உலகச் செய்திகள்

பூகம்பத்தில் தப்பியோர் கடும் வெள்ளத்தில் பலி

பல பில்லியன் டொலர் ஆதரவு: வங்கிகளின் நெருக்கடி தளர்வு

உக்ரைனுக்கு போலந்து போர் விமானங்களை வழங்க முடிவு

நீண்ட தூர ஏவுகணையை பாய்ச்சியது வட கொரியா

 பிரெட்டி சூறாவளி: மாலாவியில் உயிரிழப்பு 326 ஆக அதிகரிப்பு


பூகம்பத்தில் தப்பியோர் கடும் வெள்ளத்தில் பலி

தென் கிழக்கு துருக்கியில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட இரு நகரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 14 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காணாமல்போயுள்ளனர்.

இதில் பூகம்பத்தில் இருந்து உயிர் தப்பி கூடாரங்கள் மற்றும் கொள்கலன்களில் வசித்துவந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். சன்லூபர் நகரில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டிருப்பதோடு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதியமானில் கொள்கலன் ஒன்றில் தங்கி இருந்த இரு குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மேலும் பலர் காணாமல்போயிருக்கும் நிலையில் நகரில் இருக்கும் கூடாரங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

துருக்கியில் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டை பூகம்பத்தில் 48,000 பேர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர்.   நன்றி தினகரன் 





பல பில்லியன் டொலர் ஆதரவு: வங்கிகளின் நெருக்கடி தளர்வு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பிரச்சினையில் உள்ள கடன்வழங்குனர்களுக்கு பல பில்லியன் டொலர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய வங்கி நெருக்கடி குறித்த அச்சம் தளர்த்தப்பட்டதோடு ஆசிய பங்குச் சந்தைகளும் மீட்சி பெற்றுள்ளன.

அமெரிக்காவில் பெரிய 11 வங்கிகள் இணைந்து சிக்கலில் மாட்டியிருக்கும் பெஸ்ட் ரிப்பப்லிக் வங்கிக்கு 30 பில்லியன் டொலர் மதிப்புடைய ஆதரவுத் திட்டத்தை அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து நேற்று (17) சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஹொங்கொங்கில் பங்குகள் உயர்ந்தன.

சிலிக்கன் வெல்லி வங்கி மற்றும் சிக்னெச்சர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் அண்மையில் முடங்கியதை அடுத்து அந்நாட்டின் பங்குச் சந்தையில் பதற்றம் ஏற்பட்டது.

தனியார் வங்கிச் சேவைகள், சொத்து நிர்வாகம் ஆகியவற்றில் ஈடுபடும் பெஸ்ட் ரிப்பப்லிக் வங்கி மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அடிபட்டது. அதன் பங்கு விலைகள் 30 வீதம் சரிந்தன.

வங்கி முடங்கிவிடுவதைத் தவிர்க்க ஜேபீமோர்கன் செஸ், அமெரிக்க வங்கி உள்ளிட்ட அமெரிக்காவின் பெரிய வங்கிகள் உதவ முன்வந்தன. இதனை அடுத்து பெஸ்ட் ரிப்பப்லிக் வங்கியின் பங்கு விலைகள் 10 வீதம் அதிகரித்தன.

மறுபுறம் சுவிட்ஸர்லந்தின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியான கிரெடிட் சுவிசின் பங்கு விலைகள் மீட்சி அடைந்துள்ளன. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியிடமிருந்து 54 பில்லியன் டொலர் கடனாகப் பெற அந்த வங்கி தீர்மானித்ததை அடுத்தே முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.   நன்றி தினகரன் 






உக்ரைனுக்கு போலந்து போர் விமானங்களை வழங்க முடிவு

உக்ரைனுக்கு போலந்து சோவியட் காலத்து நான்கு மிக் போர் விமானங்களை வழங்கவுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அந்த நாட்டுக்கு விமானங்களை வழங்கும் முதல் நேட்டோ நாடாக போலந்து இடம்பிடித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இவை அனுப்பப்படும் என்றும் மற்றவை எதிர்காலத்தில் கையளிக்கப்படும் என்றும் போலந்து ஜனாதிபதி அன்ட்ரெசஜ் டுடா தெரிவித்துள்ளார்.

இது போலந்தின் வான் பாதுகாப்பை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் ரஷ்யாவுடனான போரில் ஒரு திருப்புமுனையாக அமையாது என்று கூறப்பட்டுள்ளது. மற்ற நாடுகளும் இதனை பின்பற்றும் என்று தாம் எதிர்பார்ப்பதாக உக்ரைன் பாராளுமன்ற பிரதிச் சபாநாயகர் ஒலேனா கன்ட்ரட்யுக் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய விமானிகள் பயிற்சி பெற்றிருக்கும் சோவிட் காலத்து விமானங்களை உக்ரைனுக்கு வழங்க மற்ற நேட்டோ நாடுகளும் ஆலோசித்து வருகின்றன. எனினும் எப்–16 போன்ற நவீன போர் விமானங்களை தரும்படி உக்ரைன் முன்னதாக மேற்கத்திய நாடுகளை கேட்டிருந்தது.

உக்ரைனிய விமானிகளுக்கு நேட்டோ தரம் கொண்ட விமானங்களை செலுத்த பிரிட்டன் பயிற்சி அளிக்கிறது. எனினும் நீண்ட பயிற்சி காரணமாக நீண்ட கால தீர்வாகவே மேற்கத்திய ஜெட்களை வழங்க முடியுமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து உக்ரைனுக்கு ஜெட்களை அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்னதாக நிராகரித்திருந்தார்.   நன்றி தினகரன் 





நீண்ட தூர ஏவுகணையை பாய்ச்சியது வட கொரியா

பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம்

தென் கொரியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்த சந்திப்பு ஒன்றில் பங்கேற்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணையை நேற்று (16) வீசியுள்ளது.

நேற்றுக் காலையில் நீண்ட தூர ஏவுகணை ஏவப்பட்டதை ஜப்பான் மற்றும் தென் கொரிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சுமார் 1000 கிலோமீற்றர் தூரம் தாவி இருக்கும் இந்த ஏவுகணை ஜப்பானின் மேற்காக உள்ள கடல் பகுதியில் விழுந்துள்ளது.

வட கொரியா மற்றும் அமெரிக்க கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தி வரும் நிலையில் வட கொரியா ஒரு வாரத்துக்குள் நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனையாக இது உள்ளது. முன்னதாக அது கடந்த வாரம் வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமை குறுகிய தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது.விஜயம் மேற்கொண்டிருக்கும் தென் கொரிய ஜனாதிபதி யூ சூன் யியோல், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை நேற்று மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மறுபுறம் கொரிய தீபகற்பத்தில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நடைபெற்று வரும் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான கடற்படை பயிற்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரமாண்டாக இடம்பெற்று வருகிறது. இது வட கொரியாவின் ஆத்திரத்தை தூண்டியுள்ளது.

இதில் வட கொரியா வீசும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமெரிக்காவின் தலை நிலம் வரை செல்லக்கூடிய திறன்படைத்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






 பிரெட்டி சூறாவளி: மாலாவியில் உயிரிழப்பு 326 ஆக அதிகரிப்பு

மாலாவி நாட்டில் பிரெட்டி சூறாவளியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி தொடக்கம் இந்த புயலால் தெற்கு ஆபிரிக்க நாடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.

இரண்டாவது முறையாக இந்த சூறாவளி தெற்கு ஆபிரிக்க பகுதியை தாக்கியதை அடுத்து ஏற்பட்ட, கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் கொல்லப்பட்ட சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

பிரெட்டி சூறாவளி ஆரம்பத்தில் பெப்ரவரி பிற்பகுதியில் தெற்கு ஆபிரிக்க பிராந்தியத்தை தாக்கி பின்னர் மடகஸ்கார் மற்றும் மொசம்பிக் நாடுகளையும் சூறையாடியது. பின்னர் இந்திய பெருங்கடலை நோக்கி நகர்ந்த இந்த சூறாவளி மீண்டும் வலுப்பெற்று இரண்டாவது முறையாக கடந்த வாரம் தெற்கு ஆபிரிக்க பிராந்தியத்தை மீண்டும் தாக்கியது.

இதில் மொசம்பிக் நாட்டில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மடகஸ்காரில் மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர்.   நன்றி தினகரன் 






No comments: