அமரர் சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு நினைவை இன்று கொண்டாடும் கரவெட்டி மக்கள்

 July 20, 2023 4:04 pm 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் உடுப்பிட்டி, நல்லூர் தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் முருகேசு சிவசிதம்பரத்தின் பிறந்ததின நூற்றாண்டு நினைவை முன்னிட்டு அவரின் சொந்த ஊரான வடமராட்சி, கரவெட்டி மக்களின் சார்பில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் இன்று வியாழக்கிழமை மாலை அங்குள்ள மகேசன் விளையாட்டரங்கில் விழாவொன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

அவரின் அரசியல் வாழ்வை விபரிக்கும் ‘தலைவர் சிவா 100’ என்ற ஆவண நூலும் வெளியிட்டு வைக்கப்படுகிறது.

சிவசிதம்பரத்தை ‘சிவா’ என்றே எல்லோரும் அன்புடன் அழைப்பர். அவர் கரவெட்டியின் அடையாளங்களாக விளங்கிய மகத்தான ஆளுமைகளில் ஒருவர். சிவாவை நினைவு கூருவது என்பது சுமார் அரை நூற்றாண்டு காலமாக தமிழர் அரசியலை ஆகர்சித்திருந்த பெருந்தலைவர்களில் ஒருவரின் நினைவை மீட்டுவது என்பதற்கு அப்பால், கரவெட்டி மக்களைப் பொறுத்தவரை தங்கள் மத்தியில் வாழ்ந்த ஆளுமையின் நினைவை கொண்டாடுவதாக அமைகிறது.

இன்றைய பெரும்பாலான அரசில்வாதிகளுடன் ஒப்பிடும்போது சிவா போன்று அரசியல் வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் நேர்மையும் கண்ணியமும் கொண்ட தலைவர்கள் எம்மத்தியில் இருந்தார்கள் என்பதை இன்றைய இளம் சந்ததி நம்ப மறுக்கவும் கூடும்.

அரசியலில் கொள்கை வேறுபாடு கொண்டவர்கள் கூட சிவா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள்.

தனது இளமைக்காலத்தில் கம்யூனிசக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்ட சிவா, தமிழ் மக்களுக்கு எதிரான இனரீதியான பாகுபாடுகள் தீவிரமடையத் தொடங்கியதையடுத்து தமிழ்த் தேசியவாத கொள்கைகளை தவிர்க்க முடியாமல் தழுவிக் கொண்டார். தமிழ் மக்களின் உரிமைப் போராடடத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலில் பாராளுமன்றத்துக்கு தெரிவானபோதிலும், சிவா தமிழர்களின் ஐக்கியம் என்று வரும்போது கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதை 1961 இலங்கை தமிழரசுக் கட்சி முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டத்திலும் 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் உருவாக்கத்திலும் அவரின் முழுமையான பங்கேற்பு பறைசாற்றியது.

பதவிகளைப் பெறுவதில் சிவா ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. அவர் வகித்த பதவிகள் எல்லாமே அவரை தேடிவந்தவை. மற்றவர்களுக்கு பதவிகளை விட்டுக்கொடுப்பது என்று வரும்போது அதைச் செய்வதில் முதல் ஆளாக சிவா விளங்கினார். தன்னை முன்னிலைப்படுத்தும் அரசியலையும் சிவா ஒருபோதும் செய்ததில்லை.

ஒரு கட்டத்தில் தமிழ் காங்கிரஸ் மீதான சிவாவின் கட்டுப்பாடு அவரின் கைகளை விட்டுச் செல்கின்ற நிலை ஏற்பட்டபோது கூட, அவர் கவலைப்படவில்லை. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஐக்கியப்பட்டு முன்னெடுப்பதற்கு அப்பால் தனக்கு வேறு எந்த அரசியல் நலனும் கிடையாது என்பதே சிவாவின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. தனது இறுதி மூச்சுவரை அவர் அந்த நிலைப்பாட்டைக் கைவிடவில்லை.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் தமிழர்கள் மத்தியில் ஐக்கியம் முன்னென்றும் இல்லாத அளவுக்கு அவசியப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசியவாத அரசியல் சக்திகள் பல்வேறு அணிகளாக சிதறுண்டு கிடக்கின்ற கவலைக்குரிய நிலையை பார்க்கின்றபோதுதான் சிவாவின் அரசியலும் இனப்பற்றும் எத்தகைய உயர்வானவையென்பது தெளிவாகத் தெரிகின்றது.

இளையதம்பி இராகவன் 

நன்றி தினகரன் 






No comments: