இலங்கைச் செய்திகள்

 "கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளது" செய்தியில் உண்மையில்லை

ஒரு தசாப்தத்திற்குப் பின் கோப் குழு முன் ஆஜரான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம்

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய வர்த்தமானி வெளியானது

ஜனாதிபதித் தேர்தல் நாளைய தினம் நடத்தப்பட்டாலும் ரணிலுக்கே வெற்றி



 "கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளது" செய்தியில் உண்மையில்லை


குறித்த குற்றச்சாட்டை மறுத்த வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந் உண்மையும் இல்லை என்றும் திரிபுபடுத்தப்பட்டு தவறான கருத்தை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்தி பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டிலே இங்கு ஜனாதிபதி மாளிகை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஆட்சி மாற்றத்துடன் 2015 இல் இந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக வடக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் திசானாயக்க  தெரிவித்தார். கடற்படையின் கீழே இந்த மாளிகை மற்றும் கோவில்  உள்ள பிரதேசம்  இருந்ததோடு 2022 இல்  உத்தியோகபூர்வமாக இந்தப் பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.  29 ஏக்கர் முழு நிலப்பகுதியில் ஒரு பகுதியிலே மாளிகை அமைந்துள்ளதோடு   மாளிகை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் கடற்படை அங்கு பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பத்திரிகை செய்தி தவறானது என்றும் இது தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் கோவில் அழிக்கப்பட்டு மாளிகை கட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தி  தொடர்பில் கருத்துத் தெரிவித்த தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவஶ்ரீ, சிவன் கோவில் ஒன்று  அங்கிருந்ததாகவும் அண்மையில் கிருஷ்ணன் கோவில்  நிர்வாகிகள் அந்த கோவில் இருந்த பகுதிக்கு கடற்படையினருடன் சென்றதாகவும் தெரிவித்தார். சிவன் கோவில் இருந்த இடத்தில் அன்றி அதற்கு அருகிலே ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் 1990 வரை சிவன் கோவிலில் பூஜை இடம்பெற்றதாகவும் எக்காலப்பகுதியில் கோவில் உடைந்தது என்ற தகவல்  தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.தனியாருக்கு சொந்தமான காணி சுவீகரிக்கப்பட்டு அந்த இடத்திலே ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதாகவும் கோவில் காணி அதற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் கோவிலின்  பல பகுதிகள் சேதமடைந்து கோவில் இருந்ததற்கான அடையாளங்கள்  அங்கிருப்பதாக  கிருஷ்ணன் கோவில் பரிபாலன சபை உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். கிருஷ்ணன் கோவிலின் சில பகுதிகளும் சேதமாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர் மாளிகை உட்பட சுற்றியுள்ள  முழுமையாக காணி நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது  என்றும் குறிப்பிட்டார்.

வடபகுதிக்குப் பொறுப்பான கடற்படை கட்டளைத்தளபதி  அத்மிரல் அருண தென்னகோன் இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில், மாளிகையின் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக கடற்படை அங்கு இருப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே இந்த பிரதேசம் காணப்படுவதாகவும் தெரிவித்தார். கடற்படை பிரதான தளமும் இதற்கு அருகிலே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ் இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர்  ஜெனரல் சொர்ண போதொட்ட குறிப்பிடுகையில், குறித்த பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகைக்கான தேவையொன்று இல்லை என்பதை  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அண்மையில் மேற்கொண்ட யாழ்ப்பாண  விஜயத்தின்போது குறிப்பிட்டிருந்தார். இந்த மாளிகை  சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறந்த தரத்திலான ஹோட்டல் ஒன்றாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர்  யோசனை   முன்வைத்திருந்தார்.  யாழ்ப்பாணம் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் இந்த பிரதேசம் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.இராணுவம் அங்கு எந்த வித நிர்மாணங்களை மேற்கொள்ளவோ அழிக்கவோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 





ஒரு தசாப்தத்திற்குப் பின் கோப் குழு முன் ஆஜரான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம்

முகாமைத்துவ, கட்டமைப்புக் குறித்த முறைகேடுகள் தொடர்பில் கோப் குழு கடும் அதிருப்தி
- 5 முக்கிய பணிப்புரை மற்றும் பரிந்துரைகள் முன்வைப்பு

  • நிறுவனம் சார் தகவல்கள் காணாமல் போனமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக உடனடியாக விசாரணை நடத்தவும் – இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை
  • நிதியமைச்சுடன் இணைந்த உள்ளகக் கணக்காய்வாளரைக் கொண்ட ஒரு சுயாதீன குழுவை நியமித்து 3 வாரங்களுக்குள் இந்த நிறுவுனம் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்கப் பரிந்துரை
  • நிறுவனத்தின் பொது முகாமையாளரின் நடவடிக்கை குறித்து தனியான விசாரணை நடத்தி, ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையொன்றை அளிக்குமாறும் நிதி அமைச்சுக்கு உத்தரவு
  • இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனது கூட்டுத் திட்டத்தை விரைவில் முன்வைக்குமாறு அறிவுறுத்தல்
  • கூட்டுத்தாபனத்தில் காணப்படும் 5 வெற்றிடங்களை உடனடியாக நிரப்பப்படுவதை உறுதிப்படுத்தவும் கோப் குழு பரிந்துரை

இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் (07) கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழு, கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ மற்றும் கட்டமைப்புக் குறித்த முறைகேடுகள் தொடர்பில் முழுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது.

சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் ஏற்றுமதியாளர்கள், வங்கிகள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் கோப் குழு முன்னிலையில் ஆஜராகியிருப்பதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதை எடுத்துக் காட்டியிருந்த கோப் குழு, பொறுப்புவாய்ந்த நிறுவனம் என்ற ரீதியில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு உதவிகள் வழங்கப்படாமை குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

10 ஆண்டுகளுக்கும் மேலாகப் கூட்டுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை என்றும், இத்திட்டம் தயாரிக்கப்படாத நிலையில் இந்நிறுவனத்தின் நிர்வாக செயல்முறை எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளரிடம் கோப் குழு கேள்வியெழுப்பியது. அதனடிப்படையில், மிக விரைவில் கூட்டுத் திட்டத்தை முன்வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் குழு வருகைதந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

மேலும், நிதி உட்பட கூட்டுத்தாபனத்தின் 05 முக்கிய பதவிகள் ஏன் வெற்றிடமாக இருக்கின்றன என்பது குறித்தும் கோப் குழு கேள்வியெழுப்பியது. நிறுவனத்தை வழிநடத்துவதில் பொது முகாமையாளரின் செயற்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்த கோப் குழு,  அந்தந்த அதிகாரிகளின் புறக்கணிப்பு மற்றும் செயலற்ற தன்மை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கிச் செல்வதில் நிறுவனம் தோல்வியுற்றிருப்பதாகத் தெரிவித்தது.  எனவே, ஸ்திரத்தன்மை மற்றும் சரியான நிறுவன பொறிமுறையை உறுதிப்படுத்த கூட்டுத்தாபனத்தில் காணப்படும் வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

பாராளுமன்றம், கணக்காய்வாளர் நாயகம் மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஆகியவற்றுக்குப் பொறுப்புக் கூற இலங்கை ஏற்றுமதிக் கடன் கூட்டுத்தாபனம் தவறியமையையும் கோப் குழுவின் தலைவர் கண்டித்தார்.

அரசாங்கத்தின் முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் எவ்வாறு காணாமல் போயுள்ளன என்றும், இந்தச் செயல்களுக்கு யார் பொறுப்பு என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இலங்கை ஏற்றுமதிக் கடன் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறும் முறைகேடுகளைக் கண்காணிப்பதில் நிதி அமைச்சின் அக்கறையின்மை குறித்து கவலையை வெளிப்படுத்திய கோப் குழுவின் தலைவர், நிறுவனத்தின் தகவல்கள் காணாமல் போனமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த விடயத்தில் நிறுவனத்தின் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

அத்துடன், நிதி அமைச்சுடன் இணைந்த உள்ளகக் கணக்காய்வாளர் அடங்கிய சுயாதீன குழுவை நியமித்து, கூட்டுத்தாபனத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. நிறுவனத்தின் பொது முகாமையாளரின் நடவடிக்கைகள் குறித்து தனியாக விசாரணை நடத்தி ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு முன்னர் குழுவிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நிதி அமைச்சுக்குப் பரிந்துரை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, ஜனக வக்கும்புர, லொஹான் ரத்வத்த, இந்திக்க அனுருத்த ஹேரத், சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, இரான் விக்கிரமரத்ன, நிமல் லான்சா, எஸ்.எம்.எம்.முஷாரப் சஞ்சீவ எதிரிமான்ன, ஜகத் குமார சுமித்ராராச்சி, (மேஜர்) சுதர்சன தெனிபிட்டிய, பிரேம்நாத் சி.தொலவத்த, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, சாணக்கியன் இராசமாணிக்கம், மதுர விதானகே ஆகியோர் கலந்து கொண்டனர்.   நன்றி தினகரன் 




இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

- முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன்

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன் இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வைப்பதற்கான பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சினால் நான் நியமிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய நியமனம் இலங்கையின் பொருளாதார மீட்பின் ஒரு மிகப் பெரும் பங்காக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள். ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் உலக நாடுகளிலுள்ள இலங்கை புலம்பெயர்ந்தோரை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். 

இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாடுகளிலுள்ளவர்களின் முதலீடுகள் மிக முக்கியமானது. இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியால் சர்வதேச முதலீட்டார்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டினர்.

தற்போது ஜனாதிபதி அவர்களின் பொருளாதார மீட்புக்கான திட்டங்களால் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கின்றது. 

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உலக நாடுகளிலுள்ள சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களை இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவே எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  

இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள அனைத்து சர்வதேச முதலீட்டாளர்களையும் இணைத்து இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கான முயற்சியை எவ்வித தடையுமின்றி முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன்.

சர்வதேச முதலீட்டார்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்னர் இலங்கையில் முதலீடு செய்வதற்கான பின்னணியை உருவாக்க வேண்டும். 

அதற்கு முன்னர் இலங்கையில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய முடியும் என்ற நம்பிக்கையை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம். முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு துறை மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளோம்.


அத்தோடு, தன்னிறைவு பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் தயாரித்து வருகின்றோம்.

இதற்கு மேலதிகமாக, இலங்கையில் கல்வி , விவசாயம்  , மீன்பிடி , தொழில்நுட்பத்துறை என பலத்துறைகளில் முதலீடு செய்யும் வகையிலான திட்டங்களை தயாரித்துள்ளோம். 

இலங்கையில் சர்வதேச முதலீடுகள் அதிகரிக்கும் போது வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இதனால்;, தற்போது நாட்டை விட்டு வெளியேறும் இளம் தலைமுறையினருக்கு இந்த நாட்டிலேயே இருந்து வேலை செய்வதற்கான  வாய்ப்புகள் ஏற்படும்.

உதாரணமாக, கல்வித்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும் போது, அதிக பட்டதாரிகளை உருவாக்குவதற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களை வழங்க முடியும். சர்வதேச பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்பத்தி கொடுப்பதுடன், படித்தப் பின் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் நாங்களே ஏற்படுத்தியும் கொடுக்க திட்டங்கள் வகுத்துள்ளோம்.

தொழிற்கல்வி திட்டங்களையும் பயிற்றுவிக்கும் செயற்பாடுகளையும் அறிமுகம் செய்யவுள்ளோம். மேலும் தகவல் தொழில்நுட்பத்தில் Off Shore  நிறுவன வசதிகளையும் , நாங்கள் அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக வருமானத்தை ஈட்டும் முதலீட்டு திட்டங்களையும் தயாரித்து வருகின்றோம். 

அத்தோடு, முதலீட்டாளர்களுக்கான திட்டங்களை இனங்காட்டிக் கொடுப்பதுடன், திட்ட அனுமதி, திட்ட வரைபுகளையும் பெற்றுத் தருவதற்கான ஒழுங்குகளை செய்து வருகிறோம். 

எனவே, சர்வதேச நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் மாத்திரமின்றி சர்வதேச முதலீட்டாளர்களையும் இலங்கையில் முதலீடு செய்யுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.  

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து  மீண்டு வரும்  இச்சந்தர்ப்பத்தில்   சர்வதேச முதலீடுகள் இலங்கை பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தும் என்பதே எமது  எதிர்பார்ப்பாகும். 

இதற்காக இலங்கையின்  அனைத்துத் துறைகளிலும் பாதுகாப்பான, வருவாயை அதிகரிக்கக் கூடிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம். இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்தி, மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் கைகொடுக்க வேண்டும். கைகொடுப்பார்கள் என நான் திடமாக நம்புகிறேன். 

மற்றும் இந்தப்பணிகளில்  ஊடகத்துறை என்பது மிகப்பெரிய பங்களிப்பை செய்கின்றது. எமது இந்த பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க உங்களின் ஆதரவை என்றும் எதிர்பார்க்கின்றேன். நன்றி.

நன்றி தினகரன் 




உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய வர்த்தமானி வெளியானது

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்தார்.

நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கடந்த 9ஆம் திகதி இடம்பெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, தேர்தலுக்கான தினம் தொடர்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு , மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.  நன்றி தினகரன் 




ஜனாதிபதித் தேர்தல் நாளைய தினம் நடத்தப்பட்டாலும் ரணிலுக்கே வெற்றி

பாதாளத்துக்கு தள்ளப்பட்ட நாட்டை மீட்டு புத்துயிர் கொடுத்தவர் அவர் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உரை

நாளையே நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அப்போதும் வெற்றி பெறுவார் என, அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வேண்டுமென்றால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மட்டும் மாற்றம் ஏற்படலாம். ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே மக்களால் தெரிவு செய்யப்படுவார் எனவும், அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சர்வஜன வாக்குரிமை மீதான சபை ஒத்திவைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"எனக்கு முன்னர் சபையில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இது போன்ற காலத்தில் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

நாம் ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த வருடம் இது போன்ற தினத்தில் விவசாயிகள் மிகவும் கஷ்டத்துக்குள்ளாகி உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையில் காணப்பட்டார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிறந்த வேலைத்திட்டங்களால் அந்த நிலையை தற்போது மாற்றியுள்ளார்.

எரிபொருள், எரிவாயு, மருந்துத் தட்டுப்பாடு, பால்மாத் தட்டுப்பாடு, 13 மணிநேர மின் துண்டிப்பு என அந்தக் கஷ்ட காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனாதிபதி சிறந்ததொரு நிலையை தற்போது நாட்டில் ஏற்படுத்தியுள்ளார் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.

அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த வருடம் உணவுப் பொருட்களின் பண வீக்கம் 100 வீதமாக அதிகரித்திருந்தது. அந்த நிலையில், வர்த்தகர்கள் 300 வீதம் பொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தார்கள். 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு பொருள் 400 ரூபா வரை அதிகரித்திருந்தது. இத்தகைய மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு என்ன செய்வது என்ற நிர்க்கதியான நிலையில் இருந்த போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று தற்போது இந்த நிலைமைக்கு கட்டியெழுப்பியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் நாடு உள்ள போது, எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்? தமது அரசியல் நோக்கங்களை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.

இதேவேளை, "தவறுகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்ட வேண்டும். 1991ஆம் ஆண்டு இந்திய நாட்டுக்கும் இதே நிலைமையே ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் அனைத்துமே அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதால், இன்று இந்தியா உலகின் ஐந்தாவது வளர்ச்சியடைந்த நாடாக காணப்படுகிறது. அவ்வாறான சிந்தனை எமது அரசியல் தலைவர்களுக்கு கிடையாது என்பதே கவலையான விடயம்.

நாட்டில் இதுவரை சட்டங்கள் உபயோகிக்கப்பட்டாலும், மக்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே சட்டங்கள் உபயோகிக்கப்பட்டதே தவிர, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சட்டங்கள் பயன்படுத்தப்படவில்லை.

நாட்டில் யுத்தம் நடந்த காலத்திலும் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 40 வீதமாக அதிகரித்திருந்தது. இன்று நாட்டில் யுத்தம் கிடையாது என்றாலும், அதில் அரைவாசியாக 20 வீதமாக எமது ஏற்றுமதி குறைவடைந்துள்ளது. முன்னர் தவறான பொருளாதார தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதால்தான், இன்று எமது தலைமுறை கஷ்டப்படுகிறது.

அரசாங்க நிறுவனங்களின் நட்டத்தை நாம் பார்த்தால், தற்போது பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாத்திரம் ஆயிரம் பில்லியன்கள் நட்டத்தில் உள்ளது. அரசாங்கம் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் ஒதுக்கும் நிதியை சேர்த்துப் பார்த்தாலும், இந்தளவு நிதி வராது. இத்தகைய நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக கடன் வாங்கி கடன் வாங்கி உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. மின்சார சபை 300 பில்லியன் ரூபா கடனைக் காட்டுகிறது. அத்துடன் 100 பில்லியன் ரூபா நஷ்டமும் அடைந்துள்ளது. எனினும், முறைகேடுகளை விடுவதற்கு அவர்களுக்கு மனமில்லை. இந்த நட்டம் எமது சுகாதாரத்துறையின் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் விட அதிகமானது. இதனை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சர் கஞ்சன விஜேசேகர எடுத்த தீர்மானத்தை நாம் வரவேற்கின்றோம்.

2019ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார நெருக்கடி, கொவிட் என பல சர்வதேச பிரச்சினைகள் காணப்பட்டன. சர்வதேச நாடுகளில் யுத்தங்களும் இடம்பெற்றன. அத்தகைய சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் விட்ட பெரும் தவறு வரியைக் குறைத்ததே. தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளார். எனினும், நாட்டில் 20 வீதமாகவுள்ள பணக்காரர்கள் மீதே இந்த வரி சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வறுமைக்கோட்டில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதே எமது நம்பிக்கை.

கடந்த மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு 16,000 மில்லியன் ரூபா செலவாகவுள்ளது. இதனால் நாட்டில் என்ன மாற்றம் ஏற்படப் போகின்றது?

நாம் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மக்கள் ஆணையை அறிந்துகொள்ள ஜனாதிபதித் தேர்தலை நாளையே நடத்தினாலும் அதனை நாம் ஆதரிப்போம்.

நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் வெற்றி பெறுவார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மட்டும் மாற்றம் ஏற்படலாம்.

தனி மனிதனாக இருந்துகொண்டு பாராளுமன்றத்திலும் தனக்கான பலத்தை ஏற்படுத்தி நாட்டை ஏதோவொரு வகையில் முன்னேற்றப் பாதைக்கு ஜனாதிபதி கொண்டு செல்கின்றார். நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியதும் எந்த தேர்தலையும் நடத்தலாம்" எனவும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

நன்றி தினகரன் 





No comments: