சிட்னியில் இந்து மகளிர் கல்லூரி OGA நடாத்திய மலரும் மாலை 2023 - செ .பாஸ்கரன்

 .யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் நடாத்திய மலரும் மாலை 2023. கடந்த சனிக்கிழமை 11 3 2019 இல் அவுஸ்ரேலியா சிட்னியிலே Silver Water இல் அமைந்திருக்கும் பகாய் சென்ரர் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. வருடம் தோறும் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் நடத்துகின்ற நிகழ்வுகள் பல வருடங்களாக சினியிலே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பழைய மாணவிகள் தலைமை தாங்கி நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருப்பார்கள். இம்முறை இந்த பழைய மாணவிகள் சங்கத்தை தலைமை தாங்கிச் சென்றவர் திருமதி ஸ்ரீமாதங்கி சாந்தகுமார் அவர்கள்.


நிகழ்ச்சி குறிப்பிட்டது போல் சரியாக ஆறு மணிக்கு இடம்பெற்றது. அதற்கு முதலிலேயே வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். நிகழ்ச்சியை செல்வி அபர்னிகா ஜதி சிவசாமி யும் செல்வன் ஆதித்தன் கிரிந்தன் அவர்களும் ஆரம்பத்தில் அழகாக தொகுத்து வழங்கினார்கள். மங்கள விளக்கு ஏற்றலை மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளில் ஒருவரும், ஆசிரியரும், இந்த மன்றத்தின் போசகருமான திருமதி கனகாம்பிகை ஜெகநாதன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து, தேசிய கீதம் என்பவற்றை பழைய மாணவிகளின் பிள்ளைகளான செல்வி அபர்னிகா ஜதி சிவசாமி , செல்வி பிரணவி சண்முகதாஸ் செல்வி தாரகா சண்முகராஜன் ஆகியோர் மிக அருமையாக பாடி ஆரம்பித்தார்கள். கல்லூரி கீதத்தை இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகளான திருமதி கீதா ரட்ணசீலன் , Dr பூர்ணிமா முருகன் , சுதா சிவசாமி மற்றும் கலைச்செல்வி குகஸ்ரீ ஆகியோர் பாடினார்கள் அதனை தொடர்ந்து வரவேற்பு உரையை திருமதி ஸ்ரீமாதங்கி சாந்தகுமார் அவர்கள் சுருக்கமாகவும் பல விடயங்களை பற்றியும், சங்கம் செய்து கொண்டிருக்கின்ற சேவைகள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து பல மேடைகளில் தன் இனிய குரலால் சபையோரை கவரும் மகேஸ்வரன் பிரபாகரன் அறிவிப்பாளராக மேடையில் தோன்றி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். இன்னிசை நிகழ்ச்சி கணா தீபன் இசை குழுவினருடன் இந்த இன்னிசை நிகழ்ச்சி ஆரம்பமானது. இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த பாடகர் பிரசாந்த் கே அவர்களுடன் உள்ளூர் பாடகர்களும், பாடகிகளும் இணைந்து இந்த இன்னிசை நிகழ்ச்சியை வழங்கினார்கள்.

கணா தீபன் அவர்களுடைய இசைக் குழுவில் சிட்னியிலே இருக்கின்ற இளம் இளைஞர்களும், யுவதிகளும் இணைந்து பல இசைக்கருவிகளை மீட்டினார்கள். ஒருவர் ஒரு இசை கருவியை மட்டுமல்ல பல இசைக் கருவிகளை மாறி மாறி மீட்டியது பார்க்க பரவசமாக இருந்தது. பாடகர்களாகவும் இசை வல்லுனர்களாகவும் அவர்கள் செயற்பட்டதை பார்க்க இளம் தலைமுறையினர் இசையில் தங்களுடைய ஆர்வத்தைக் காட்டுவது புரியக்கூடியதாக இருந்தது.


இசை நிகழ்வு ஆரம்பித்தபோது மலரே மௌனமா என்ற பாடலோடு இசை நிகழ்வு ஆரம்பமானது. சிட்னியிலே பல காலம் பல மேடைகளில் பாடியவரான காவியா இந்த பாடலை பாடியிருந்தார். அதோடு இது ஒரு நிலாக்காலம் என்ற பாடலும் தொடர்ந்தது அதனை தொடர்ந்து வயலின் இசையிலே பல மேடைகளிலே ரசிகர்களையெல்லாம் கவர்ந்தவரும், பாடகர் பாவலன் அவர்களுடைய மகளுமான அகல்யா பாவலன் மன்னவன் வந்தானடி என்ற பாடலை பாடிய போது மண்டபத்திலே அமர்ந்திருந்தவர்கள் எல்லோருமே இசையில் கட்டுண்டு கிடந்தார்கள். மிக அருமையாக அந்தப் பாடல் அமைந்திருந்தது அதை தொடர்ந்து இலங்கையிலே இருந்து வருகை தந்திருந்த சக்தி டிவி சூப்பர் சிங்கர் புகழ் பிரகாஷ் கே அவர்கள் பொன்னிநதி பார்க்கணுமே என்ற பாடலோடு மேடைக்கு வந்து அசத்தினார்.

மீண்டும் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் என்ற பாடலை மிகவும் அருமையாக பாடினார் அது மக்கள் எல்லோரையுமே சந்தோஷப்படுத்தியது என்று கூறினால் அது மிகையாகாது. எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய அந்தப் பாடலை பிரகாஷ் கே பாடிய போது எங்கே ஒரு குட்டி எஸ் பி பி மேடைக்கு வந்து விட்டாரோ என்று எல்லோருமே அவரை உற்றுப் பார்த்தார்கள் அவ்வளவு அழகாக எஸ்பிபி அவர்களுடைய குரலிலே அந்த பாடலை தந்ததும் சபையைக் கட்டி போட்டதும் மிக அருமையாக ரசிக்க கூடியதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு இனிய பாடல் யார் இந்த தேவதை என்ற பாடல் இந்த பாடலை நயனி அவர்களும் இரண்டு குழந்தைகளான யாழினி செல்வராஜா நிக்ஷா இனிநிமலன் ஆகியோர் இணைந்து பாடியிருந்தார்கள். இந்த பாடல் பாடிய போது நயனி அவர்களது குரல் அவருடைய ஒலி வாங்கியில் சற்று குறைவாகவே வெளிவந்தது என்று நினைக்கின்றேன் சபையோரால் அந்தக் குரலை பெரிதாக கேட்க முடியாமல் இருந்தது என்னவோ வருத்தத்துக்குரியது தான்.அதனைத் தொடர்ந்து பழைய மாணவிகள் இந்து கல்லூரியின் முன்னை நாள் ஆசிரியர்கள் சிலரை  கவுரவித்தார்கள் அந்த கௌரவிப்பு நிகழ்வு கல்லூரி பழைய மாணவிகள் தங்களுடைய தமிழ் பண்பாட்டினை எடுத்து காட்டியது.


பின்பு மீண்டும் பாடல்கள் ஆரம்பமாகியது இசை நிகழ்வு என்றாலே வருகை தருகின்ற மக்கள் எல்லோருமே இசையை ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தான் வருவார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும் அந்த வகையிலே கவிதை கேளுங்கள் என்ற பாடலை மீண்டும் அகல்யா பாவலன் அவர்கள் பாடினார்கள் அதை அடுத்து ஒலித்த பாடல் மச்சானை பாத்திங்களா என்ற பாடல் இந்த பாடலை பாட வந்தவர் சௌமியா என்ற ஒரு இளம் பெண் இவர் கேரளத்தைச் சேர்ந்தவர் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கதைத்தார் ஆனால் மச்சானை பாத்திங்களா என்ற பாடல் இளையராஜாவின் இசையிலே ஒலித்த அந்தப் பாடலை மிக அற்புதமாக பாடியிருந்தார். சபை எங்கும் பலத்த கரகோஷம் கிடைத்தது. அதன் பின்பு இசைக் குழுவின் தலைவர் கணா அவர்கள் ஒரு பாடலை கொடுத்திருந்தார். நீ என்னை நீங்காதே என்ற பாடல் தான் அந்த பாடல். இப்படி தொடர்ந்து பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.
இன்னும் ஒரு பாடலாக மாங்கல்யம் தந்து நானே என்ற ஒரு பாடலை பபிதா சுதன் மோகனசுந்தரம் ஆகியோர் பாடியிருந்தார்கள் அதனைத் தொடர்ந்து மீண்டும் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த அந்த இளைஞரான கே பிரகாஷ் அவர்கள் இளமை இதோ இதோ என்ற பாடலோடு நுழைந்தார் மிக அற்புதமாக இருந்தது ஆச்சரியப்படும் படியாக எஸ்பி பாலசுப்ரமணியத்தினுடைய குரல் அவருடைய குரலாக காணப்பட்டது மிக நன்றாகவே உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் ஆட்டம் என்ன பாட்டு என்ன என்று தனி ஒருவராகவே அனைத்தையும் செய்து கொண்டார்.


அதனை தொடர்ந்து இடைவேளை கொடுக்கப்பட்டது இடைவேளையின் போது சுவையான உணவுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள் எல்லோரும் வெளியே போய் உணவுகளை அருந்திவிட்டு மீண்டும் மண்டபம் நுழைந்தார்கள்

அறிவிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன் அவர்கள் பிரகாஷ் கே அவர்களோடு உரையாடினார் அவரைப் பற்றிய விடயங்களை எல்லாம் மக்களுக்காக கேட்டு அறிந்து கொண்டார். அவர் பாடிய பாடல் உன்னை காணாத, உன்னை காணாத என்ற விஸ்வரூபம் பட பாடல் இவருக்கு வெற்றியை எட்டிக் கொடுத்த பாடல் அந்தப் பாடலை அந்தக் கணத்திலேயே பிரபாகரன் கேட்டபோது எந்த ஆயத்தமும் இல்லாமல் அங்கே பாடினார் மிக அற்புதமாக இருந்தது ஒரு சில வரிகள் மாத்திரமே பாடினாலும் கூட நம்மையெல்லாம் நன்றாக கவர்ந்திருந்தது.அதேபோல் இசை குழுவினர் கூட இந்த பாடலுக்கு ஆயத்தப்படுத்தாமல் இருந்தபோதும் கூட மிக அருமையான இசையை வழங்கினார்கள்.


இதனை தொடர்ந்து பிரகாஷ் பபிதாவோடு இணைந்து பாடிய பாடல் அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அருமையான பாடல் மெலோடி பாடல்கள் எப்போது வரும் என்று ஏங்கிக் கொண்டே இருந்த சபையினருக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பாடல். இந்த பாடலில் எப்படி பிரகாஷ் கே மக்களை உற்சாகப்படுத்திக் கொண்டு கவர்ந்து கொண்டிருந்தாரோ அதேபோல் அவருக்கு தானும் சளைத்தவர் அல்ல என்பதைப் போல அதற்கு மேலே பபிதா மிக அருமையாக இந்த பாடலை பாடியிருந்தார் எல்லோருடைய கரகோஷமும் மண்டபத்தை நிறைத்தது. மிக அருமையான பாடலாக அமைந்திருந்தது அந்த பாடல்.


இப்படியே பாடல்கள் நிகழ்ச்சி தொடர்ந்து சென்று கொண்டிருந்த போதும் இடையிலே சில சில அறிவிப்புக்கள் குறிப்பாக அண்மையிலே மறைந்த பாடகி வாணி ஜெயராம் அவர்களுக்காக ஒரு சிறிய நினைவு இசையை வழங்கியிருந்தார்கள் அதைத் தொடர்ந்து எனக்கொரு காதலி இருக்கின்றாள் என்று கணன் அவரோடு சேர்ந்து குமார் அவர்களும் அந்தப் பாடலை பாடியிருந்தார்கள் இப்படியே பாடல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது.


கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்ற இனிமையான பாடல் கே பிரகாஷ் அவர்களோடு சேர்ந்து நயனி வழங்கிக் கொண்டிருந்தார்கள் அற்புதமாக இருந்தது அவர்கள் தாங்கள் பாடியது மட்டுமல்ல பிரகாஷ் கே அவர்கள் சபையோரையும் பாடும்படி கேட்க சபையும் உற்சாகமாக சேர்ந்து பாடினார்கள். அந்த பாடல் எல்லோரையுமே கவர்ந்து இருந்தது மட்டுமல்ல உற்சாகத்தையும் சபை முழுவதும் நிரப்பி இருந்தது.கண்ணோடு காண்பதெல்லாம் என்ற ஒரு பாடல் அந்த பாடல் சௌமியா காவியா என்ற இரண்டு சிட்னியிலே மிகவும் அறிமுகமான பாடகிகள் பாடியிருந்தார்கள் அடுத்து ஒரு புதுமையான நிகழ்வாக ஒரு நிகழ்வு இடம்பெற்றது, சிட்னியிலே இது முதல் தரமாக இடம்பெற்றதாக பார்க்கக் கூடியதாக இருந்தது. அத்தனை இசைக்கருவிகளையும் பெண்களே இசைக்க பெண்களே பாடல்களையும் பாடினார்கள். முழுக்க முழுக்க பெண்களே அந்த மேடையிலே அமர்ந்திருந்தார்கள் ஆண்கள் எவருமே இல்லாத ஒரு இசை நிகழ்வு இந்த வேளையிலே இடம் பெற்றது. வசீகரா என்ற பாடலை நயனியும் பபிதாபம் இணைந்து பாடினார்கள் மாயி புல்லாங்குழலை இசைக்க, சௌமியா டிரம்ஸ் இசைக்கருவியை இசைக்க, காவியா தோல் கருவியை இசைக்க, கஸ்தூரி கிட்டார் இசைக்க இப்படி எல்லோருமே ஒவ்வொரு இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு பாடினார்கள். அந்த பாடல் எல்லோருடைய கரகோஷத்தையும் பெற்றுக் கொண்டது. அந்த பெண்களுக்கு வாழ்த்துக்கள் தனித்து நின்று ஒரு இசை நிகழ்வை தரலாம் என்ற ஒரு எடுத்துக்காட்டாக அவர்கள் இருந்தார்கள் நிச்சயமாக நாளை ஒரு பெண் இசை குழு கூட சிட்னியிலே உருவாகலாம் என்று நாங்கள் நம்புவோமாக.


இப்படி பல பாடல்கள் இடம்பெற்றுக் கொண்டே சென்றது கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்திலிருந்து கண்டு கொண்டேன் என்ற பாடல் பபிதா குமார் ஆகியோர் பாடினார்கள் அவர்கள் பாடிய போது கைரவன் என்ற ஒரு சிறுவன் அதற்கு கிட்டார் வாசித்து அசத்தியிருந்தார் அவருடைய திறமையை நிச்சயமாக பாராட்டத்தான் வேண்டும். கைரவன் பல மேடைகளில் தோன்ற வேண்டும்.
பின்பு கண்ணம்மா கண்ணம்மா என்ற பாடல் பிரகாஷ் சௌமியா இணைந்து பாடினார்கள் கேட்கவும் வேண்டுமா அருமையான இரண்டு பாடகர்கள் இணைந்து அசத்தி விட்டார்கள். தொடர்ந்து குத்து பாடல்கள் இடம்பெற்றது சொப்பன சுந்தரி என்ற பாடல், நான் ஆட்டோக்காரன் என்ற பாடல் இப்படி இறுதியில் சில குத்துப் பாடல்கள் இடம் பெற்றது. மிக அருமையான ஒரு இசை நிகழ்வை இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் வழங்கியிருந்தது பாராட்டுக்குரியதாக இருந்தது மிக நல்ல ஒரு நிகழ்வை ரசித்த நிறைவோடு தான் திரும்பி இருந்தோம்.


இருந்தாலும் ஒரு சில மைனஸ்களை பற்றியும் பேசத்தானே வேண்டும் இங்கே இடம்பெறுகின்ற நிகழ்வுகளுக்கு பெரும்பாலும் இசை நிகழ்வாக இருந்தால் என்ன அல்லது மேடை நிகழ்வுகளாக இருந்தால் என்ன அங்கே செல்வதில் 95% மானவர்கள் வயது முதிர்ந்தவர்கள் அல்லது 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் என்று கூறலாம் இங்கே இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் இளையவர்கள் அவர்களுக்கு குத்து பாட்டுகள் புதிய வேகமான பாடல்கள் பிடித்திருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை ஆனால் அவர்கள் நிச்சயமாக வந்திருக்கும் சபையோர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் .எதிர்காலத்திலே நிச்சயமாக சிந்திக்க வேண்டும் ஏனென்றால் இந்த புதிய வேகமான பாடல்களையோ குத்துப் பாடல்களையோ கேட்பதற்குரிய இள வயதினர் இந்த நிகழ்வுகளுக்கு வருவதில்லை ஆகவே வந்திருப்பவர்களுக்கு பழைய பாடல்கள் அதிகமாக பிடிக்கும் புதிய பாடல்களிலும் மெலோடி அல்லது மெல்லிய இசை உரிய பாடல்கள் கூடுதலாக பிடிக்கும், குத்து பாடல்களும் பாடுவதில் எந்தவிதமான தவறும் இல்லை ஆனால் அதிகமான பாடல்களை அப்படியான பாடல்களை கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


அதேபோல் இப்படியான இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்ற சங்கங்களுக்கு ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன் மத்திய கல்லூரி இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கின்றது. அவர்களுடைய இசை நிகழ்ச்சியிலே எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இடையிலே எந்தவிதமான விடயங்களும் செய்யாமல் தனியே இசை நிகழ்ச்சியை மட்டும் சிறப்பாக செய்து முடிப்பார்கள். அது நுழைவுச் சீட்டை எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.


பாடல்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டு அதிக நேரத்தில் கதிரையிலே உட்கார்ந்திருக்காமல் மூன்று மணித்தியாலங்கள் அல்லது மூன்று மூன்றே கால் மணித்தியாலங்கள் இருந்து நிகழ்ச்சியை மட்டும் கேட்டுவிட்டு போகின்ற அந்த திருப்தி மிக அருமையாக இருக்கும். எங்களுடைய பண்புகள் கௌரவிப்பு, கௌரவிப்புக்கள் இருந்தாலும் கூட மிகச் சுருக்கமாக அவற்றை செய்தால் நன்றாக இருக்கும் என்பது பலருடைய கருத்து என் கருத்து மட்டுமல்ல பலரோடு பேசிய போது அவர்கள் குறிப்பிட்ட விடயம். இதை கவனத்தில் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய அபிப்பிராயமாக இருக்கின்றது.


இந்த நிகழ்ச்சியை பார்த்த போது பலருக்கு ஒரு ஏக்கம் இருந்தது இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த கே பிரகாஷ் எஸ்பிபியின் உடைய குரலை அப்படியே கொண்டிருக்கின்றார் அவருக்கு இன்னும் சந்தர்ப்பத்தை கொஞ்சம் கூட கொடுத்திருந்தால், அவரோடு ஒவ்வொரு இங்கே பாடுகின்ற பெண் பிள்ளைகளையும் சேர்த்து பாடல்களை கொடுத்து இருந்தால் இன்னும் மிக நன்றாக இருந்திருக்கும் என்பது பலருடைய கருத்து.


இப்படி ஒரு நிகழ்வைத் தந்த சிட்னியில் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தை பாராட்டுவோம்.


No comments: