மோடி தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி பாராட்டு; உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பு
கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் போர்க்கப்பல்
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர் அதானியுடன் ஜனாதிபதி சந்திப்பு
மதுரையிலிருந்து-யாழுக்கு விரைவில் விமான சேவை
யாழில் ஆரம்பிக்கப்படும் வரை ஏற்பாடு; சபையில் அமைச்சர் டிரான் அலஸ் வட பகுதி மக்களுக்கு குருநாகலில் சேவை NIC ஒரு நாள் சேவை
மோடி தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி பாராட்டு; உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பு
- விமான, கப்பல் சேவைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று (21) சந்தித்தார்.
இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று (20) இந்தியா சென்ற அவர் இச்சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இதன்போது! பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட இந்தியாவின் ஆச்சரியமளிக்கும் வகையிலான பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்பில் பாராட்டுகளைத தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என ஜனாதிபதி இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின், ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ள இந்தியாவிற்கான தனது முதல் விஜயத்தின் போது, அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் கடினமான காலங்களில், இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கம், இந்திய மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்தார்.
குறித்த முயற்சிகள் தொடர்பில் பிரதமர் மோடி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்தார்.
இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக அமுல்படுத்தி வருவதாகவும், இந்தியப் பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய-இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை இங்கு வலியுறுத்தினார்.
இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமான சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இங்கு கலந்துரையாடினர்.
இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி விக்ரமசிங்கவின் இந்திய விஜயம், இரு தரப்பு நம்பிக்கையை வலுப்படுத்துவதையும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதையும், இலங்கை – இந்திய உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிக திறன் கொண்ட மின் கட்டமைப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்படுவதால், தடையற்ற இருவழி மின்சார வர்த்தகத்தை எளிதாக்குகிறது. அத்துடன், இது பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியையையும் ஊக்குவிக்கும்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், தனது இந்திய விஜயம் நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். போட்டிமிகு உலகில் பரஸ்பர சுபீட்சத்தை நோக்கமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான புவியியல் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தலைமன்னார் – இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மேலும் ஊக்கமளிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை உருவாக்கவும் தற்போதுள்ள வரலாற்று உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இந்தியாவும் இலங்கையும் கவனம் செலுத்தியுள்ளன. அதனை செயற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வினை மேற்கொள்வதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்திய ஊடகங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
நன்றி தினகரன்
கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் போர்க்கப்பல்
-195 பேர் பணியாற்றும் கப்பல், 151 மீற். நீளமானது
ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையணிக்குச் சொந்தமான (Japan Maritime Self-Defense Force) ‘SAMIDARE (DD-106)’ என்றழைக்கப்படும் போர்க்கப்பல் நேற்று முன்தினம் (20) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக, இலங்கை கடற்படை தெரிவித்தது.
இந்த ஜப்பானியக் கப்பலை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர். 151 மீற்றர் நீளமுள்ள இந்த போர்க்கப்பலில் 195 பேர் பணியாற்றுகின்றனர். இந்தக் கப்பல் இம்மாதம் 29ஆம் திகதியன்று நாட்டிலிருந்து புறப்படத் திட்டமிட்டுள்ளது.
இந்த விஜயத்தில் ‘SAMIDARE (DD-106)’ கப்பலின் கட்டளை அதிகாரி, தளபதி OKUMURA Kenji மற்றும் Flag Officer, ரியர் அட்மிரல் NISHIYAMA Takahiro ஆகியோர் வந்துள்ளனர்.
இந்தக் கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கிடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் பல நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். கப்பல் புறப்படும் போது, கொழும்பிலிருந்து இலங்கை கடற்படைக் கப்பலுடன் புகைப்படக் காட்சியில் பங்கேற்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர் அதானியுடன் ஜனாதிபதி சந்திப்பு
- இலங்கையில் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசியதாக கௌதம் அதானி தெரிவிப்பு
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று (21) காலை புதுடெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இந்தியாவுக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) இந்தியா சென்றடைந்திருந்தார்.
புதுடில்லி சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதுடில்லி விமான நிலையத்தில் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வீ. முரளிதரனினால் வரவேற்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கௌதம் அதானிக்கும் இடையே சந்திப்பொன்று புது டில்லியில் இன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தனது சமூக வலைத்தள கணக்குகளில் (Twitter, Threads) பதிவிட்டுள்ள கௌதம் அதானி, பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
நன்றி தினகரன்
மதுரையிலிருந்து-யாழுக்கு விரைவில் விமான சேவை
-இந்திய ஊடகங்களில் செய்திகள்
இந்தியாவின் மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமான சேவைகள் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. விமான சேவையை வாரத்துக்கு 07 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை – கொழும்புக்கிடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்புக்கு நேரடி விமான சேவையை, ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
யாழில் ஆரம்பிக்கப்படும் வரை ஏற்பாடு; சபையில் அமைச்சர் டிரான் அலஸ் வட பகுதி மக்களுக்கு குருநாகலில் சேவை NIC ஒரு நாள் சேவை
தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவையை வடக்கில் ஆரம்பிக்கும் வரை குருநாகல் மாவட்டத்தில் வடக்கு மக்கள் தமக்கான ஒருநாள் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வவுனியாவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், வவுனியாவில் அதற்கான பௌதீக வளம் கிடையாது. எனினும், இந்த ஆண்டின் இறுதியில் குருநாகல் மாவட்டத்தில் இடம் பெறவுள்ள தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வடக்கு மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை கேள்வி நேரத்தின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒருநாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு வட மாகாணத்திலிருந்து 05 வீதமானோரே வருகை தருகின்றனர். நிறைவடைந்த 06 மாத காலப்பகுதியில் தேசிய ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவை ஊடாக அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு 1,12,596 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள். அவற்றில் 4,968 விண்ணப்பங்களே வட மாகாணத்தைச் சேர்ந்தவை.வடக்கில் வவுனியா பிரதேச செயலகத்தில் தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒருநாள் சேவையை வவுனியாவில் ஆரம்பிக்க அங்கு பௌதீக வளங்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், வட மாகாணத்தின் ஒரு பிரதேசத்தில் ஒருநாள் சேவை விநியோகத்தை ஆரம்பிக்க கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் குருநாகல் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை நடத்தப்பட உள்ளது. அதற்கிணங்க வட மாகாணத்தில் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் வரை வடக்கு மாகாண மக்கள் குருநாகல் மாவட்டத்துக்கு வருகை தந்து அந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment