இந்தியாவின் நிலைப்பாடு

 July 23, 2023

இந்தியாவின் தலையீட்டைக் கோரி நான்கு கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியிலிருந்து மூன்று கடிதங்களும், சிவில் சமூகத்திடமிருந்து ஒரு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.
கட்சிகளை பொறுத்தவரையில், ஒப்பீட்டடிப்படையில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து அனுப்பிய கடிதத்தில், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயம் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஏனைய கட்சிகளான, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (முன்னணி) மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியவை, இந்தியா சமஷ்டியை வலியுறுத்தவேண்டுமென்று, கோரியிருந்தன.
ஆனால் சிவில் சமூகத்தின் கடிதம் ஒன்றுதான், மிகவும் தெளிவாகவும், இந்தியாவின் அயலுறவுக் கொள்கை தொடர்பான புரிதலுடன் முன்வைக்கப்பட்டிருந்தது.
சிவில் சமூகம் சுட்டிக்காட்டியவாறு, இந்தியா அதன் நிலைப்பாட்டை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியிருக்கின்றது.

அதாவது, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் கடப்பாட்டை இலங்கை நிறைவேற்றுமென்று தாம் எதிர்பார்ப்பதாக, இந்திய பிரதமர், நரேந்திர மோடி தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு ஆச்சரியமானதல்ல.
இது – இந்தியாவின் கொள்கை நிலைப்பாடாகும்.
ஆனால் இதனை விளங்கிக்கொண்டு செயலாற்றுவதில்தான் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் என்போர் தொடர்ந்தும் பின்நிற்கின்றனர்.
ஒரு நாட்டின் அழுத்தங்களை கோரும்போது, அந்த நாட்டின், அயலுறவுக் கொள்கை தொடர்பான தெளிவு இருக்கவேண்டியது கட்டாயமானது.

ஆனால் அனுபவமுள்ள தலைவரென்று கருதப்படும் இரா.சம்பந்தன், தொடர்ந்தும் ஏன் தவறிழைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதைத்தான் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது.
இந்தியாவின் தலையீட்டைக் கோரிய சிவில் சமூக பிரதிநிதிகளிடம் இருக்கின்ற தெளிவு, ஏன் கட்சிகளிடம் இல்லாமிலிருக்கின்றது? அல்லது, தமிழ் மக்களுக்கு எந்தவொரு அரசியல் தீர்வும் கிடைத்துவிடக்கூடாதென்பதில் கட்சிகளின் தலைவர்கள் என்போர் உறுதியாக இருக்கின்றனரா? இந்திய பிரதமரின் தெளிவான செய்தி ஒரு விடயத்தை தெளிவுபடுத்துகின்றது.

அதாவது, இந்தியாவை நோக்கி சமஷ்டியை வலியுறுத்தியவர்கள், இந்தியாவுக்கு வரலாறு போதிக்க முற்பட்ட சம்பந்தன் ஆகியோரது, வேண்டுகோள்கள் புதுடில்லியால் கண்டுகொள்ளப்படவில்லை.
உண்மையில் அவைகளை ஒரு பொருட்டாகக்கூட புதுடில்லி கருத்தில் கொள்ளவில்லை.
உண்மையில், இந்தியாவிடம் சமஷ்டியை கோரி, கடிதங்கள் எழுதுவதை இந்தியா ஒருபோதும் வரவேற்காது-மாறாக, தங்களுக்கு தேவையற்ற வகையில் இராஜதந்திரச் சங்கடங்களை ஏற்படுத்துவதாகவே அவர்கள் நோக்குவார்கள்.

ஏனெனில், ஒரு நாடு, அதன் நிலைப்பாட்டை முன்வைத்த பின்னர், அதற்கு மாறான கோரிக்கைகளுடன் செல்வதானது, அந்த நாட்டின் அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே சுட்டிக்காட்டும்.
அவர்கள் வலியுறுத்தும் ஒன்றின் மூலம் சென்று, அதிலிருந்து, முன்னோக்கிச் செல்ல முற்பட்டால் – அது சரியானதாகும்.
இதுவரை இந்தியாவை அணுகியவர்களில், அண்மையில் முன்னெடுக்கப்பட்ட சிவில் சமூக முன்னெடுப்பு ஒன்றுதான், இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை புரிந்து கொண்டு, முன்னெடுக்கப்பட்ட ஒரேயொரு நகர்வாகும்.
அந்த வகையில் சிவில் சமூகத்தின் தலையீடு அதன் இலக்கை நிறைவு செய்திருக்கின்றது. இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது.
இனியாவது, இதனை புரிந்துகொண்டு, செயற்படுதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும்.


நன்றி ஈழநாடு 

No comments: