எனக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் சிலர் இலங்கை சென்றவேளையில் எதிர்பாராதவகையில் இறந்துவிட்டனர்.

இதில் இருவர் விமானத்திலேயே உயிர் துறந்திருந்தனர்.  ஒருவர் இலங்கைக்கு சென்றவிடத்தில் மரணித்திருந்தார். 

நான் நீண்டகாலமாக நிரிழிவு உபாதையுடனும் இதயம் சம்பந்தப்பட்ட  சிகிச்சைகளுடனும் இயங்குவதனால், எனது நீண்ட பயணம் குறித்த கவலை எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தொற்றியிருந்தது.  

ஒரு சில நண்பர்களின் அறிவுறுத்தலினால்,  பயண காப்புறுதியும்  ( Travel Insurance ) செய்துகொண்டுதான் புறப்பட்டேன்.

கனடாவிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் தமிழர் தகவலின் 32 ஆவது ஆண்டுமலருக்காக அதன் ஆசிரியர் – நண்பர் எஸ். திருச்செல்வம் என்னிடமிருந்து ஒரு ஆக்கம் கேட்டிருந்தார்.

அதன் தலைப்பு :  

மூன்று ஆண்டுகளில் ( 2020- 2021 – 2022 )  விடைபெற்றுவிட்ட எழுத்தாளர்கள் ,   கலைஞர்கள் இலக்கியவாதிகள்,  ஊடகவியலாளர்கள்.  


இக்கட்டுரையை எழுதி முடித்து அனுப்புவதற்கு நீண்டநேரம் செலவிட நேர்ந்திருந்தது.  இதனை எழுதி அனுப்பிவிட்டே கனடாவுக்கு ஜூன் மாதம் 01 ஆம் திகதி புறப்பட்டேன்.

2691 சொற்களைக்கொண்டது அக்கட்டுரை.

  “ மனித வாழ்வில்  பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி. பிறப்பினை கொண்டாடும் மனம்,  இறப்பினை அதன் வலிமிகுதியால்  கொண்டாடத் தயங்குகிறது.

சமூகத்திற்காக எழுதியவர்களும் பேசியவர்களும், பாடியவர்களும் சமூகத்தையும் எழுத வைத்தார்கள், பேசவைத்தார்கள் பாடவைத்தார்கள்.

அத்தகையோரின் நினைவுகளை கொண்டாடுவதன் மூலம்


அவர்களின் ஆன்மா எம்மோடு தொடர்ந்து பயணிக்கிறது என்ற குருட்டு நம்பிக்கையுடன் நாம் நாட்களை கடந்துகொண்டிருக்கின்றோம்.

கடந்த 2020 ஆண்டின் தொடக்கத்திலிருந்து உலகெங்கும் பரவத்தொடங்கிய கொவிட் பெருந்தொற்று ,  எண்ணிலடங்கா மனித உயிர்களை பலியெடுத்துவிட்டது.  அதன் அபாயம் முற்றாக நீங்காத காலத்தில்,  கடந்த 2020 – 2021 – 2022  ஆண்டுகளில்  கொவிட்  பெருந்தொற்றினாலும் உடல் நலக்குறைபாட்டினாலும், வயது மூப்பின் காரணத்தாலும் எம்மிடமிருந்து  அடுத்தடுத்து  நிரந்தரமாக விடைபெற்றுவிட்டவர்களைப் பற்றிய சுருக்கமான நினைவுப்பதிவே இந்தத்  தொகுப்பு.


நினைவுகள் சாசுவதமானவை. அதற்கு மரணமில்லை. “ என்றுதான் அக்கட்டுரையை ஆரம்பித்திருந்தேன்.

இலங்கை வரும்போது குறிப்பிட்ட மூன்று ஆண்டுகளில் மறைந்துவிட்ட எமது இலக்கியவாதிகளினதும் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களினதும் குடும்பத்தினர் – உறவினர்களை முடிந்தவரையில் நேருக்கு நேர் சந்தித்து துக்கம் விசாரித்து ஆறுதல் கூறவேண்டும் என்ற முன்தீர்மானத்துடன்தான்  ஜூன் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இறங்கினேன்.

குறிப்பிட்ட இக்காலப்பகுதியில் எனது உடன்பிறந்த அக்கா உட்பட மேலும் சில குடும்ப உறவினர்களும் இறந்துவிட்டனர். கொவிட் பெருந்தொற்றினால் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் ( மாமா – மாமி – மாமியின் தங்கை ) ஒரு வார காலத்தில் மரணித்திருந்தனர்.

கனடா தமிழர் தகவல் ஆண்டுமலருக்கு  நான் எழுதிய நீண்ட கட்டுரையில் இலங்கையில் மரணித்தவர்கள்  பற்றிய சிறிய குறிப்புகளை எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரை வாசிக்கும் வாசகர்களிடத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

நீர்வை பொன்னையன்  (   1930 -  26 மார்ச்   2020)

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சியிலும் அதன் பின்னர் முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் தோற்றத்திலும் பங்கேற்ற  எழுத்தாளர் நீர்வைபொன்னையன்,  1957 ஆம் ஆண்டில் இலக்கியப் பிரவேசம் செய்தவர்.  தொடர்ந்து சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வந்திருக்கும் இவரது, முதலாவது  சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் 1961 இல் வெளிவந்தது.

அதன்பிறகு சில கதைத் தொகுதிகளையும் கட்டுரைத் தொகுப்புகளையும் வரவாக்கினார்.

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

2017 ஆம் ஆண்டில்  நீர்வை பொன்னையனுக்கு  இலங்கை அரசின் "சாகித்திய ரத்னா" விருது கிடைத்தது.

வயது மூப்பின் காரணமாக தனது 90 ஆவது வயதில் 2020 ஆம் ஆண்டு கொழும்பில் மறைந்தார்.

கலைஞர் ந. கேசவராஜா  ( 1963 - 09  ஜனவரி 2021 )

எழுத்தாளர் , விவரணத் தயாரிப்பாளர் , நடிகர், திரைக் கதையாசிரியர்,  நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டிருந்த கலைஞர் நவரத்தினம் கேசவராஜா  1986-ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதர்சனம்  தொலைக்காட்சி சேவையுடன் இணைந்து பல குறும்படங்களையும், முழுநீளத் திரைப்படங்களையும் இயக்கியவர்.

சிங்கள திரைப்படங்களிலும் பங்கேற்ற கலைஞரான கேசவராஜா, நீடித்த ஈழப்போருக்குப்பின்னரான தமிழ் மக்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரிக்கும் பனைமரக்காடு என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார்.

2021 ஆம் ஆண்டு தமது 58 ஆவது வயதில்  யாழ்ப்பாணத்தில்  மாரடைப்பால்  மறைந்தார்.

“ மல்லிகை  “   ஜீவா                (  1927 – 28  ஜனவரி  2021 )

தமிழில் சிறுகதை இலக்கியத்திற்காக இலங்கையில் முதல் முதலில் தேசிய சாகித்திய விருது பெற்றவரான டொமினிக்ஜீவா, யாழ்ப்பாணத்தில்  1966 ஆம் ஆண்டு முதல் மல்லிகை மாத இதழை வெளியிடத் தொடங்கினார்.

அத்துடன் மல்லிகைப்பந்தல் என்ற பெயரில் பதிப்பகமும் நடத்தி,  ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை வரவாக்கினார்.  ஜீவாவின் சிறுகதைகள் ஆங்கிலம், சிங்களம், ருஷ்ய மொழிகளிலும் வெளிவந்துள்ளன. அத்துடன் அவரது சுயசரிதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தண்ணீரும் கண்ணீரும் , பாதுகை  , சாலையின் திருப்பம்  , வாழ்வின் தரிசனங்கள்,   டொமினிக் ஜீவா சிறுகதைகள் முதலான கதைத் தொகுப்புகளை இலக்கிய உலகிற்கு தந்துள்ள ஜீவா,  சில கட்டுரைத் தொகுப்புகளும் பயண இலக்கியமும்  எழுதியவர், இலங்கையில் தேசத்தின் கண், சாகித்திய ரத்னா, மற்றும் கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதும் பெற்றவர்.

தமது 93 வயதில் கொவிட் பெருந்தொற்றினால், கொழும்பில் 2021 ஆம் ஆண்டு மறைந்தார்.

 

 

செ. கணேசலிங்கன்                  ( 1928 –  04 டிசம்பர் 2021)

 

நாவல், சிறுகதை, கட்டுரை, விமர்சனம் மற்றும்  சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், சினிமா , மொழிபெயர்ப்பு  முதலான  பல்வேறு துறைகளிலும் பெருமளவு எழுதியிருக்கும் செ. கணேசலிங்கன்,  குமரன்  சிற்றிதழையும்  குமரன்  நூல் வெளியீட்டு நிறுவனத்தையும்  நடத்தியிருப்பவர்.

இவரது குமரன் பதிப்பகம் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளது.

அதிகம் நாவல்களை எழுதி அதிகம் கவனத்தையும் பெற்றவர். 

திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் நெருங்கிய நண்பராகவும் விளங்கிய செ. க. ,  கோகிலா என்ற கமல் நடித்த கன்னடப்படத்தின் தயாரிப்பு நிருவாகியாகவும் பணியாற்றியிருப்பவர்.

மார்க்ஸீய சிந்தனையாளராகவே இயங்கி வந்திருக்கும் செ. க. வின் செவ்வானம் நாவலுக்கு பேராசிரியர் கைலாசபதி நீண்ட முன்னுரை எழுதினார். இதுவே பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலாகியது.

கணேசலிங்கன்  பின்னாளில் சென்னை இந்து பத்திரிகை குழுமத்திலும் பணியாற்றினார்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வயது மூப்பின் காரணமாக தமது 93 வயதில் சென்னை வடபழனியில் காலமானார்.

பொலிஸ்  அத்தியட்சர் கே. அரசரட்ணம் (1951- 29 டிசம்பர் 2021 )

பொலிஸார் என்றால் கடுமையான முகத்துடன்தான் இருக்க வேண்டும் என்ற பொதுவான நியதி நிலவுகின்ற சமூகத்தில், எவருடனும் இன்முகத்துடன் பேசும் இயல்பினைக் கொண்டிருந்த கலை – இலக்கிய ஆர்வலர்தான்  பொலிஸ் அத்தியட்சர் கே.  அரசரட்ணம்.

இலங்கையின் வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் மக்களுக்கும் சிங்களம் பேசும் பொலிஸாருக்குமிடையே சுமுகமான உறவை மேம்படுத்துவதற்காக மேலிடத்திலிருந்து 2016 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளில் ஒருவராக அரசரட்ணம் திகழ்ந்தார். இலங்கையில் வீதிப்போக்குவரத்தில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றுக்கு நவீன தொழில்நுட்பங்களின் மூலம் தீர்வு காண்பதற்கும் அவர் முயன்றார். இன்முகத்துடன் பொலிஸ் சேவையாற்றிய அரசரட்ணம், கொழும்பு தமிழ்ச்சங்கத்துடனும் நெருக்கமான உறவைப்பேணியவர்.

இலக்கிய நிகழ்வுகள், நூல் வெளியீடுகள் முதலானவற்றில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் இவர் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் மாரடைப்பால் தமது 70 வயதில் மறைந்தார்.

சிதம்பரப்பிள்ளை சிவகுமார் ( 1962 -  13 ஜனவரி  2022 )

தமிழ்நாட்டின் தரமான இலக்கிய ஏடு கணையாழியிலும் முன்னர் பணியாற்றியிருக்கும்  சிதம்பரப்பிள்ளை சிவகுமார், இலங்கை வானொலி, சக்தி வானொலி - தொலைக்காட்சி முதலானவற்றிலும் காத்திரமான பங்களிப்பினை வழங்கியவர்.  

சிவகுமார்,  யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.  ஈழத்து எழுத்தாளர்களினதும் புகலிட படைப்பாளிகளினதும் ஆக்கங்களுக்கும்  தினமுரசுவில் களம் வழங்கினார்.

இலக்கியத் திறனாய்விலும் ஈடுபட்டு நூல் மதிப்புரைகளையும் எழுதியிருப்பவர்.  ஐரோப்பாவில்  தொடர்ச்சியாக நடந்த  இலக்கிய சந்திப்பு அரங்கு இலங்கையிலும் நடந்தபோது பங்கேற்று உரையாற்றிய கலை, இலக்கிய ஆர்வலர். தமது 60 வயதில் சுகவீனம் காரணமாக  2022 ஆம் ஆண்டு மறைந்தார்.

 “ நடு  “ கோமகன்                   (  ஏப்ரில் 2022 )

கோமகனின் இயற்பெயர் இராஜராஜன். சுறுக்கர் என்ற புனைபெயரையும் கொண்டிருந்தவர். சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நேர்காணல் முதலான துறைகளில் தொடர்ந்து எழுதிவந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட குரலற்றவரின் குரல் நேர்காணல் தொகுப்பு இலக்கியப்பரப்பில் கவனத்தை பெற்றிருந்தது. கோமகனின் தனிக்கதை, முரண் முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் வரவாக்கியிருப்பவர்.

எதுவரை , வல்லினம் ,காலம் ,எக்ஸெல், முகடு, ஜீவநதி, நடு, மலைகள், ஒருபேப்பர், அம்ருதா, தினகரன், தினக்குரல் முதலான இதழ்கள், இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர்.

நெருடிய நெருஞ்சி , வாடா மல்லிகை ஆகிய தலைப்புகளில் பயண இலக்கியங்களும் வரவாக்கியிருப்பவர். சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தல், ஈழத்து, புலம்பெயர், தமிழக படைப்பாளிகளின் ஆக்கங்களை காய்தல் உவத்தலுக்கு இடமின்றி வாசகப் பரப்புக்கு கொண்டு செல்லல், ஒய்வு நிலையில் இருக்கும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளை வெளிக்கொணரல் முதலான நோக்கங்களுடன், பிரான்ஸிலிருந்து 'நடு' என்னும் இணைய இதழையும் வெளியிட்டு வந்தவர்.

சினிமா சிறப்பிதழ் , கிழக்கிலங்கை சிறப்பிதழ் ,மலையக சிறப்பிதழ் முதலானவற்றையும் 'நடு' இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது.  விடுமுறைக்காக  2022 இல் பிரான்ஸிலிருந்து இலங்கை வந்து திரும்புகையில் எதிர்பாராதவகையில் மாரடைப்பு வந்து இயற்கை எய்தினார்.

 

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ( 1944 – 04-ஏப்ரில் -2022 )

இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம் முதலானவற்றில் உறுப்பினராகவும், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவில்  தலைவராகவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிபுணத்துவ ஆலோசகராகவும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ள பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள்,  கொழும்பு பல்கலைக்கழக கல்விப் பீடத்தில் மூன்று தசாப்த காலமாக பணியாற்றி அங்கு  பீடாதிபதியாகவும் உயர்வு பெற்றவர்.

 அத்தோடு ஐக்கிய அமெரிக்காவின் ஓபோன் பல்கலைக்கழகம், ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைதரு பேராசிரியராகவும் கடமையாற்றியவர்.

மலையக மக்கள் மத்தியில் வளரும் தமிழ் மாணவர்களின் எதிர்காலத்திற்காக பிரத்தியேகமான பல்கலைக்கழகம் ஒன்று அங்கே உருவாக வேண்டும் என தொடர்ந்து தமது எழுத்துக்களிலும் உரைகளிலும் வலியுறுத்தி வந்தவர்.  இலங்கை – இந்தியர் வரலாறு, கல்வி இயல் கட்டுரைகள், புதிய நூற்றாண்டுக்கான கல்வி, கல்விச்செயற்பாட்டில் புதிய செல்நெறிகள், மலையக கல்வி:  சில சிந்தனைகள்  உட்பட  சில நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும்  வரவாக்கியிருப்பவர்.

மும்மொழிகளிலும் பொதுவௌியில் பேசும் ஆற்றலும் மிக்கவர். அதனால், மலையக மக்களின் தேவைகளை தமிழ்பேசத் தெரியாத சிங்கள அரசியல் தலைவர்களிடத்திலும்  அவரால் முன்வைக்க முடிந்தது.

கொழும்பில் வசித்துவந்த இவர் 2022 ஆம் ஆண்டு தென்னிலங்கைக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்தவேளையில் மாரடைப்பு வந்து காலமானார்.

தெணியான்               ( 1942 – 22 மே 2022 ) 

கந்தையா நடேசு என்ற இயற் பெயரைக்கொண்டிருந்த எழுத்தாளர் தெணியான், வடபுலத்தின்  அடிநிலை மக்களின் ஆத்மாவை பிரதிபலிக்கும் பல புனைவு இலக்கியங்களை படைத்தவர்.

130 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியிருக்கும் தெணியான், கவிதைகளும் வானொலி நாடகங்களும் எழுதியிருப்பவர்.

கலாபூஷணம் விருது, இலங்கை தேசிய சாகித்திய விருது, தமிழ்நாடு கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை  விருது, கொழும்பு கொடகே விருது, மற்றும் வட இலங்கை ஆளுநர் விருது உட்பட சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருக்கும் தெணியான்,  வடமராட்சி தேவரையாளி இந்துக்கல்லூரியின் பழைய மாணவர். அதே கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வடபிரதேச செயலாளராகவும் இயங்கியிருப்பவர்.

உடல் நலக்குறைவால் 2022 மே மாதம் வடமராட்சி கரவெட்டியில் மறைந்தார்.

சட்டத்தரணி  கே. இராஜகுலேந்திரா  (  1950 – 08  செப்டெம்பர்  2022 )

இலங்கையில் சிரேஷ்ட சட்டத்தரணியாக பணியாற்றிய குழந்தைவேலு இராஜகுலேந்திரா,  கலை, இலக்கிய ஆர்வலருமாவார்.

சிறிது காலம் மத்திய மாகாணசபை உறுப்பினராகவும் இயங்கிய சமூகப் பணியாளருமாவார்.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் நீண்ட கால உறுப்பினரான இராஜகுலேந்திரா,  இச்சங்கத்தின் தலைவராகவும் இயங்கியிருப்பவர்.

கொழும்பில் பல நூல் வெளியீடுகள் மற்றும் இலக்கிய அரங்குகளில் உரையாற்றி வந்திருக்கும் இராஜகுலேந்திரா, மருத்துவ சிகிச்சைக்காக தமிழ் நாட்டுக்கு சென்றவிடத்தில் 2022 செப்டெம்பர் மாதம் இயற்கை எய்தினார்.

கே. எஸ்.சிவகுமாரன்       ( 1936 – 15  செப்டம்பர்    2022 )

கலை, இலக்கியத் திறனாய்வாளராகத்திகழ்ந்த  கே. எஸ். சிவகுமாரன், ஓமான், மாலைதீவு முதலான நாடுகளில் ஆங்கிலப்பாட ஆசிரியராகவும் பணியாற்றியவர்.  இலங்கை வானொலி, ரூபவாகினி தொலைக்காட்சி ஆகியனவற்றில்  செய்தியாளராகவும் இயங்கியிருக்கும் சிவகுமாரன்,  தமிழிலும் ஆங்கிலத்திலும் திரைப்படம், நாடகம் முதலான துறைகள் பற்றி பத்தி எழுத்துக்களும் நூல் அறிமுகங்களும் எழுதிவந்திருப்பவர்.  பல நூல்களின் ஆசிரியர்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றிருக்கும் சிவகுமாரன்,  இலங்கையில் The Island , வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்திலும் பணியாற்றியவர். 

மொழிபெயர்ப்புத்துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்த சிவகுமாரன், Aspects of Culture in Shri Lanka, Tamil Writing in Sri Lanka ஆகிய நூல்களையும் வரவாக்கியவர்.

சுகவீனம் காரணமாக 2022 ஆம் ஆண்டு செப்பெடம்பர் மாதம் கொழும்பில் மறைந்தார்.

 

தெளிவத்தை ஜோசப்       1934 – 21 ஒக்டோபர் 2022)

சந்தனசாமி ஜோசப் என்ற இயற் பெயரைக்கொண்டிருந்தவர்,  மலையகத்தில் தெளிவத்தை என்ற தனது பூர்வீக ஊரையே முன்னிலைப்படுத்தி இலக்கியப்பிரதிகள் எழுதியமையால்   தெளிவத்தை எனவும் அழைக்கப்பட்டார்.

ஆறு தசாப்த காலமாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வந்த இவர்,  தொடக்கத்தில் மலையக தோட்டப் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றினார்.

பின்னர் கொழும்பில் Modern Confectionary Works Ltd  என்ற இனிப்பு – சொக்கலேட்  உற்பத்தி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றியவாறு இலக்கியப்பிரதிகள் எழுதினார்.

சிறுகதை, நாவல்,  விமர்சனம் முதலான துறைகளில் எழுதிவந்திருக்கும் தெளிவத்தை ஜோசப், மலையக சிறுகதை வரலாறு உள்ளிட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியிருப்பவர். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் செயற்பட்டவர்.

இலங்கையில் தேசிய சாகித்திய விருது, தமிழகத்தில் விஷ்ணுபுரம் விருது,  கொழும்பில் கொடகே  வாழ்நாள் சாதனையாளர் விருது  கலாசார அமைச்சின் ‘தேச நேத்ரு’ விருது முதலானவற்றையும் பெற்றிருக்கும் இவர்,   சாகித்திய ரத்னா விருதையும் பெற்றவர்.

இந்தியா ( தமிழ்நாடு ) , இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா  ஆகிய நாடுகளில் நடந்த இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர் ஒன்றுகூடல்களிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.

தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘ நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’ எனும் புதினத்துக்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து  வழங்கிய கரிகாற்சோழன் விருதும் பெற்றவர்.  

2022 ஒக்டோபர் மாதம் வத்தளையில் தமது இல்லத்தில் 88 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.

லெனின் மதிவானம்                ( 1971 – 13 நவம்பர் 2022 )

இலங்கை மலையகத்தின் சிறந்த கல்விமானாகவும்  எழுத்தாளராகவும், ஆய்வாளராகவும் விளங்கிய லெனின் மதிவானம், கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.

இவர்  இலங்கை இதழ்களிலும் புகலிட இணைய இதழ்களிலும் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருப்பவர்.  கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள்   பிரதி ஆணையாளர்.  இவர் எழுதிய
திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்
ஊற்றுக்களும், ஓட்டங்களும். இதில் மலையக மக்களுக்காக உழைத்த மீனாட்சி அம்மாள் முதல் சோவியத் இலக்கிய மேதை மாக்ஸிம் கோர்க்கி வரையில் பல ஆளுமைகள் பற்றி ஆய்வுக்கண்ணோட்டத்தில் எழுதியிருந்தார்.

மலேசியத் தமிழரின்  சமகால வாழ்வியல் பரிமாணங்கள், மலையகம் தேசியம் சர்வதேசம், உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல், பேராசிரியர்  கைலாசபதி : சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல் முதலான நூல்களும் லெனின் மதிவானம் அவர்களின் ஆய்வாற்றலுக்கு சிறந்த சான்றுகள்.  சிறிது காலம் நோய் உபாதைகளினால் பாதிப்புற்றிருந்த இவர் 2022 நவம்பர் மாதம் இயற்கை எய்தினார்.

சங்கீதபூஷணம் ஏ. கே . கருணாகரன்  ( 1945 – 19 நவம்பர்  2022 )

தனது ஆரம்ப பாடசாலைக் காலத்திலேயே இசையில் ஆர்வம்கொண்டிருந்த ஏ. கே. கருணாகரன்,  1961 இல் யாழ்.  இராமநாதன் இசைக் கல்லூரியில்  சேர்ந்து பயிற்சி பெற்று சங்கீதரத்தினம் பட்டம் பெற்றார். பின்னர் சென்னையில் தமிழக  அரசின் இசைக் கல்லூரியில்  தொடர்ந்து கற்று, சங்கீத வித்துவான், மற்றும் இசை கற்பிப்பதில் டிப்ளோமா பட்டமும் பெற்றார்.

1969 முதல் இலங்கை வானொலியில்   இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும்,  தொடர்ந்து தமிழ் சேவையின் இசைக் குழுவின் தலைவராகப் பணி உயர்வு பெற்றார்.

இராமநாதன் இசைக்கல்லூரி  யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டபோது, 1979 ஆம் ஆண்டு முதல்,  பத்து ஆண்டுகள் அங்கே  போதனாசிரியராகவும்  பணியாற்றினார்.

1989 இல்  சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் இசை ஆசிரியராகப் பதவி பெற்றார்.  தனது  ஆளுமைப் பண்புகளினால் அங்கே பல மாணவர்களை உருவாக்கிய பின்னர்  2002 ஆம் ஆண்டு தாயகம்  திரும்பினார்.

அதனையடுத்து   கிழக்கு பல்கலைக் கழகத்தின்  சுவாமி விபுலானந்தா இசை நடன நாடகக் கல்லூரியில்   இசைத்துறை  விரிவுரையாளராக நான்கு ஆண்டுகள்  பணி புரிந்துவிட்டு,  மீண்டும் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் 2011 முதல் இசை விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தார்.

கலைஞர்,  இசைப்பேராசான் கருணாகரன் கர்நாடக இசையை மேலும் வளர்ப்பதற்காகவும்  பல இளம் கலைஞர்களை உருவாக்கி ஊக்குவிப்பதற்காகவும் ஆலாபனா எனும் இசைக் கழகத்தை  பல ஆண்டுகளாக கொழும்பில் நடத்தி வந்தார். சங்கீதானுபவம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

தேசநேத்ரு விருது ,  வடமாகாண முதலமைச்சர் விருது முதலானவற்றை பெற்றிருக்கும் ஏ. கே. கருணாகரன் தமது 77 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

 

வில்லிசைக்கலைஞர் விஜயநாதன்  ( மறைவு 20 டிசம்பர் 2022 ) 

இலங்கையில் புகழ்பெற்ற கலைஞர் சின்னமணியின் வில்லிசைக்குழுவில்  பக்கப்பாட்டு கலைஞராகவும் நகைச்சுவை நடிகராகவும் திகழ்ந்த அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன், மக்களின் மனம் கவர்ந்த கலைஞராகத் திகழ்ந்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் தோன்றியிருக்கும் விஜயநாதன்,  வில்லிசைக்கலையை  கிராமங்கள் முதல் மாநகரம் வரையில் மக்களிடம் பரப்பியவர்.

இவரது நிகழ்ச்சிகள் இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நடந்துள்ளன.  விஜயநாதன்  2022 டிசம்பர் 20 ஆம் திகதி அச்சுவேலியில் மறைந்தார்.

தவிர, இலக்கிய நண்பர்கள்  அ. யேசுராசா,  சட்டத்தரணி சோ. தேவராஜா ஆகியோரின் அன்புத்துணைவிமார், இலக்கிய விமர்சகர் ராஜேஷ் கண்ணனின் செல்வப்புதல்வன் ஆகியோரும் இக்காலப்பகுதியில் மறைந்தனர். 

இவர்களையடுத்து, வடமராட்சியில் எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன், வவுனியாவில் ஊடகவியலாளர் மாணிக்கவாசகம்,  பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் ஶ்ரீதரசிங்கின் தாயார் திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் ஆகியோரும் மறைந்தனர். 

இவர்களின் உறவுகளை இந்தப்பயணத்தில் சந்திக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன்தான் அன்றையதினம் ( ஜூன் மாதம் 22 ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கினேன்.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

 

                                                           

 

 

  




No comments: