முதல் சந்திப்பு தன்முனைப்பற்ற கலாரசிகை பராசக்தி சுந்தரலிங்கம் முருகபூபதி


இலக்கியம்,  நாடகம், நடனம்,  கூத்து, இசை , ஓவியம், சினிமா, ஒளிப்படம், கைவினை முதலான துறைகளில் எவர் ஈடுபட்டாலும், அவர்களின் செயற்பாடு சமூகப் பயன்மிக்கதாகவிருந்தால்தான், அவர்களின் பெயர் நிலைத்து நிற்கும்.

அவ்வாறு நிலைத்திருப்பதற்குரிய அங்கீகாரத்தை தருபவர்கள் கலா ரசிகர்களே. ரசிகர்கள் இல்லையெனில், கலைஞர்களும் இல்லை.

ஆனால்,  கலைஞர்களை வாழவைக்கும் கலா ரசிகர்கள் பற்றி யாராவது பேசுகிறார்களா..? எழுதுகிறார்களா…?

சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் பற்றியும் அதில் நான் சந்தித்த ஒரு கலாரசிகை பற்றியும் இந்த முதல் சந்திப்பு தொடரில்  குறிப்பிடுவதற்கு முன்வந்துள்ளேன்.

நான் இலக்கிய உலகில் ஈடுபடத்தொடங்கியிருந்த  1970 


காலப்பகுதியில், என்னை அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஒவ்வொரு மாதமும் கொழும்புக்கு வருவதற்கு முன்னர், தனது வருகையை ஒரு தபால் அட்டையில் எழுதி அனுப்பிவிடுவார்.

புறக்கோட்டை பழைய சோனகத்தெருவில் ஒரு வர்த்தக நிலையத்திற்கு  வடக்கிலிருந்து  பொருட்கள்  ஏற்றிவரும்  லொறியில்  மல்லிகை பிரதிகள் பொதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனைப் பெற்று , கொழும்பில் விநியோகிக்கவும் எனவும்  அதில் எழுதியிருப்பார்.

1975 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் வெளியான மல்லிகை பிரதிகளையும்  அவ்வாறே கொழும்பில் விநியோகித்தேன்.  அவ்விதழின் ஆசிரியத்தலையங்கம், அனைத்துலக மாதர் ஆண்டும் நவ இலங்கையின் உதயமும் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது.  அந்த ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை மாதர் ஆண்டாக பிரகடனம் செய்திருந்தது.

மல்லிகையில் சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆக்கம், இவற்றுடன் சோவியத் கலை, இலக்கிய, அரசியல் செய்திக்குறிப்புகளும்  இடம்பெற்றிருக்கும்.

அந்த ஏப்ரில்  இதழில் கைப்பணியில் இது ஒரு கலைப்பணி என்ற தலைப்பில் ஒரு பக்கத்தில் சில குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. எழுதியவர் பரா. சுந்தரலிங்கம் எனப்பதிவாகியிருந்தது.

எழுதியவர் ஆணா, பெண்ணா என்பதும் தெரியவில்லை. சொல்லப்பட்டிருந்த செய்தி முக்கியமானது.

அதனை எழுதியவர் ஒரு திருமண வைபவத்திற்கு சென்றிருக்கிறார்.  அங்கு  வந்திருந்த விருந்தினர்களுக்கு    திருமண வைபவம் முடிந்ததும் சுவையான கேக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். ஆனால், எதில் என்பதுதான் அதிசயம். வழக்கமாக அழகிய வண்ணக் காகிதத்தில் சுற்றி, அதற்குப்பொருத்தமான அலங்கார வடிவமைப்புக்கொண்ட சிறிய காகிதப்பெட்டியில்தானே கொடுத்திருப்பார்கள் என நினைப்போம். ஆனால், அதுதான் இல்லை. அன்று விருந்தினர்களுக்கு சுவையான கேக், ஒரு சின்னஞ்சிறிய பனைஓலைக்குட்டான் பெட்டிக்குள் வைத்து தரப்பட்டிருக்கிறது.

வழக்கமாக என்ன  நடக்கும், அதனை விநோதமாகப்பார்த்து சிரித்துவிட்டு, கேக்கை சாப்பிடுவோம்.

ஆனால், அந்த அழகிய  கைவினை பற்றிய அறிமுகத்தையும் எழுதி,  உள்நாட்டில் பனை அபிவிருத்திக்காக  எமது  சமூகம்  எவ்வாறு இதுபோன்ற  சிறிய விடயங்களிலும் அக்கறை செலுத்தவேண்டும் எனவும்  சுட்டிக்காண்பித்து, விழிப்புணர்வூட்டும் வகையிலும் எழுதியிருந்தார், பரா. சுந்தரலிங்கம்.

அந்த ஒரு பக்க பதிவைப்பற்றி ஜீவாவிடம்  “ எழுதியவர் ஆணா…?  பெண்ணா…? எங்கே இருக்கிறார்..?  “ எனக்கேட்டேன்.   “ வாரும் அழைத்துச்சென்று காண்பிக்கின்றேன்.  “ என்றார்.

ஒருநாள் மாலை ஜீவா என்னை கொழும்பு  பாமன்கடைப்பக்கம் ஒரு வீதியில் ஒரு  அழகான மாடி வீட்டுக்கு  அழைத்துவந்தார்.  அங்கிருந்தவர்கள் கலை, இலக்கிய, வானொலி ஊடகத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள்.


சுருக்கமாகச் சொன்னால் அவ்வில்லம் ஒரு கலாநிலையம்தான்.  பேராசிரியர்கள் மௌனகுரு – சித்ரலேகா தம்பதியர், கவிஞர் இ.  சிவானந்தன், இலங்கை வானொலி -  லண்டன் பி.பி. சி.  புகழ்  “ அப்பல்லோ   “ சுந்தா சுந்தரலிங்கம் தம்பதியர். இவர்களின் செல்வப்புதல்வி சுபாஷினி.

அவர்களில் ஒருவரை  “ பூபதி நீர் கேட்டிருந்த பரா. சுந்தரலிங்கம் இவர்தான்.  “ எனச்சொன்னவாறு அந்த ஏப்பிரில் மாத இதழை அவரிடம் ஜீவா கையளித்தார்.

கனிவான அந்த முகத்தினை அன்று முதல்,  கடந்த 48 வருடகாலமாக பார்த்து வருகின்றேன்.

அந்த இல்லத்தின் முகவரி: 87 / 3 , பாமன்கடை  லேன்.

அங்கே எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டங்கள், மட்டுமன்றி கலை, இலக்கிய சந்திப்புகளும் அடிக்கடி நடந்தன.  மெளனகுரு தம்பதியரின் புதல்வன் சித்தார்த்தனை தவழும் பருவத்திலும், சுந்தா தம்பதியரின் புதல்வி சுபத்ராவை  சிறிய மாணவியாகவும் பார்த்தேன்.

சந்திப்புக்கு வருபவர்களை இன்முகத்துடன் உபசரிக்கும் பராசக்தி


அவர்கள்,  எம்மனைவருக்கும் பாசமுள்ள அக்கா.  ஆசிரியையாக பணியாற்றிய இவரது பெயரை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அக்காலப்பகுதியில் வெளியிட்ட தமிழ்ப்பாட  நூல்களிலும்  காணமுடியும்.

யாழ். வேம்படியில் இவர் பணியாற்றிய காலத்தில்,  இவரிடம்  கற்ற பல மாணவியர்கள் பின்னாளில்  பல துறைகளில் ஆளுமை மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர்தான்  இதழியல், வானொலி,  தொலைக்காட்சி  ஊடகவியலாளர் செல்வி கமலா தம்பிராஜா.

பராசக்தி சுந்தரலிங்கம் சிறந்த கலா ரசிகர்.  இவரது கணவர் எழுதிய மனவோசை நூலைப் படித்திருக்கிறீர்களா..? இலங்கை வானொலியின் சரித்திரத்தை தெரிந்துகொள்வீர்கள். அவர் பாராளுமன்றிலும் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.  ஆம்ஸ்ரோங் சந்திரனில் கால்பதித்தபோது, வானொலியில் அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க செய்தியை விவரணமாக தொகுத்து வழங்கியவர். அன்றுமுதல் அவர்  “ அப்பல்லோ சுந்தா  “ வானார்.

 “ காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்தே வாழ்ந்தவர்தான்  “ சுந்தாவின் துணைவியார் பராசக்தி. 

இவரது குடும்பமே ஒரு கலைக்குடும்பம்தான். இக்குடும்பத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், வானொலி ஊடகவியலாளர்கள் இடம்பெறுகின்றனர்.

இவரது இரண்டு சகோதரிகளும் எழுத்தாளர்கள்தான். 

ஒருவர் திருமதி கனகேஸ்வரி நடராஜா .  கனடாவில் வசிப்பவர். கல்வித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று   ஆசிரியராகப் பணியாற்றியவர்.   கனடாவில்  நீண்டகாலமாக வெளியாகும்  தமிழர் தகவல்   இதழில் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.



மற்றவர்
திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம்.  இவர் தமிழில் முதுகலை பட்டம்  பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில்  விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.  தற்போது  அவுஸ்திரேலியா கன்பராவில்  இருக்கிறார்.   எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கன்பராவில் நடத்திய இலக்கிய சந்திப்புகளில் உரையாற்றியிருப்பவர்.  அத்துடன் அங்கிருந்து வெளியாகும் காவோலை இதழிலும் எழுதுபவர். இவரது கணவர் கணேசலிங்கமும்  
எழுத்தாளர்தான்.  கவிஞர் ,  சைவ சித்தாந்த நூல்கள் பல எழுதியுள்ளார்.

மற்றும் ஒரு சகோதரி திருமதி சிவசக்தி பரிமளநாதனும் பட்டதாரி.   இவர் சிட்னியில் வசிக்கிறார்.  மொழிபெயர்ப்பாளர். இவரது கணவர் பரிமளநாதன்  சிறந்த நாடக, கூத்து கலைஞர்.  சிட்னி இலக்கியப்பவர்  அமைப்பில் இணைந்திருந்தவர்.

பரா. சுந்தரலிங்கம்  அவர்களின்  நான்கு தம்பிமார் எழுத்துத் துறையில்  ஈடுபடாவிட்டாலும், இவர்களும் கலை, இலக்கிய ஆர்வலர்கள்தான்.

பராசக்தி – சுந்தரலிங்கம் தம்பதியரின்  ஏக புதல்வி சுபத்திராவின் கணவர் திரு. குலசேகரம் சஞ்சயன் சிறந்த வானொலி ஊடகவியலாளர். இவரது குரலை  சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும்  S B S வானொலி தமிழ் ஒலிபரப்பில் வாசகர்கள், நேயர்கள் கேட்டுவருகின்றனர்.

இவ்வாறு ஒரு கலை, இலக்கிய, வானொலி ஊடகத்துறையுடன்


நெருக்கமானவர்கள் மத்தியில் இயங்கிக்கொண்டிருப்பவர்தான்   திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள்.  சிட்னியில்  நடக்கும் கலை, இலக்கிய, இசை நிகழ்ச்சிகள்,  குறிப்பாக அரங்கேற்றங்கள் குறித்தெல்லாம் சிறந்த ரஸனைக்குறிப்புகளை எழுதிவருபவர்.

இந்த வயதிலும்,  தொடர்ச்சியாக வாசிப்பதிலும் ஈடுபட்டவாறு இணையம், வானொலி, தொலைக்காட்சி முதலானவற்றில் சமூகப்பயன்பாட்டுடன் வெளியாகும் விடயங்கள் பற்றி கூர்மையான அவதானத்துடன் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்பவர்.

புகலிடத்திலும் இலங்கையிலும் இந்தியாவிலும்  கலை, இலக்கிய, அறிவியல்  துறைகளில் தனக்கு வாசிக்கக் கிடைக்கும் நல்ல விடயங்களை எம்மில் பலருக்கு பகிர்ந்து,  எமது ரஸனையையும் ஊக்குவித்து வளர்க்கும் இயல்பினையும் கொண்டவர்.

இவரது கருத்துக்கள் எப்போதும் ஊட்டச் சத்தாகவே திகழ்பவை.  கடந்த 2022 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் தினம் வந்தபோது நான் வெளியிட்ட யாதுமாகி  நூலை திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களுக்கே சமர்ப்பணம் செய்துள்ளேன்.

----0---

 

 

 

No comments: